தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர்
சட்டப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள ஆற்றல்சார் பள்ளியில்
வழங்கப்படும் மூன்று ஆண்டு எல்.எல்.பி. சட்டப் படிப்புக்கான (ஹானர்ஸ்) வயது
வரம்பு 25-இல் இருந்து 30-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மூன்றாண்டு சட்டப் படிப்புகளுக்கான வயது உச்ச வரம்பை
நீக்கி பல்வேறு உயர் நீதிமன்றங்கள் உத்தரவிட்டன. 2013-ஆம் ஆண்டில் இந்திய
பார் கவுன்சிலும் வயது உச்ச வரம்பு நிர்ணயிப்பதை கைவிட்டது.
இதன்படியும், தமிழகத்திலும் மூன்றாண்டு சட்டப்
படிப்புகளுக்கான வயது உச்ச வரம்பை முற்றிலுமாக நீக்குவதற்கு தமிழக அரசு
2015-இல் முயற்சி மேற்கொண்டது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தின்
மதுரை கிளையில் தொடரப்பட்ட பொது நல வழக்கில், தமிழக அரசு பிறப்பித்த ஆணையை
ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, அரசு சட்டக்
கல்லூரிகளில் 3 ஆண்டு எல்.எல்.பி. படிப்பில் சேர அதிகபட்ச வயது வரம்பு 30
எனவும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 35 என்ற பழைய நடைமுறையே அமலுக்கு
வந்தது. அதுபோல ஆற்றல்சார் பள்ளியில் வழங்கப்படும் 3 ஆண்டு எல்.எல்.பி.
ஹானர்ஸ் படிப்புக்கு அதிகபட்ச வயது 25 எனவும், எஸ்.சி., எஸ்.டி.
பிரிவினருக்கு 27 எனவும் நிர்ணயிக்கப்பட்டது.
இந்த நிலையில், 2016-17 கல்வியாண்டில் எல்.எல்.பி.
ஹானர்ஸ் படிப்பில் சேர அதிகபட்ச வயதை 30-ஆக உயர்த்தி பல்கலைக்கழகம்
அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதன்படி, பொதுப் பிரிவினர் 1-6-1986ஆம் தேதிக்குப்
பிறகு பிறந்தவராகவும், 1-6-2016 அன்று 30 வயது பூர்த்தி ஆகாதவராகவும்
இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 1-6-1981 தேதிக்கு பிறகு
பிறந்தவராகவும், 1-6-2016 அன்று 35 வயது பூர்த்தி ஆகாதவராகவும் இருக்க
வேண்டும்.







