ஒருங்கிணைந்த, பி.ஏ.,- பி.எட்., மற்றும் பி.எஸ்சி.,
-பி.எட்., நான்கு ஆண்டு படிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்குவது குறித்து
பரிசீலிக்கும்படி, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலுக்கு, சென்னை உயர்
நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.புதுச்சேரி, திருக்கானுார், வாழப்பாடியார்
நகரில் உள்ள, உஷா லட்சுமணன் கல்வியல் கல்லுாரி சார்பில் தாக்கல்
செய்யப்பட்ட மனு:
கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு உயர் கல்வி வழங்கும் வகையில், 1999 - 2000ல் எங்கள் கல்லுாரி துவங்கப்பட்டது. 2004 -
05ல் பி.எட்., படிப்புக்கு தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் அங்கீகாரம்
வழங்கியது. தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் விதிகளையும், புதுச்சேரி
பல்கலையின் நிபந்தனைகளையும் பூர்த்தி செய்து வருகிறோம்.
இந்நிலையில்,
ஒருங்கிணைந்த, பி.ஏ., - பி.எட்., மற்றும் பி.எஸ்சி., - பி.எட்., என்ற
புதிய நான்கு ஆண்டு கால படிப்பை துவங்க, அங்கீகாரமும், அனுமதியும் வழங்கக்
கோரி, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலுக்கும், புதுச்சேரி பல்கலைக்கும்
விண்ணப்பித்தோம்; எந்த பதிலும் இல்லை.
எனவே, ஒருங்கிணைந்த பி.ஏ., - பி.எட்.,
மற்றும் பி.எஸ்சி., - பி.எட்., நான்கு ஆண்டு படிப்புக்கு நிரந்தர
அங்கீகாரம் வழங்கும்படி, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலுக்கும்; நிரந்தர
இணைப்பு வழங்கும்படி, புதுச்சேரி பல்கலைக்கும் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு
அதில் கோரப்பட்டது.
மனுவை விசாரித்த நீதிபதி சத்தியநாராயணன்,
மனுதாரரான கல்லுாரி அளித்த விண்ணப்பத்தை பரிசீலித்து, ஜூன், 8க்குள் தகுந்த
உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலுக்கு
உத்தரவிட்டார்.