முருங்கைக்காய் சூப்
தேவையான பொருள்கள்:முருங்கைக்காய் = 20 கிராம்
பயத்தம் பருப்பு = 25 கிராம்
வெங்காயம் = 4
தக்காளி = 2
மிளகு = 5 கிராம்
பட்டை = 1
கிராம்பு = 1
தேங்காய் பால் = 100 மி.லி
நெய் = 1 ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு
தயாரிக்கும் முறை
வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும். மிளகை இடித்து பொடி செய்து கொள்ளவும்.
வாணலியில் சிறிது நெய் விட்டு காய்ந்ததும் முருங்கைக்காயை லேசாக வதக்கி இறக்கி தண்ணீர் விட்டு சுத்தம் செய்து கொள்ளவும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு சூடானதும் பயத்தம் பருப்பை போடவும். பருப்பு வெந்ததும் முருங்கைக்காயை போட்டு கொதிக்க விடவும். தண்ணீர் பாதியாக வற்றும் வரை கொதிக்க வைத்து இறக்கவும்.
பிறகு வாணலியில் சிறிது நெய்யை விட்டு காய்ந்ததும் வெங்காயத்தை போட்டு வதக்கி பிறகு பட்டை, கிராம்பு போட்டு கிளறி தக்காளி போட்டு வதக்கி பிறகு வேக வைத்த முருங்கைக்காய் கலவையை போட்டு அதனுடன் தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விடவும்.
பிறகு தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள் போட்டு கலக்கி கொதிக்க வைத்து வடிக்கட்டி சூடாக பரிமாறவும்.
சுவையான, ஆரோக்கியமான “முருங்கைக்காய் சூப்” .
மருத்துவ குணங்கள்:
முருங்கைக்காயில் வைட்டமின் A, வைட்டமின் C, கால்சியம், பொட்டாசியம், இரும்பு சத்து, புரதம், ஊட்டச்சத்து அதிகமாக உள்ளது.
உயர் இரத்த அழுத்தம், விருத்தி, வாதம் போன்றவவை குறையும். மேலும் முருங்கை தாய்ப்பாலை அதிகரிக்க உதவும்.
தலைவலி, ஜலதோஷம், இருமல், மூலம் ஆகியவை குறையும். விந்து குறைபாட்டை குறைத்து விந்து உற்பத்தியை அதிகரிக்கும். பெண்களின் உதிரப்போக்கை கட்டுப்படுத்தும்.
இவ்வாறு உடலுக்கு ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு நோயின்றி வாழ்வோம்.
*மாங்காய் நெல்லிக்காய் தொக்கு*
தேவையான பொருட்கள்:
மாங்காய் – 1 பெரியது
நெல்லிக்காய் – 200 கிராம்
மிளகாய்தூள் – 200 கிராம்
உப்பு – 11/2 டீஸ்பூன்
பெருங்காயம் - 1/2 டீஸ்பூன்
கடுகு – டீஸ்பூன்
வெல்லம்- சிறிதளவு
செய்முறை:
மாங்காய், நெல்லிக்காய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி மிக்சியில் அரைத்துக் கொள்ளவேண்டும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம் போட்டுத் தாளித்து, அரைத்த விழுதைப் போடவேண்டும்.
மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். நன்றாக வதங்கிய பின்பு சிறிதளவு வெல்லம் சேர்த்து இறக்க வேண்டும். இப்பொழுது சுவையான மாங்காய் நெல்லிக்காய் தொக்கு தயார்.
மருத்துவ பயன்கள்:
நெல்லிக்காய் இதயத்தை வலிமைப்படுத்தும்.
நெல்லிக்காய் குடல்புண், கண்நோய்கள், இரத்தப்பெருக்கு, நீரழிவு நோய் ஆகியவற்றை குறையச் செய்யும்.
நெல்லிக்காயில் புரதம், கொழுப்பு, சுண்ணாம்புச் சத்து, தாதுப் பொருள், இரும்புச்சத்து, வைட்டமின் சி ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளது.
மாம்பிஞ்சுகளை வெயிலில் காயவைத்து உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் பசியின்மை குறையும்.
*பழ தயிர் சாதம்*
பழ தயிர் சாதம் தயாரிக்க தேவையான பொருள்கள்:
அரிசி சாதம் – அரை கப்,
தயிர் – 2 கப்,
பச்சை மிளகாய் – 1,
கேரட்- 1,
மாங்காய் – 1,
மாதுளை – கால் கப்,
திராட்சை – 20,
ஆப்பிள் – 1,
கொத்தமல்லி – சிறிதளவு.
செய்முறை:
பச்சை மிளகாயை சிறியதாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
கேரட் மற்றும் மாங்காயை துருவிக் கொள்ள வேண்டும்.
ஆப்பிளை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
தயிருடன் தேவையான அளவு உப்பு சேர்த்து அதனை வேக வைத்த அரிசி சாதத்துடன் கலந்து வைக்க வேண்டும்.
பின்பு அதனுடன் சிறிதளவு கொத்தமல்லி மற்றும் நறுக்கிய பழ வகைகள் சேர்த்து நன்கு கிண்ட வேண்டும்.
இப்போது சூடான பழ தயிர் சாதம் தயார்.
மருத்துவக் குணங்கள்:
தயிரில் கால்சியம் மற்றும் புரோட்டின் சத்து அதிகம் நிறைந்துள்ளது,இதில் பழ வகைகள் சேர்ப்பதால் வைட்டமின் சத்தும் நிறைந்துள்ளது.
இவற்றில் புரோட்டின் சத்து அதிகம் நிறைந்துள்ளதால் இவை ஜீரண சக்தியை அதிகம் பெற்றுள்ளது.
தயிர் நன்மை தரும் பாக்டீரியாக்களை உண்டாக்குகின்றன.
நன்மை தரும் பாக்டீயாக்களை உண்டாக்குவதால் உடலில் உள்ள நோய்க்கிருமிகளை அழிக்கின்றன.
இவை வயிற்றுப் போக்கைக் குணப்படுத்தும் ஒரு அருமருந்தாகும்.
இவை நம் உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும்.
மேலும் இவற்றை ஒரு குளிர்பானமாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இத்தகைய நன்மைகள் நிறைந்த தயிரை நாம் அனைவரும் பருகுவோம்








