தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றபடி, புதிய பாடங்கள் இடம் பெறும் வகையில், சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும்' என, தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில், 2011ல் சமச்சீர் கல்வி பாடத்திட்டம் அமலானது. இந்த பாடத்திட்டம், 2008ல், உருவாக்கப்பட்டது;
எட்டு ஆண்டுகள் பழமையானது. ஆனால், மத்திய அரசின் இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., மற்றும் இந்திய இடைநிலை கல்வி சான்றிதழ் கவுன்சிலான, ஐ.சி.எஸ்.இ., பாடத்திட்டங்களில், ஆண்டுதோறும், புதுமை புகுத்தப்பட்டு, பாட வாரியமாக 'சிலபஸ்' மாற்றப்படுகிறது.அதனால், சி.பி.எஸ்.இ., அளவுக்கு, தமிழக மாணவர்கள் போட்டி போட முடியாமல் திணறுகின்றனர். இந்த பிரச்னை தொடர்பாக, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி பள்ளிகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகள் சங்கத்தின் மாநில தலைவர் ஜே.பி.கிறிஸ்டோபர் மற்றும் மாநில செயலர் கலை விஜயகுமார்ஆகியோர் தலைமையில், ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், தனியார் பள்ளிகளின் அங்கீகார பிரச்னை மற்றும் பாடத்திட்ட பிரச்னைகள் குறித்து விவாதித்தனர்.








