காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொழில்நுட்பக் கல்வி பயிலும்
சிறுபான்மையின மாணவர்கள், கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் இரா.கஜலட்சுமி வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாட்டில் வாழும் கிறிஸ்தவர், இஸ்லாமியர், சீக்கியர்,
புத்த மதத்தினர், பார்சி, ஜெயின் பிரிவைச் சார்ந்த தொழில்நுட்பக் கல்வி
பயிலும் மாணவ, மாணவியர்கள் தகுதி, வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை
திட்டத்தின் கீழ் 2016-17-ஆம் ஆண்டுக்கு உதவித்தொகை பெறுவதற்கு
www.scholarships.gov.in என்ற இணையதளத்தில்
விண்ணப்பிப்பதற்கான (புதியது, புதுப்பித்தல்) காலவரையரை அக்டோபர் மாதம்
31-ஆம் தேதி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த வகையில், மத்திய அரசின் மூலம் தமிழ்நாட்டைச் சேர்ந்த 2,279 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை கிடைக்கும்.
கல்வி உதவித்தொகை பெற தேவையான தகுதிகள்: மாணவ, மாணவிகள் கடந்த
ஆண்டு பொதுதேர்வில் குறைந்தபட்சம் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருத்தல்
வேண்டும். பெற்றோர், பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ. 2.50 லட்சத்துக்கு
மிகாமல் இருக்க வேண்டும். ஆதார் எண்ணை கண்டிப்பாக குறிப்பிட வேண்டும்.
மேற்கண்ட இணையதள முகவரியில் விண்ணப்பித்த பின், விண்ணப்பத்தை
பதிவிறக்கம் செய்து கையொப்பமிட்டு அத்துடன் மதிப்பெண் சான்றிதழ், வருவாய்
துறையிடமிருந்து பெற்ற மதத்துக்கான சான்று, கல்விக் கட்டணம் செலுத்திய
ரசீது, இருப்பிட முகவரி, வங்கிக் கணக்கு எண் உள்ளிட்ட ஆவணங்களை இணைத்து
அவர்கள் பயிலும் கல்வி நிலையங்களில் அக்டோபர் 31-ஆம் தேதிக்குள்
சமர்ப்பிக்க வேண்டும்.
கல்வி நிலையங்கள் மேற்படி விண்ணப்பங்களை அவ்வப்போது
பரிசீலித்து, தகுதிவாய்ந்த விண்ணப்பங்களை மட்டும் இணைய வழியில் அனுப்புதல்
வேண்டும்.







