சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதியை சேர்ந்த வினுப்பிரியா(21) என்ற பெண்ணின் புகைப்படம் ஆபாசமாக ‘மார்பிங்' செய்யப்பட்டு முகநூல் பக்கத்தில் வெளியானது. இதனால் மன வருத்தம் அடைந்த வினுப்பிரியா கடந்த 27-ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். வினுப்பிரியா புகைப்படத்தை தவறான நோக்கத்தில் வெளியிட்ட அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதுகாப்பாக வைப்பது எப்படி?
முகநூல் பக்கத்தில் செட்டிங் ஆப்ஷனில் செக்யூரிட்டி என்பதை கிளிக் செய்தால் அக்கவுன்ட் டிஆக்டிவேட் என்ற ஆப்ஷன் உள்ளது. இதை பயன்படுத்துவதன் மூலம் நமது முகநூல் பக்கத்தை மற்ற யாரும் பார்க்க முடியாது.
நாம் நமது முகநூல் பக்கத்தை ஆன் செய்து பார்க்கும்போது மட்டுமே மற்றவர்களால் நமது பக்கத்தை பார்க்க முடியும். நாம் லாக்-அவுட் செய்துவிட்டால், மற்றவர்களால் நமது பக்கத்தை பார்க்க முடியாது. இதன் மூலம் நமது பக்கத்தில் உள்ள புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும்.
டெலிட் செய்வது எப்படி?
முகநூல் பக்கத்தில் ஹெல்ப் என்ற ஆப்ஷன் உள்ளது. அதை கிளிக் செய்து ‘அக்கவுன்ட் டெலிட்' என்று மட்டும் கொடுத்தால் போதும். அதன் பின்னர் வரும் 2 எளிதான வழிமுறைகளுக்கு பின்னர் நமது அக்கவுன்ட் டெலிட் செய்யப்படும். ஆனால் அக்கவுன்ட் டெலிட் ரிக்வஸ்ட் கொடுத்த பின்னர் தொடர்ந்து 15 நாட்கள் நாம் நமது முகநூல் பக்கத்தை திறந்து பார்க்கக் கூடாது. அதன் பின்னர் அந்த அக்கவுன்ட் தானாக டெலிட் ஆகிவிடும். 15 நாட்களுக்கு முன்னதாக முகநூல் பக்கத்தை திறந்து பார்த்தால் அக்கவுன்ட் டெலிட் ஆகாது.
7 ஆண்டுகள் சிறை தண்டனை
சைபர் கிரைம் உயர் அதிகாரி கூறும்போது, “பெண்களின் புகைப்படத்தை தவறான நோக்கத்தில் பரப்புபவர்கள் தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் சட்டம் 66 முதல் 69-வது வரையிலான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்படுவார்கள். அவர்கள் செய்த குற்றத்தின் தன்மைக்கு ஏற்ப 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும். பெண்களின் புகைப்படத்தை பயன்படுத்துவதால் பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். இதற்கு கூடுதலாக தண்டனை கிடைக்கும்.
தமிழக அரசின் தகவல் தொழில்நுட்ப சிறப்பு சட்டத்தின் கீழ், பெண்களின் புகைப்படத்தை தவறாக பயன்படுத்துபவர்களை குண்டர் சட்டத்தில் கூட கைது செய்ய முடியும்.
எளிதாக கண்டுபிடிக்க முடியும்
"முகநூல் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் பெண்களின் புகைப்படங்களை பரப்புபவர்களை அவர்கள் பயன்படுத்தும் ஐபி முகவரி மற்றும் சர்வர் மூலம் ஒரு மணி நேரத்துக்குள் கண்டுபிடித்துவிடுவோம். வாட்ஸ்-அப் மூலம் பரப்புபவர்களை கண்டுபிடிப்பது கொஞ்சம் சிரமமே தவிர, நிச்சயம் கண்டுபிடித்து விடலாம்" என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.








