கல்வி உதவித் தொகைக்கான, 'ஆன்லைன்' பதிவு திட்டத்தில், 65 லட்சம் பேர்
பதிவு செய்துள் ளனர். மத்திய அரசு சார்பில் மாணவ, மாணவியருக்கான கல்வி
உதவித்தொகை, பள்ளி, கல்லுாரிகள் மூலம் வழங்கப்படுகின்றன.
பல கல்வி நிறுவனங்கள், சரியாக வழங்குவதில்லை என்ற
புகார் எழுந்தது. போலி மாணவர்கள் பெயரிலும், போலி ஆவணங்கள் மூலமும், உதவித்
தொகை பெறுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில், உதவித் தொகை
வழங்குவதில், முறைகேடுகள் மற்றும் விதிமீறல்களுக்கு முற்றுப்புள்ளி
வைக்கும் வகையில், தேசிய கல்வி உதவித் தொகை ஆன்லைன் பதிவு திட்டத்தை,
மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
இதில் பள்ளி, கல்லுாரிகள், பல்கலைகள் தனியாகவும்; மாணவ, மாணவியர்
தனியாகவும் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவ, மாணவியரின் வங்கி
கணக்கு எண்ணை பதிவு செய்தால், அதில், நேரடியாக உதவித் தொகை வழங்கப்படும்
என, அறிவிக்கப்பட்டுள்ளது; ஆதார் எண்ணையும் இணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, உதவித் தொகை கோரி, 65 லட்சம் பேர், விபரங்களை பதிவு
செய்துள்ளனர்; இவர்களில், 10 லட்சம் பேர், இந்த கல்வி ஆண்டில் புதிதாக
பதிவு செய்துள்ளனர். தற்போது, 18 வகை கல்வி உதவித் தொகைக்கு, பதிவுகள்
நடந்து வருகின்றன.







