ரியோ ஒலிம்பிக் மகளிர் ஒற்றையர் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின்
பி.வி.சிந்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இதன்மூலம் அவர் வெள்ளிப்
பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.
இதுதவிர ஒலிம்பிக் பாட்மிண்டன் போட்டியில்
இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனையையும்
சிந்து படைத்துள்ளார்.வெள்ளிக்கிழமை நடைபெறும் இறுதி ஆட்டத்தில்
வெல்லும்பட்சத்தில் சிந்துவுக்கு தங்கப் பதக்கம் கிடைக்கும். இல்லையெனில்
வெள்ளிப் பதக்கம் கிடைக்கும்.ரியோ டி ஜெனீரோவில் வியாழக்கிழமை நடைபெற்ற
அரையிறுதியில் உலகின் 10-ஆம் நிலை வீராங்கனையான சிந்து21-19, 21-10 என்ற
நேர் செட்களில் 6-ஆம் நிலை வீராங்கனையான ஜப்பானின் நஜோமி ஒகுஹராவை
தோற்கடித்தார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற
இந்த ஆட்டத்தின் முதல் செட்டில் சிந்து ஆக்ரோஷமாக ஆடினார். அதேநேரத்தில்
நஜோமி விடாப்பிடியாக போராடியபோதும், அந்த செட்டை அவரால் காப்பாற்ற
முடியவில்லை. இதனால் அந்த செட்டை 21-19 என்ற கணக்கில் கைப்பற்றினார்
சிந்து.பின்னர் நடைபெற்ற 2-ஆவது செட்டின் ஆரம்பத்தில் அபாரமாகஆடிய நஜோமி
முன்னிலை பெற்றார். ஆனால் அந்த முன்னிலை நீண்ட நேரம் நீடிக்கவில்லை. ஒரு
கட்டத்துக்குப் பிறகு மிக அபாரமாக ஆடிய சிந்து, கடகடவென புள்ளிகளைப் பெற,
நஜோமிக்கு பின்னடைவு ஏற்பட்டது. அதன்பிறகு அவரால் கடைசி வரை சரிவிலிருந்து
மீள முடியவில்லை. இறுதியில் அந்த செட்டை 21-10 என்ற கணக்கில் கைப்பற்றி
அரையிறுதியில் வெற்றி கண்டார் சிந்து. மொத்தத்தில் இந்த ஆட்டத்தை 49
நிமிடங்களில் முடித்தார் சிந்து.சிந்து-கரோலினா மோதல்:வெள்ளிக்கிழமை
நடைபெறும் இறுதிச்சுற்றில் சிந்துவும்,உலகின் முதல் நிலை வீராங்கனையான
கரோலினா மரினும் மோதவுள்ளனர்.நடப்பு உலக சாம்பியனான கரோலினா மரின், தனது
அரையிறுதியில் 21-14, 21-16 என்ற நேர் செட்களில் நடப்பு ஒலிம்பிக்
சாம்பியனான சீனாவின் லீ ஸியூரூயை தோற்கடித்தார்.இறுதிச் சுற்றுக்கு
முன்னேறியிருப்பதன் மூலம் தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கத்தை உறுதி
செய்துள்ளார் சிந்,து.
இறுதிச் சுற்றில் வெற்றி கண்டால் தங்கப்
பதக்கமும், தோல்வி கண்டால் வெள்ளிப் பதக்கமும் சிந்துவுக்குக்
கிடைக்கும்.ஒலிம்பிக் இறுதி போட்டியில் விளையாடவிருப்பது எனது வாழ்வின்
மிகச்சிறந்த தருணம் ஆகும். இறுதிச்சுற்றில் வெல்வதில்தான் எனது முழுக்
கவனமும் உள்ளது.இறுதி ஆட்டத்தில் என்னுடன் விளையாடவிருக்கும் ஸ்பெயின்
வீராங்கனை கரோலினா மரினும், சவாலான எதிராளிதான். அவரும் சிறப்பாக
ஆடியிருக்கிறார். எனினும் தங்கம் வெல்வதுதான் எனது இலக்கு.-பி.வி.சிந்து







