செல்லாத பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை பதுக்குவோருக்கு ரூ.10 ஆயிரமோ
அல்லது அவர்களிடம் இருந்து கைப்பற்றப்படும் செல்லாத ரூபாய் நோட்டுகளின்
மதிப்பில் 5 மடங்கு அதிகமோ அபராதமாக விதிக்கப்பட உள்ளது.
இதுதொடர்பாக அவசரச் சட்டம் கொண்டு வருவதற்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை தனது ஒப்புதலை அளித்தது.
தில்லியில் கடந்த மாதம் 8-ஆம் தேதி நடைபெற்ற மத்திய அமைச்சரவைக்
கூட்டத்தில், நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1,000 ஆகிய
ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறுவது என்று முடிவு எடுக்கப்பட்டது. மத்திய
அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு, நாட்டு மக்களுக்கு இந்த தகவலை பிரதமர்
நரேந்திர மோடி வெளியிட்டார். அதையடுத்து, செல்லாத ரூ.500, ரூ.1,000 ஆகிய
நோட்டுகளை வங்கிகள், தபால் நிலையங்களில் டெபாசிட் செய்வதற்கும்,
மாற்றுவதற்கும் கால அவகாசம் அளிக்கப்பட்டது.
செல்லாத ரூபாய் நோட்டுகளை கொடுத்து புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றுவதற்கான
அவகாசம் முடிந்தபோதிலும், அதை வங்கிகள், தபால் நிலையங்களில் டெபாசிட்
செய்வதற்கான கால அவகாசம் வரும் 30-ஆம் தேதி வரை உள்ளது. மேலும்,
குறிப்பிட்ட ரிசர்வ் வங்கி கிளைகளில் செல்லாத ரூபாய் நோட்டுகளை டெபாசிட்
செய்வதற்கான கால அவகாசம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 31-ஆம் தேதி வரையிலும்
உள்ளது. இதற்கும் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய
அமைச்சரவைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், செல்லாத பழைய
ரூ.500, ரூ.1,000 ஆகிய ரூபாய் நோட்டுகளை பதுக்குவோருக்கு தண்டனை விதிப்பது
தொடர்பாக அவசரச் சட்டம் கொண்டு வருவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.அவசரச் சட்டத்தின் அம்சங்கள் குறித்து, மத்திய அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவித்ததாவது:
செல்லாத பழைய ரூ.500, ரூ.1,000 ஆகிய நோட்டுகளை 10 எண்ணிக்கை வரை மட்டுமே
ஒருவர் வைத்திருக்கலாம். அதை விட அதிகமாக அந்த ரூபாய் நோட்டுகளை
வைத்திருப்பது, பரிமாற்றம் செய்வது அல்லது பிறரிடம் இருந்து பெறுவது
போன்றவை குற்றச்செயலாகும்.
இத்தகைய செயலில் ஈடுபடும் நபருக்கு ரூ.10
ஆயிரமோ அல்லது அவரிடம் இருந்து கைப்பற்றப்படும் செல்லாத ரூபாய் நோட்டுகள்
மதிப்பில் 5 மடங்கு அதிகமோ அபராதமாக விதிக்கப்படும். ஜனவரி 1-ஆம் தேதி
முதல் மார்ச் 31-ஆம் தேதி வரையிலும் செல்லாத ரூபாய் நோட்டுகளை டெபாசிட்
செய்வது தொடர்பாக தவறான தகவல் தெரிவித்தது கண்டுபிடிக்கப்பட்டால், அதற்கு
ரூ.5 ஆயிரமோ அல்லது கைப்பற்றப்படும் தொகையில் 5 மடங்கு அதிக தொகையோ
அபராதமாக விதிக்கப்படும்.
இதேபோல், செல்லாது என்று அறிவிக்கப்பட்ட
ரூபாய் நோட்டுகள் திரும்பவும் புழக்கத்துக்கு வராமல் தடுப்பதற்கு ரிசர்வ்
வங்கிச் சட்டத்தில் திருத்தம் செய்யவும் அவசரச் சட்டத்தில் வழிவகை
செய்யப்பட்டுள்ளது என்று மத்திய அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன.
அவசரச்
சட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கும் ஷரத்துகள், டிசம்பர் மாதம் 30-ஆம்
தேதிக்குப் பிறகு இதுபோன்ற செயலில் ஈடுபடும் நபருக்கு பொருந்துமா? அல்லது
மார்ச் மாதம் 31-ஆம் தேதிக்கு பிறகு பொருந்துமா? என்பது குறித்து மத்திய
அரசு வட்டாரங்கள் எதுவும் தெரிவிக்கவில்லை.
மார்ச் மாதம் 31-ஆம்
தேதிக்குப் பிறகு, குறிப்பிட்ட எண்ணிக்கையைக் காட்டிலும் அதிக
எண்ணிக்கையில் செல்லாத பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வைத்திருப்போருக்கு
4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க வகை செய்ய வேண்டும் என்று மத்திய
அமைச்சரவையிடம் திட்டம் முன்வைக்கப்பட்டிருந்தது. அந்த திட்டத்துக்கு
மத்திய அமைச்சரவை தனது ஒப்புதலை வழங்கியதா? இல்லையா? என்பது குறித்து
தெளிவாக தெரியவில்லை.







