தினமலர் வழிகாட்டி' நிகழ்ச்சி நாளை துவக்கம் : உயர்கல்வி குழப்பங்களுக்கு ஒரே இடத்தில் ஆலோசனை:
பிளஸ் 2வுக்கு பின் படிக்க வேண்டிய, உயர்கல்வி குறித்த சந்தேகங்களை
தீர்க்கும், 'தினமலர் வழிகாட்டி' நிகழ்ச்சி, நாளை முதல் மூன்று நாட்கள்,
சென்னையில் நடக்கிறது.பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், உயர்கல்வியில்
சேர்வதற்கான சந்தேகங்களை தீர்க்க, நமது நாளிதழ் சார்பில், வழிகாட்டி
நிகழ்ச்சி, ஆண்டு தோறும் நடத்தப் படுகிறது. இந்த ஆண்டுக்கான, தினமலர்
வழிகாட்டி நிகழ்ச்சி, நாளை முதல் மூன்று நாட்கள், சென்னையில் நடக்கிறது.
ராயப்பேட்டை அரசு மருத்துவமனை எதிரேஉள்ள, ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில்,
காலை, 10:00 மணி முதல், மாலை, 7:00 மணி வரை நடக்கும் நிகழ்ச்சியை, நமது
நாளிதழும், எஸ்.ஆர்.எம்., பல்கலையும் இணைந்து நடத்துகின்றன. பிளஸ் 2
முடித்த பின், உயர்கல்வியில் சேருவதற்கு, 'அப்ளிகேஷன் முதல் அட்மிஷன்'
வரையிலான சந்தேகங்களுக்கு, இதில், விளக்கம் பெறலாம். காலை, மாலை இரு
வேளைகளில் நடக்கும் கருத்தரங்கில், 30க்கும் மேற்பட்ட நிபுணர்கள்,
உயர்கல்விக்கான ஆலோசனைகள் வழங்க உள்ளனர்.பிரபல கல்வியாளர்கள், கல்வி
ஆலோசகர்கள் பங்கேற்கும், 'பேனல் டிஸ்கஷன்' என்ற, குழு ஆலோசனைக்கும்
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், அறிவியல், கலை, இன்ஜினியரிங்
மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகள் குறித்து, மாணவர்களும், பெற்றோரும்
கேள்வி கேட்டு, பதில் பெறலாம். சிறந்த கேள்வி கேட்கும் மாணவர்கள்,
'டேப்லெட்' மற்றும் 'வாட்ச்' போன்ற பரிசுகளை வெல்ல வாய்ப்புள்ளது.
நிகழ்ச்சி நடக்கும் வளாகத்தில், முன்னணி பல்கலைகள், கல்லுாரிகளின்,
100க்கும் மேற்பட்ட அரங்குகள், அமைய உள்ளன. இந்த அரங்குகளில் உள்ள
பிரதிநிதிகளிடம், கல்லுாரிகளிலுள்ள படிப்புகள், சேர்வதற்கான தகுதி,
படிப்புக்கான செலவு போன்றவை குறித்தும் விபரங்கள் பெறலாம். கல்வி கடன்
வாங்கும் வழி முறைகளையும், அறிந்து கொள்ளலாம்.தினமலர் நாளிதழும், எஸ்.ஆர்.எம்., பல்கலையும் இணைந்து நடத்தும், இந்த நிகழ்ச்சியை, கலசலிங்கம் பல்கலை மற்றும் ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் உடன் வழங்குகின்றன.
'நீட்' தேர்ச்சிக்கு ஆலோசனை
● எந்த பாடப்பிரிவு, எந்த கல்லுாரியில் உள்ளது, படிப்புக்கான வேலைவாய்ப்புகள், கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளின் தகவல்கள் அடங்கிய, உயர்கல்வி தகவல் பெட்டகமான, 'தினமலர்' வழிகாட்டி புத்தகம், நிகழ்ச்சிக்கு வரும் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் ● நாடு முழுவதும், மே, 7ல், நடக்கவுள்ள, 'நீட்' நுழைவு தேர்வில், தேர்ச்சி பெறுவது எப்படி? தேர்வுக்கு தயாராவது எப்படி என்ற வழிகாட்டுதலும், இந்த நிகழ்ச்சியில் இடம் பெறுகிறது. மாதிரி வினாக்கள் இடம் பெற்ற, நீட் வழிகாட்டி புத்தகமும் இலவசமாக வழங்கப்படும்.
● இடம்: ஒய்.எம்.சி.ஏ., மைதானம், ராயப்பேட்டை அரசு மருத்துவமனை எதிரில்● நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 7:00 மணி வரை● நாள்: ஏப்., 1, 2 மற்றும் 3ம் தேதி