அப்போது ஒன்றாம் வகுப்பு மற்றும் 6ம் வகுப்புகளில் சமச்சீர் கல்வி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. கணினி அறிவியல் பாடத்தை மையமாக வைத்து அனைவருக்கும் இலவச கணினி அறிவியல் கல்வி அறிவிக்கும் வகையில் இந்த சமச்சீர் கல்வித்திட்டம் கொண்டு வரப்பட்டது. இதற்காக 2011-12 கல்வி ஆண்டில் அனைத்து வகுப்புகளிலும் சமச்சீர் கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதே ஆண்டு மே மாதம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.அதிமுக ஆட்சிக்கு வந்தது. இதனால் கடந்த ஆட்சிக்காலத்தில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை சுமார் 28 லட்சம் மாணவர்களுக்கு அச்சடித்த கணினி அறிவியல் பாடப்புத்தகங்கள் கிடப்பில் போடப்பட்டன.இதனால் மக்கள் வரிப்பணத்தில் ரூ.150 கோடியில் அச்சடிக்கப்பட்ட கணினி அறிவியல் பாடப்புத்தகங்கள் இன்று வரை குடோன்களில் உள்ளன. சமச்சீர் கல்வித்திட்டம் கொண்டு வரப்பட்டதால் பி.எட் கணினி ஆசிரியர் படிப்பை தங்களுக்கு அரசுப்பள்ளிகளில் வேலை கிடைக்கும் என எண்ணிஅதிகளவில் படித்தனர். ஆனால், அரசுப்பள்ளிகளில் பி.எட் படித்த கணினி ஆசிரியர்களுக்கு பகுதி நேர வேலை கூட வழங்கவில்லை. மாறாக, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் டிப்ளமோ, பிசிஏ. மற்றும் 3 ஆண்டு படித்த ஆசிரியர்கள், கணினி அறிவியல் பாடம் சொல்லிக்கொடுக்க நியமிக்கப்பட்டனர்.பி.எட் படித்த கணினி ஆசிரியர்கள் அரசுப்பள்ளிகளில் நியமிக்கப்படவில்லை. இதனால் பி.எட். படித்த கணினி அறிவியல் ஆசிரியர்கள் வேலை வாய்ப்பு கிடைக்காமல் இன்றும் சிரமப்பட்டு கொண்டிருக்கின்றனர்.
தமிழகம் முழுவதும் சுமார் 40 ஆயிரம் கணினி அறிவியல் ஆசிரியர்கள் வேலை இல்லாமல் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். .கடந்த 2006ம் ஆண்டில் இருந்து புதிதாக தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப்பள்ளிகளில் கணினி ஆசிரியர் பாடப்பிரிவு இல்லை. உலகம் கணினி மயமாக வளர்ந்து கொண்டிருக்கும் இக்காலக்கட்டத்தில் கணினி கல்வி மாணவர்களுக்கு அவசியம் என்பதை உணர்ந்து, கணினி அறிவியல் பாடப்பிரிவை கொண்டு வரவேண்டும்.மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள கணினி ஆசிரியர் பணியிடங்களை மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கணினி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என பி.எட் கணினி அறிவியல் படித்த ஆசிரியர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து கணினி ஆசிரியர்கள் கூறுகையில்,‘‘இன்று அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் 80 சதவீதம் பேர் ஏழை, எளிய மாணவர்கள் தான்.








