பொதுத்தேர்வுகளில் தரவரிசை ரத்து செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்
தக்கது, சீர்திருத்தங்கள் தொடரட்டும் என்று கூறியுள்ள அன்புமணி, பள்ளிக்
கல்வித் துறை செயலர் உதயச்சந்திரனுக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கையில்,
தமிழ்நாட்டில் 12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவு இன்று அறிவிக்கப்பட்ட
நிலையில், தேர்வெழுதிய 8.98 லட்சம் மாணவர்களில் 92.10 விழுக்காட்டினர்
தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்கும்
வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேர்ச்சி பெறாதவர்கள் விரைவில்
நடைபெறவிருக்கும் சிறப்புத் துணைத் தேர்வில் வெற்றி பெற்று மேற்படிப்பைத்
தொடர வாழ்த்துகிறேன்.
தமிழக தேர்வு வரலாற்றில் முதன்முறையாக, இந்த
ஆண்டு 12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகளில் தரவரிசை ரத்து
செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல், 11-ஆம் வகுப்புக்கும் விரைவில்
பொதுத்தேர்வு அறிமுகம் செய்யப்படும் என்றும் அரசு கூறியுள்ளது. இந்த இரு
அறிவிப்புகளும் வரவேற்கத் தக்கவை. பொதுத்தேர்வுகளில் தர வரிசையை ரத்து
செய்ய வேண்டும்; 11-ஆம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்த வேண்டும் ஆகிய
இரு கோரிக்கைகளையும் பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி
வருகிறது. மாணவர் நலன் சார்ந்த பா.ம.க. கோரிக்கைகள் ஏற்கப்பட்டதில் மிக்க
மகிழ்ச்சி.
பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு
தரவரிசை வழங்கப்படுவதால் அதைப் பெற்ற சிலரும், அவர்களின் குடும்பங்களும்
மகிழ்ச்சி அடைவார்கள் என்பது உண்மை தான். ஆனால், தரவரிசை பெற
முடியாதவர்களிடையே தாழ்வு மனப்பான்மையையும், மன உளைச்சலையும் இது தான்
ஏற்படுத்துகிறது என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும். தரவரிசை ரத்து
செய்யப்பட்டதன் மூலம் மாணவர்களிடையே நிலவி வந்த போட்டி சார்ந்த பகைமை
உணர்வு மறைந்து நட்புணர்வு பெருகும். மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும்,
உறவு வளர்ச்சிக்கும் இத்தகைய சூழல் அவசியமாகும்.
தமிழ்நாட்டில் உள்ள
தனியார் கல்வி நிறுவனங்களில் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வரும் கொடுமை
என்னவெனில், 12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகளில் தங்கள் மாணவர்கள் அதிக
மதிப்பெண்கள் பெற வேண்டும் என்பதற்காக, 11-ஆம் வகுப்பிலேயே 12-ஆம்
வகுப்புக்கான பாடங்களைக் கற்பிக்கத் தொடங்கி விடுகின்றனர் என்பது தான்.
இதனால் பல மாணவர்கள் 11-ஆம் வகுப்பை படிக்காமலேயே தேர்ச்சி பெறுகின்றனர்.
மேல்நிலைக் கல்வியில் பாதியை படிக்காததால், மருத்துவம், பொறியியல்,
தொழில்நுட்பம் உள்ளிட்ட படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளை அவர்களால்
எதிர்கொள்ள இயல வில்லை. 11-ஆம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு அறிமுகம்
செய்வதன் மூலம் இப்பாதிப்புகளை தவிர்க்கலாம்.
தமிழகத்தில் கல்வித்
தரத்தை மேம்படுத்த இன்னும் ஏராளமான பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். கடந்த 6
ஆண்டுகளாக கல்வித்துறை சீர்திருத்தங்கள் தொடர்பாக முன்வைக்கப்பட்ட
யோசனைகள் எதுவும் காதில் வாங்கிக் கொள்ளப்படாத நிலையில், இப்போது பயனுள்ள
சீர்திருத்தங்களை மேற்கொள்ள பள்ளிக் கல்வித்துறை முன்வந்திருப்பது நல்ல
அறிகுறியாகும். இதற்குக் காரணமாக பள்ளிக்கல்வித் துறை செயலாளர்
உதயச்சந்திரன் அவர்களுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
போட்டித்தேர்வுகளையும், பல்வேறு நுழைவுத்தேர்வுகளையும் எதிர்கொள்ளும்
வகையில் பாடத்திட்டத்தை வலுப்படுத்துதல், விளையாட்டுக்கு அதிக
முக்கியத்துவம் அளித்தல், தமிழ் வழிக் கல்வியை கட்டாயம் ஆக்குதல், அரசு
பள்ளிகளின் தரத்தை உயர்த்துதல், அனைத்து மாணவர்களும் அரசு பள்ளிகளைத் தேடி
வந்து படிக்கும் நிலையை உருவாக்குதல் உள்பட பள்ளிக்கல்வித்துறையில் இன்னும்
ஏராளமான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளன. அதற்கான
நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித்துறை மேற்கொள்ள வேண்டும். அதற்காக
ஆக்கப்பூர்வமான யோசனைகளை வழங்க பா.ம.க. தயாராக உள்ளது என்று
தெரிவித்துள்ளார்.