சேலம் மாவட்டம், கொளத்தூர் மாங்காடு அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில்,
கொளத்தூர் பண்ணவாடியை சேர்ந்த மாதேஷ்-சிவகாமி தம்பதியின் மகன்
நந்தகுமார்(14) 9ம் வகுப்பு படித்து வந்தார். கோடை விடுமுறைக்கு பின் கடந்த
7ம்தேதி பள்ளிக்கு சென்ற நந்தகுமாரை தேர்ச்சி பெற்றதாக கூறி 10ம்
வகுப்பில் அவரை உட்கார வைத்த ஆசிரியர்கள், புத்தகங்களையும் அவருக்கு
வழங்கினர். 9ம் தேதி மாணவர் நந்தகுமார் வகுப்பறையில் இருந்தபோது, அங்கு
வந்த 4 ஆசிரியர்கள், ''நீ 9ம் வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை. எனவே, 10ம்
வகுப்பு புத்தகங்களை திரும்ப கொடுத்து விட்டு, மாற்றுச்சான்றிதழை வாங்கி
கொண்டு வேறு பள்ளியில் சேர்ந்து படி,'' என கூறினர்.
மேலும், பள்ளியின் ஒவ்வொரு வகுப்பறைக்கும் மாணவரை அழைத்துச்சென்று,
அங்கிருந்த மாணவர்களிடம் ''ஆசிரியர்கள் சொல்வதை கேட்டு நடக்காவிட்டால்,
நந்தகுமாரை போல நீங்களும் பெயிலாகி விடுவீர்கள்,'' என மிரட்டியதாக
கூறப்படுகிறது. 2 நாள் 10ம் வகுப்பில் இருந்த நிலையில், திடீரென தேர்ச்சி
பெறவில்லை என கூறியதோடு, மற்ற மாணவர்கள் முன்னிலையில் தன்னை
அவமானப்படுத்தியதால் மாணவர் நந்தகுமார், வீட்டிற்கு சென்று நடந்த
சம்பவங்களை தாயிடம் சொல்லி அழுதார். நேற்று அதிகாலை பூச்சிமருந்து குடித்து
மயங்கினார். பெற்றோர் மற்றும் உறவினர்கள், அவரை மீட்டு ஓமலூரில் உள்ள
தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நந்தகுமார்
இறந்தார். இதுகுறித்து கொளத்தூர் போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.







