தரம் குறைந்த கல்லூரிகள் பட்டியல் : பல்கலை மானிய குழு வெளியிடுகிறது
'உயர் கல்வித் தரத்தை மேம்படுத்த, தரம் குறைந்த கல்லுாரிகளின் பட்டியல்
வெளியிடப்படும்' என, மத்திய பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி.,
அறிவித்துள்ளது.
மூன்று பிரிவுகல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், கல்வித் தரத்தை
உயர்த்தும் வகையில், புதிய திட்டங்களை, யு.ஜி.சி., அறிமுகப்படுத்தி உள்ளது.
அதன்படி, கல்லுாரிகளை, அவற்றின் கல்வித் தரம் அடிப்படையில், மூன்று
பிரிவாக பிரிக்க, முடிவு செய்யப்பட்டுஉள்ளது.
தேசிய தர மதிப்பீட்டுக் குழுவான, 'நாக்' மூலம், 3.5 மதிப்பெண்களுக்கு
மேல் பெற்று, தேசிய தரவரிசை பட்டியலில், தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக,
முதல், 50 இடங்களுக்குள் வந்த கல்லுாரிகள், முதல் பிரிவில் சேர்க்கப்படும்.
நாக் மதிப்பீட்டில், 3.01 முதல், 3.49 வரை மதிப்பெண் பெற்று, தேசிய
தரவரிசை பட்டியலில், தொடர்ந்து இரண்டு ஆண்டுகள், 51 முதல், 100 இடங்களில்
வந்த கல்லுாரிகள், இரண்டாம் பிரிவில் இடம்பெறும். இவற்றில் வராத
கல்லுாரிகள், மூன்றாம் பிரிவில் இடம்பெறும்.இந்த பிரிவுகளின்படி,
கல்லுாரிகளின் தரம்ஆய்வு செய்யப்பட்ட பின்னரே, அவற்றுக்கான தன்னாட்சி
அங்கீகாரம் வழங்கப்படும்.நாக் மதிப்பீட்டையும், தேசிய தரவரிசை பட்டியலில்
இடம் பெறுவதையும், தொடர்ந்து கடைபிடிக்காவிட்டால், அந்த கல்லுாரிகள்,
பின்னுக்கு தள்ளப்படும்.
செயல் திறன் ஆய்வு : இதற்காக, ஒவ்வொரு ஆண்டும், ஜூன் மற்றும்
டிசம்பரில், கல்லுாரிகளின் செயல் திறன் ஆய்வு செய்யப்படும். அதே போல,
இந்திய பல்கலைகளுடன் இணைய உள்ள, வெளிநாட்டு பல்கலைகளும், கல்லுாரிகளும்,
சர்வதேச தரவரிசை பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும் என, விதிகள் கொண்டு
வர உள்ளதாக, யு.ஜி.சி., அறிவித்துஉள்ளது.
இது குறித்த வரைவு விதிகள், www.ugc.ac.in என்ற இணையதளத்தில்
வெளியிடப்பட்டுள்ளன. கல்வியாளர்கள், பொது மக்கள், தங்கள் கருத்துக்களை,
ஜூன், 15க்குள், feedback2ugc@gmail.com என்ற, 'இ - மெயில்' முகவரிக்கு
அனுப்பலாம் என, யு.ஜி.சி., தெரிவித்துள்ளது.