அரசு ஊழியர்களின் பிள்ளைகள் அரசுப் பள்ளியில்தான் படிக்க வேண்டும்..! செங்கோட்டையனின் அதிரடி பலிக்குமா? - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


அரசு ஊழியர்களின் பிள்ளைகள் அரசுப் பள்ளியில்தான் படிக்க வேண்டும்..! செங்கோட்டையனின் அதிரடி பலிக்குமா?


பள்ளிக் கல்வித் துறையில், அண்மைக்காலமாக ஆக்கபூர்வமான மாற்றங்கள் நிகழ்ந்துவருகின்றன. மருத்துவப் படிப்புக்கான 'நீட்' தேர்வை மத்திய அரசு கட்டாயமாக்கிய பிறகு, தமிழக பள்ளிக் கல்வியின் தரம்குறித்த விவாதங்கள் உச்சம்பெற்றன. இந்தச் சூழலில் பள்ளிக் கல்வித் துறையின் செயலாளராக உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டார். அதன் பிறகு, பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்தும்வகையில் பல புதிய அறிவிப்புகள் வெளிவந்தவண்ணம்உள்ளன. 
உதயச்சந்திரன் ஐஏஎஸ்
 ஏற்கெனவே, தனியார் பள்ளிகளின் முதலீடாக இருந்த ரேங்கிங் நடைமுறைக்கு முடிவுகட்டி, 10 மற்றும் +2 வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. முதல் இடம், இரண்டாம் இடம் என்ற பதற்றமின்றி, மாணவர்கள் முதன்முறையாகத் தேர்வு முடிவுகளை எதிர்கொண்டார்கள். ரேங்கிங்கை வைத்து மாணவர்களை ஈர்க்கும் 'பிராய்லர் கோழிப் பள்ளி'களுக்கு இது பெரும்பின்னடைவைத் தந்தது. கல்வித் துறையில் நிகழ்ந்த குறிப்பிடத்தக்க மாற்றமாக இது கருதப்பட்டது. இத்துடன், மேலும் பல அறிவிப்புகளையும் வெளியிட்டது பள்ளிக் கல்வித் துறை.

பள்ளிக் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையில் வழிகாட்ட, தமிழகத்தின் முக்கியக் கல்வியாளர்கள், படைப்பாளிகள், பேராசிரியர்கள்கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு வாரம்தோறும் கூடி விவாதித்து ஆலோசனைகளை வழங்குகிறது.
இந்த ஆண்டு மருத்துவப் படிப்புக்காக நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளதைப்போல, அடுத்த ஆண்டு முதல் பொறியியல் படிப்புக்கும் தேசிய அளவில் நுழைவுத்தேர்வு கொண்டுவர மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. 2020-2021 கல்வி ஆண்டு முதல் தேசிய அளவில் கலை மற்றும் அறிவியல் படிப்புகளை ஒருங்கிணைத்து அதையும் அகில இந்திய தேர்வுக்குள் கொண்டுவரவும் முடிவுசெய்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தச் சூழலில் அந்தத் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில், மாநிலப் பாடத்திட்டத்தை மேம்படுத்தவும், பாடத்திட்டங்களை மாற்றி அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப பாடத்திட்டங்களில் புதிய பகுதிகளைச் சேர்க்கவும் முடிவுசெய்திருக்கிறார்கள். இந்த ஆண்டு முதல் 6 முதல் 10-ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டங்களில் 'தகவல் தொழில்நுட்பவியல்' என்ற பாடம் புதிதாகச் சேர்க்கப்பட உள்ளது.
தனியார் பள்ளிகளுக்கு இன்னோர் அதிர்ச்சி வைத்தியத்தையும் செய்திருக்கிறார் உதயச்சந்திரன். தனியார் பள்ளிகளைப் பொறுத்தவரை, மதிப்பெண்தான் அடித்தளம். பொதுத்தேர்வுகளில், பழைய மாணவர்கள் பெறும் மதிப்பெண்ணைக் காட்டித்தான் ஒவ்வோர் ஆண்டும் புதிய மாணவர்களைச் சேர்க்கிறார்கள். மாணவர்களை அதிக மதிப்பெண் பெறச் செய்வதற்காக பல உத்திகளைக் கையாள்கிறார்கள். 99.9 சதவிகிதம் தனியார் பள்ளிகளில், 9 மற்றும் 11-ம் வகுப்புப் பாடங்களை நடத்துவதேயில்லை. 
9-ம் வகுப்பில் ஒன்றிரண்டு மாதங்கள் மட்டும் அந்த வகுப்புக்கான பாடங்களை நடத்திவிட்டு, பிறகு 10-ம் வகுப்பு பாடங்களை நடத்த தொடங்கிவிடுகிறார்கள். +1-லும் அப்படித்தான் நடக்கிறது. அரசுப் பள்ளி மாணவர்கள், ஓராண்டு படித்து எழுதும் தேர்வை, தனியார் பள்ளி மாணவர்கள் இரண்டு ஆண்டுகள் படித்து எழுதி, அதிக மதிப்பெண் பெறுகிறார்கள். மதிப்பெண்ணே எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் காரணியாக இருப்பதால், பெற்றோர் தனியார் பள்ளிகளின் வலையில் விழுகிறார்கள்.
தமிழக மாணவர்களின் கல்வித் தரத்தைக் குலைத்தது, தனியார் பள்ளிகளின் இந்தச் செயல்பாடுதான். +1, +2  இரண்டும் இரண்டு தனித்தனி வகுப்புகள் அல்ல. பட்டப்படிப்பைப்போல ஒரு கோர்ஸ். ஒரு தலைப்பில், தொடக்கநிலைப் பாடங்கள் +1-லும், அவற்றின் தொடர்ச்சி +2-விலும் இருக்கும். இரண்டையும் படித்துத் தேர்ந்தால்தான் அந்தத் தலைப்பின் உள்ளடக்கத்தை மாணவன் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும். பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட அனைத்து உயர் படிப்புகளுமே +1, +2 பாடங்களை அடிப்படையாகக்கொண்டவைதான்.
+2-வில்  மாநில அளவில் இடம்பெற்ற மாணவர்கள்கூட உயர் படிப்புகளில் அரியர் வைக்கக் காரணம், +1 படிக்காததுதான்.
மேலும், தேசிய அளவில் நடக்கும் உயர்கல்விக்கான அனைத்து போட்டித் தேர்வுகளிலும் +1 பாடங்களிலிருந்து 50 சதவிகிதக் கேள்விகள் கேட்கப்படுகின்றன. அண்மையில் நடந்த 'நீட்' தேர்வில் மாணவர்கள் அதை உணர்ந்தார்கள். +1 படிக்காததால்தான் இதுபோன்ற தேர்வுகளில் பின்தங்குகிறார்கள். ஆந்திராவில் +1, +2 படிப்புகளை 'ஜூனியர் காலேஜ்' என்ற பெயரில் நடத்துகிறார்கள். 
இரண்டுக்கும் சரிசமமான முக்கியத்துவம். ஐ.ஐ.டி., எய்ம்ஸ், ஐ.ஐ.எஸ்.சி உள்ளிட்ட மத்திய அரசின் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் ஆந்திர மாணவர்கள் நிறைந்திருக்கக் காரணம் இதுதான்.
தமிழகத்தில் நிலவும் இந்த அவலத்தை நெடுங்காலமாகக் கல்வியாளர்கள் சுட்டிக்காட்டியபோதும், கல்வித் துறை அதிகாரிகள் செவிசாய்க்கவில்லை. தனியார் பள்ளிகளின் செயல்பாட்டைக் கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, தனியார் பள்ளிகளைப்போலவே அதிக மதிப்பெண்ணைப் பெறும்வகையில் மாணவர்களைத் தயார்படுத்த வேண்டும் என அரசுப் பள்ளி ஆசிரியர்களையும் விரட்டினார்கள் அதிகாரிகள். பூனையைப் பார்த்து புலி தன் வாலைச் சுருட்டிக்கொண்ட கதையாக, அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகள் போன தவறான திசைக்குத் திருப்பிவிடப்பட்டன.
தமிழகத்தில் இப்போதுதான் அந்த அவலத்துக்கு முடிவுகட்டப்பட்டிருக்கிறது. `2017-18 கல்வி ஆண்டு முதல், +1 வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும்' என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் மதிப்பெண்ணும் முக்கியத்துவம் பெறும். +2-வுக்கு இதுவரை 1,200 மதிப்பெண்ணுக்குத் தேர்வு நடத்தப்பட்டுவந்தது. இனி, அது 600 மதிப்பெண்ணுக்கான தேர்வாகக் குறைக்கப்படும். அதோடு +1-வுக்கான 600 மதிப்பெண்ணையும் சேர்த்து 1,200  மதிப்பெண்ணாகக் கணக்கிட்டு மதிப்பெண் சான்றிதழ் விநியோகிக்கப்படும்.
சாப்பிட்டதைத் துளியளவும் கிரகிக்காமல், அப்படியே வாந்தி எடுப்பதைப்போல பாடத்தின் பின்பக்கம் உள்ள கேள்விகளுக்கான விடைகளை மட்டும் மனப்பாடம் செய்து, தேர்வு எழுதி மதிப்பெண் பெறுவதுதான் இதுவரையிலான நடைமுறை. சுயமாகச் சிந்திக்கவிடாமல், கேள்விகள் கேட்கவிடாமல் வெறும் மனப்பாடப் பொம்மைகளாக மாணவர்கள் உருவாக்கப்பட்டார்கள். அது உயர்கல்வியில் தமிழகத்துக்குப் பெரும் அவமானத்தையும் பின்னடைவையும் உருவாக்கியது. 
ஒரு கேள்வி, பாடத்திட்டத்தைத் தாண்டி பொதுவாகக் கேட்கப்பட்டாலும்  அதற்குக் 'கருணை மதிப்பெண் கொடுங்கள்' என்று மாணவர்களும் ஆசிரியர்களும் கெஞ்சும் நிலை இருந்தது. இப்போது அதையும் கவனத்தில்கொண்டிருக்கிறது பள்ளிக் கல்வித் துறை. முதல் கட்டமாக ஒவ்வொரு பாடத்திலும் 10 மதிப்பெண்ணுக்குச் சுயமாகச் சிந்தித்து விடையளிக்கும் வகையில் கேள்விகள் கேட்கப்படும். 
கல்வி உரிமைச் சட்டப்படி, ஏழைக் குழந்தைகளுக்கு வழங்கவேண்டிய 25 சதவிகித இடத்தை சரிவர வழங்காமல் போங்கு காட்டிக்கொண்டிருந்த  தனியார் பள்ளிகளுக்கு, கடிவாளம் போடப்பட்டிருக்கிறது. இந்தக் கல்வி ஆண்டு முதலே ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த ஆண்டு அது பெரிய விளைவுகளை ஏற்படுத்தவில்லை என்றாலும், இனிவரும் காலங்களில்  அதில் வெளிப்படைத்தன்மை உருவாகும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது.
ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள், அரசியல் காழ்ப்புணர்வால் கைவிடப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மேம்படுத்தும் பணிகள், பாடநூல் நிறுவனம் வெளியிட்டுக் கைவிடப்பட்ட அரிய பல நூல்களை மீண்டும் வெளியிடும் பணி, கிராமப்புற, மாவட்ட நூலகங்களை மேம்படுத்தும் பணி எனப் பள்ளிக் கல்வித் துறை ஆக்கபூர்வமான திசையில் பயணிக்கத் தொடங்கியிருக்கிறது.
இந்தச் சூழலில் நாளை (6.6.2017)  'இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் சில அறிவிப்புகள் வெளியிடப்படும்' என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருக்கிறார். இது மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது.
தமிழகத்தில் மொத்தம், 142 அரசுத் துறைகள் உள்ளன. சமீபத்திய கணக்குப்படி நான்கு லட்சம் ஆசிரியர்கள் உள்பட மொத்தம் 12 லட்சம் அரசு ஊழியர்கள் உள்ளனர். இவர்களில் பாதிப்பேர் கூட தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் படிக்கவைக்கவில்லை. மற்ற துறையினரை விடுங்கள். அரசுப் பள்ளி ஆசிரியர்கள்..? தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் 27 சதவிகித ஆசிரியர்கள் மட்டுமே தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்கிறார்கள். 73 சதவிகித ஆசிரியர்கள் தனியார் பள்ளிகளைத்தான் நாடுகிறார்கள். உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் 87 சதவிகிதம் பேர் தங்கள் பிள்ளைகளைத் தனியார் பள்ளிகளில்தான் சேர்க்கிறார்கள்.
கடந்த ஐந்து ஆண்டுகளில், கல்விக்காக அரசு செலவிட்டுள்ள தொகை 86,000 கோடி ரூபாய்.  இதில் பெரும்பகுதி செலவிடப்பட்டது ஆசிரியர்களுக்கான சம்பளமாகத்தான். அரசுப் பள்ளிகளில் பணியாற்றிக்கொண்டு, தேசத்தின் பெரும்தொகையைச் சம்பளமாகப் பெரும் ஆசிரியர்கள், தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்க்காததை எப்படிப் புரிந்துகொள்வது? இதைவிட அவமானகரமான செயல் வேறென்ன இருக்க முடியும்?
செங்கோட்டையன்
`அரசுப் பள்ளி தரமாக இல்லை' என ஆசிரியர்கள் காரணம் சொல்வார்களேயானால், அதற்கான முழுப்பொறுப்பையும் ஏற்கவேண்டியது அந்த ஆசிரியர்கள்தான். தீப்பெட்டி முதல்  மெழுகுவத்தி வரை எந்தப் பொருள் வாங்கினாலும் அதற்கான விலையோடு சேர்த்து கல்விக்கான வரியையும் கொட்டிக்கொடுக்கிறான் அப்பாவி இந்தியன். அந்த வரியில்தான் ஆசிரியர்களுக்கும் சம்பளம் வழங்கப்படுகிறது. அதைப் பெற்றுக்கொள்ளும் ஆசிரியர்கள், தங்கள் பிள்ளைகளைத் தனியார் பள்ளிகளுக்கு அனுப்பிவிட்டு, தனியார் பள்ளிக்கு அனுப்ப வசதியற்ற ஏழை வீட்டுப் பிள்ளைக்கு ஆசிரியராக பணியாற்றுவது எந்த வகையில் நியாயம்?
தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிக்கப்போகும், `இந்தியாவையே திரும்பிப் பார்க்கவைக்கும் அறிவிப்புகளில், `அரசு ஊழியர்கள், தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில்தான் சேர்க்க வேண்டும்'  என்ற அறிவிப்பும் இடம்பெறலாம்'  என்கிறார்கள் கல்வியாளர்கள்.
`பள்ளிகளில் உடற்கல்வி என்பது சம்பிரதாயமான வகுப்பாகவே இருந்துவருகிறது. அதை வலுப்படுத்தி, விளையாட்டு வீரர்களை உருவாக்கும் வகையில் காலியாகவுள்ள உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் அறிவிப்பும் வரக்கூடும். மாணவர்களுக்கு ரத்த வகை, ஆதார் எண்கள் அடங்கிய ஸ்மார்ட்கார்டு வழங்கும் அறிவிப்பும் வரலாம். குறிப்பாக, பள்ளிப் பாடத்திட்டங்களை உருவாக்கும் குழுவில் இதுவரை இல்லாதவகையில், விஞ்ஞானிகள், துணைவேந்தர்கள், ஐ.ஐ.டி பேராசிரியர்கள் அடங்கிய குழு அமைக்கும் அறிவிப்பும் வரலாம். ஒவ்வொரு பள்ளிக்கும் துப்புரவுப் பணிக்காக 100 நாள் வேலைத் திட்டத்தில் பணிபுரியும் இருவர் நியமிக்கப்படவும் வாய்ப்புள்ளது.
தற்போதுள்ள அரசியல் சூழலில் மத்திய அரசைக் 'குளிர்விக்கும்' வகையில் பள்ளிகளில் தினந்தோறும் யோகாவைப் பயிற்றுவிக்க ஏற்பாடு செய்யப்படலாம்' என்கிறார்கள். அந்தப் பயிற்சிகளை மனவளக்கலை மன்றத்தைச் சேர்ந்தவர்கள் அளிப்பார்கள்.
எல்லாம் சரி... பள்ளியின் சூழலையும் பாடத்திட்டங்களின் தன்மையையும் மாற்றலாம். ஆசிரியர்களை? `இந்தியப் பள்ளிகளில் பணியாற்றும் 23.6 சதவிகித ஆசிரியர்கள் பள்ளிக்கே வருவதில்லை. அல்லது பள்ளியில் இருப்பதில்லை' என்கிறது உலக வங்கியின் அறிக்கை. ஆசிரியர்கள் மனதுவைத்தால் மட்டுமே மாற்றம் சாத்தியமாகும். இந்தக் காலமாற்றத்துக்கு ஏற்ப ஆசிரியர்களைத் தகுதிப்படுத்த வேண்டும். 
தற்போதுவரை அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சம்பிரதாயமான புத்தாக்கப் பயிற்சிகளை அள்ளிக்கட்டி பரணில் போட்டுவிட்டு, தொழில்நுட்ப வல்லுநர்களையும், தகுதிவாய்ந்த கல்வியாளர்களையும் கொண்டு பயிற்சி அளிக்க வேண்டும்.  குறிப்பாக, கற்பித்தல் முறையில் மாற்றம் வேண்டும். இருண்மையான, வழக்கமான கற்பித்தல் முறை மாற்றப்பட்டு மாணவர்களை மூலமாகக்கொண்டு வகுப்பறைகள் திட்டமிடப்பட வேண்டும். ஆசிரியர்களுக்கானதாக இருக்கும் வகுப்பறைகள், மாணவர்களுக்கானதாக மாற்றப்பட வேண்டும்.
 பிரின்ஸ் கஜேந்திரபாபு
அரசின் கடமை இத்துடன் முடிந்துவிடவில்லை. 'பொதுப்பள்ளிக்கான மாநில மேடை' அமைப்பின்  பொதுச்செயலாளர், பிரின்ஸ் கஜேந்திரபாபு சுட்டிக்காட்டுவதைப்போல,  நிதி ஒதுக்கீட்டில் திறந்த மனதோடு செயல்பட வேண்டும். ``திட்டங்களை நிறைவேற்ற நிறைய நிதி தேவை. `+1, +2 வகுப்புகளில் 10 மதிப்பெண் , அகமதிப்பெண்ணாக (இன்டர்னல் மார்க்) வழங்கப்படும்' என அறிவித்திருக்கிறார்கள். அதற்கு மாணவர்களுக்குச் செயல்பாடுகளைக் கற்றுத்தர வேண்டும். தவறு செய்தால் திருத்த வேண்டும். ஆசிரியர்கள் வகுப்பறையிலேயே இருந்தால் மட்டுமே இது சாத்தியம். கற்றல், கற்பித்தல் தவிர, வேறு எந்தப் பணிகளும் ஆசிரியர்களுக்குத் தரக் கூடாது" என்கிற பிரின்ஸ் கஜேந்திரபாபுவின் கருத்து முக்கியமானது.
காமராஜர் ஆட்சியில் 20 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர்  நியமிக்கப்பட்டார். பிறகு, ஆசிரியர் - மாணவர்விகிதம் 1:40 என அறிவிக்கப்பட்டது. 
இப்போது 1:24 ஆக குறைந்திருக்கிறது. இதில் பெருமைப்பட்டுக்கொள்ள ஒன்றுமில்லை. ஏராளமான பள்ளிகள் 'இணைப்பு' என்ற பெயரில் மூடப்பட்டுள்ளன. ‘மூடுதல்’ என்ற சொல்லுக்குப் பதில் ‘இணைத்தல்’ என்ற வார்த்தையை அரசு பயன்படுத்தியிருக்கிறது. 2014-ம் ஆண்டு வரை இந்தியாவில் 80,647 பள்ளிகள்  'இணைக்கப்பட்டிருக்கின்றன'. தமிழகத்தில் இணைப்பால் தொலைந்துபோன பள்ளிகளின் எண்ணிக்கை 3,000.
தற்போது வரை நிறைய பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. தவிர, ஏராளமான ஆய்வக உதவியாளர்கள், செய்முறையாளர்கள், க்ளர்க், பியூன், காவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றையெல்லாம் முறையாகவும் உடனடியாகவும் நிரப்ப வேண்டும். வலைதளத்தில் மாணவர்களைப் பற்றிய விவரங்களைப் பதிவுசெய்வது முதல், மாணவர்களுக்கு வழங்கப்படும் கட்டணமில்லாப் பொருள்களை எடுத்து வந்து வழங்குவது வரை கற்பித்தல் தாண்டி பெரும் பணிச்சுமைகளை ஆசிரியர்கள் சுமந்துகொண்டிருக்கிறார்கள். தேர்தல், மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, பேரிடர் என நாட்டில் எது நடந்தாலும் முதலில் ஆசிரியர்களைத்தான் குறிவைக்கிறது அரசு. ஆசிரியர்களைப் பள்ளிக்கானவர்களாக மட்டுமே நடத்த வேண்டும்.
1,000-த்துக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் கழிவறை வசதி இல்லை. கடந்த இரண்டு ஆண்டுகளில், 11,698 புதிய கழிவறைகள் கட்டப்பட்டதாக அரசு சொல்கிறது. அவற்றில் பல பயன்படுத்தும் வகையில் இல்லை. பல  பள்ளி மாணவர்களுக்குக் குடிநீர்கூட இல்லை. பள்ளிகளின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணியையும் போர்க்கால வேகத்தில் செய்யவேண்டும்.
`அரசு ஊழியர்கள், தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில்தான் சேர்க்க வேண்டும்' என்ற அறிவிப்பு, நாளை வெளியிடப்படுமேயானால், அதை அரசு ஊழியர்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள் எனத் தெரியவில்லை. எம்.பி-கள், எம்.எல்.ஏ-க்களும் அரசு ஊழியர்கள் என்ற அடிப்படையில் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளிலேயே சேர்க்க நேரிடும். பெரும்பாலான அரசியல்வாதிகள், 'கல்வித் தந்தை'களாகவும் இருப்பதால், இதை நடைமுறைப்படுத்தவிடுவார்களா எனத் தெரியவில்லை. ஒருவேளை, இந்த அறிவிப்பையே வரவிடாமல் தடுத்துக்கூடவிடுவார்கள்.
ஆனால், அரசு ஊழியர்கள் மனம் திறந்து சிந்திக்க வேண்டும். அண்ணா பல்கலைக்கழகம், சென்னை மருத்துவக் கல்லூரி என உயர்கல்விக்கு அரசு கல்வி நிறுவனங்களைத் தேடும் அவர்கள் அரசுப் பள்ளிகளை மட்டும் புறக்கணிப்பது நியாயமில்லை. அவர்கள் மனதுவைத்தால் அரசுப் பள்ளிகள் மேம்படும். அதிகாரிகளே தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்த்தால் மக்கள் நம்பிக்கையோடு அரசுப் பள்ளிக்கு வருவார்கள்.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H