மொத்தமாக இவர் ‘முடியாது’ என்றதும் 300 பேர் கொண்ட பட்டியலைக் கொடுத்து, ‘இந்த ஆசிரியர்களுக்காவது இடமாறுதல் போட்டுக் கொடுங்கள்’ என்று சொல்லி இருக்கிறார்கள். அதையும் மறுத்துவிட்டார். அதன்பிறகு 69 பேர் கொண்ட பட்டியலைக் கொடுத்து இடமாறுதல் போட்டுத் தரச்சொல்லி இருக்கிறார்கள்.
அதையும் செய்ய முடியாது என்றவர், ‘ஆசிரியர்கள் இடமாறுதலை வெளிப்படையாகச் செய்தால் யாருக்கும் பிரச்னை இல்லை. ஏற்கெனவே, இந்தக் கல்வி ஆண்டு தொடக்கத்தில் செய்தது போல கவுன்சலிங் மூலம் மீண்டும் செய்துவிடலாம்’ என்று சொல்லி இருக்கிறார். இது மேலிடத்துக்குப் பிடிக்கவில்லை.
‘எப்படியாவது இவரைத் தூக்குகிறோம்’ என்று சில அமைச்சர்களின் பி.ஏ-க்கள் புஜம் தட்டினார்கள். மேலிடத்தில் இருந்து பேசிய ஒருவர், ‘சிலருக்கு மட்டும் டிரான்ஸ்ஃபர் போடுவதால் எதுவும் ஆகிவிடாது’ என்று சொல்ல, ‘கவுன்சலிங் இல்லாமல் ஒருவருக்கு பணிமாறுதல் கொடுத்தாலும் தவறுதான்’ என்று உதயசந்திரன் சொன்னாராம்.
பள்ளிக்கல்வித் துறையில் ஆசிரியர்கள் இடமாறுதல், பள்ளி அங்கீகாரம் புதுப்பித்தல், பள்ளிகளுக்குத் தடையில்லாச் சான்றிதழ் கொடுத்தல் என்று பல வேலைகளுக்குப் பணம் கொட்டோ கொட்டென்று கொட்டும். உதயசந்திரன் அனைத்து வேலைகளையும் ஆன்லைன் முறைக்குக் கொண்டுவந்தார். அனைத்து நடவடிக்கைகளையும் வெளிப்படையாக்கினார். இதையும் இந்த வட்டாரம் விரும்பவில்லை.
பள்ளிக்கல்வித் துறை மானியக் கோரிக்கையில் சுமார் 800 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அனுமதி வாங்கி வைத்துள்ளார்கள். இவர் ஏற்கெனவே நிதித்துறையில் இருந்ததால் சாமர்த்தியமாக நிதி பெற்றுவிட்டார். உதயசந்திரன் இருந்தால் இதில் லாபம் பார்க்க முடியாது என்பதால் அவரை அந்த இடத்தில் இருந்து நகர்த்த நினைக்கிறார்கள்” என்று சொன்னார்கள் பள்ளிக்கல்வி துறை வட்டாரத்தினர்.
பள்ளிக்கல்வித் துறை விழா ஒன்றில் கலந்துகொண்ட உதயசந்திரன், மாணவ-மாணவிகளுக்கு ஆசிரியர்கள் ஆற்ற வேண்டிய அறிவுசார் பணிகள் குறித்து ஒன்றரை மணி நேரம் பேசினார். அந்தப் பேச்சில், ‘‘பள்ளிக்கூடங்களில் திறமையாக அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றும் ஆசிரியர்களுக்கு அவர்கள் வேலைபார்க்கும் பள்ளிக்கூடத்தில் இருந்தேதான் பிரச்னைகள் வரும்.
அதைப்பற்றி கவலைப்படாமல் உங்கள் வேலையை எப்போதும் போல கவனமுடன் செய்ய வேண்டும். உங்களுக்கு அந்தப் பிரச்னை மனவேதனையைத் தந்துகொண்டு இருக்கிறது என்று நினைத்தால் அதை நீங்கள் என்னிடம் சொல்லலாம். உங்களது செயல்பாடுகளைக் கோட்டையில் இருந்து இரண்டு கண்கள் கவனித்துக்கொண்டு இருக்கின்றன. அதை நீங்கள் மறந்துவிடக்கூடாது’’ என்று பேசினார். இதைக் குறிப்பெடுத்த உளவுத்துறை, தனது குறுக்குப் புத்தியைக் காட்டிவிட்டதாம்.
‘இரண்டு கண்கள் என்று அமைச்சரைக் குறிப்பிடாமல் தன்னைக் குறிப்பிட்டுக் கொண்டார்’ என்று ஒன்றரை மணி நேரப் பேச்சில் ஒரு நிமிடத்தை மட்டும் அமைச்சருக்குப் போட்டுக் காட்டியதாகவும் சொல்கிறார்கள். இவை அனைத்தும் சேர்ந்துதான் உதயச்சந்திரன் பதவிக்கு வேட்டு வைக்கக் காத்திருக்கின்றன.








