புதுடெல்லி: நாடு முழுவதும் ஒரே வரி விதிப்புக்கு வகை செய்யும் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த ஜூலை 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது. மாநில அரசுகள் மற்றும் தொழில் துறையினர் கோரிக்கைகளுக்கு ஏற்ப வரி விதிப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. இந்நிலையில், ஜிஎஸ்டி கவுன்சிலின் 22வது கூட்டம் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில் நேற்று தொடங்கியது. இதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. காம்போசிஷன் வரி ஜிஎஸ்டி வரி விதிப்பின் ஒரு அம்சமாக, காம்போசிஷன் வரி எனப்படும் இணக்க வரி உள்ளது. அதாவது, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிலில் ஈடுபட்டுள்வர்கள், அதாவது சில்லரை வணிகள், குடிசைத்தொழில் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளவர்கள் இந்த திட்டத்தில் குறைந்த அளவு வரி செலுத்தினால்போதும்.
முந்தைய நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட வர்த்தகம் ரூ.75 லட்சத்துக்கு கீழ் இருந்தால், ஜிஎஸ்டி வரி விதிப்பின் கீழ் காம்போசிஷன் திட்டம் எனப்படும் இணக்க வரி திட்டத்தை தேர்வு செய்து பயன்பெற முடியும். அதேநேரத்தில் சேவை அளிப்பதில் ஈடுபடுவோருக்கு இந்த வரியின் கீழ் சலுகை பெற முடியாது. தற்போது ரூ.75 லட்சம் என்ற இந்த உச்சவரம்பு ஒரு கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ரூ.1.5 கோடி வரை வர்த்தகம் செய்பவர்கள் மாதந்தோறும் கணக்கு தாக்கல் செய்வதற்கு பதிலாக, இனி மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தாக்கல் செய்தால் போதும். காம்போசிஷன் திட்டத்தின்படி ஒரு கோடி ரூபாய் மற்றும் அதற்கு கீழ் ஆண்டு வர்த்தகத்தில் ஈடுபடுவோர் குறைந்த வரி செலுத்தி பலன் பெற முடியும். தற்போது ஜிஎஸ்டியில் பதிவு செய்துள்ள 90 லட்சம் பேரில் 15 லட்சம் வணிகர்கள் காம்போசிஷன் திட்டத்தில் இணைந்துள்ளனர்.
காம்போசிஷன் திட்டப்படி, உற்பத்தியாளர் ஈட்டிய ஆண்டு வர்த்தகத்தில் ஒரு சதவீதம் மாநில ஜிஎஸ்டி, ஒரு சதவீதம் மத்திய ஜிஎஸ்டி சேர்த்து 2 சதவீதம் செலுத்த வேண்டி வரும். ரெஸ்டாரன்ட் நடத்துபவர்கள் 5 சதவீதம் வரியும், பிற பொருட்கள் சப்ளையில் ஈடுபட்டுள்ளவர்கள் ஒரு சதவீதமும் வரி செலுத்த வேண்டியிருக்கும். ஜிஎஸ்டி விதிமுறைகளுக்கு ஏற்ப அந்தந்த தொழில் ஈடுபட்டுவர்களுக்கு இந்த வரி விதிப்பு மாறுபடும்.
வரி விதிக்கப்பட முடியாத எந்த ஒரு பொருளையும் சப்ளை செய்திருக்க கூடாது, மாநிலத்துக்குள் மட்டுமே பொருட்களை சப்ளை செய்ய வேண்டும். ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்க கூடாது, ஐஸ்கிரீம், பான் மசாலா, புகையிலை போன்றவற்றை உற்பத்தி செய்பவராக இருக்க கூடாது. இவ்வாறு காம்போசிஷன் திட்டத்தில் பலன் பெறுபவர்கள் வரி திரும்பப்பெறும் சலுகைகள் பெற முடியாது.
இதுபோல் நேற்றைய ஜிஎஸ்டி கூட்டத்தில் 27 பொருட்களுக்கான வரிகள் குறைக்கப்பட்டுள்ளன. ஆயுர்வேத மருந்துகளுக்கான வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. கைத்தறி நூலுக்கு வரி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. காஸ் அடுப்பு 28%ல் இருந்து குறைந்த வரிபிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் இ-வே பில்: ஜிஎஸ்டி வரி விதிப்பில் ரூ.50,000க்கு மேல் மதிப்பிலான சரக்கு போக்குவரத்துக்கு இ-வே பில் கட்டாயமாக உள்ளது.பொருட்களின் தயாரிப்பு, விநியோகம், விற்பனை உள்ளிட்ட விவரங்களை கம்ப்யூட்டரில் பதிவேறறம் செய்து இ-வே பில் தயாரிக்கலாம்.
இந்த புதிய நடைமுறையை அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து இ-வே பில் நடைமுறைப்படுத்த கவுன்சிலில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜூலை மாதம் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதிக்கான ரீபண்ட் காசோலைகள் அக்டோபர் 10ம் தேதியிலும், ஆகஸ்ட் மாதம் ஏற்றுமதி செய்ததற்கான ரீபண்ட் காசோலைகள் 18ம் தேதியும் வழங்கப்படும். ஒவ்வொருவருக்கும் இ-வாலட் ஏற்படுத்தப்பட்டு ரீபண்ட் தொகை முன்கூட்டியே இதில் வழங்கப்படும். இந்த நடைமுறை அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது.
* குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து உணவு பாக்கெட்டுகளுக்கு 18%ல் இருந்து 5% ஆக வரி குறைப்பு.
* வெட்டப்பட்ட உலர்ந்த மாங்காய்களுக்கு 12%ல் இருந்து 5% ஆக வரி குறைப்பு
* பிராண்ட் அல்லாத ஆயுர்வேத மருந்துகளுக்கு 12%ல் இருந்து 5% ஆக வரி குறைப்பு.
* பிளாஸ்டிக், ரப்பு கழிவுகளுக்கு 18%ல் இருந்து 5% ஆக வரி குறைப்பு.
* காக்ரா மற்றும் சப்பாத்திகளுக்கு 5% வரி.
* பிராண்ட் அல்லாத மிக்சர், சேவ் உள்ளிட்ட திண்பண்டங்களுக்கு 5% வரி.
* பேப்பர் கழிவுகளுக்கு 12%ல் இருந்து 5% ஆக வரி குறைப்பு.
* கைத்தறி நூலுக்கு 18%ல் இருந்து 12% ஆக வரி குறைப்பு.
* மார்பிள், கிரானைட் உள்ளிட்ட தரையில் பதிக்கும் கற்களுக்கு 28%லிருந்து 18% ஆக வரி குறைப்பு.
* ஸ்டேஷனரி பொருட்களுக்கான வரி 28%ல் இருந்து 18% ஆக வரி குறைப்பு.
* ஜாப் ஒர்க் பணிகளுக்கு வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைப்பு.
* டீசல் இன்ஜின் உதிரி பாகங்களுக்கு 28%ல் இருந்து 18% ஆக வரி குறைப்பு.
* ஏசி உணவகங்களுக்கு 18%ல் இருந்து 12% ஆக வரி குறைக்க முடிவு.
* கைவினைப்பொருட்களுக்கு 12%ல் இருந்து 5% ஆக வரி குறைப்பு உள்ளிட்ட 26 பொருட்களுக்கு ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது.
* ஜரிகை வேலைகளுக்கான வரி 12%ல் இருந்து 5% ஆக குறைப்பு.







