
"சிவகங்கை மாவட்டம் 1985-ம் ஆண்டு முதல் இராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து
பிரிந்து தனியாக செயல்படுகிறது. இதில் சிவகங்கை, மானாமதுரை, திருப்புவனம்,
இளையான்குடி, தேவகோட்டை, காரைக்குடி, திருப்பத்தூர், காளையார்கோயில்
தற்பொழுது சிங்கம்புணரி என 9 தாலுகா செயல்பட்டு வருகிறது. இதில்
திருப்பத்தூர் மற்றும் சிங்கம்புணரி தாலுகாக்களைத் தவிர மற்ற தாலுகாவிற்கு
உட்பட்ட அனைத்து ஊர்களும் கடந்த ஊதியக்குழு வரை வகைப்படுத்தப்பட்ட வீட்டு
வாடகைப்படி பட்டியலில் வைக்கப்பட்டு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு
முறையான வீட்டு வாடகைப்படி வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் தமிழக அரசின் ஏழாவது ஊதியக்குழுவின் அறிக்கை அடிப்படையில்
புதிய ஊதிய உயர்வினை அரசாணை 303 மூலம் அக்டோபர் 11-ம் தேதி அறிவித்தது.
இதில் பல முரண்பாடுகள் உள்ளதாக ஆசிரியர் சங்கங்கள் குறை கூறி வருகின்றனர்.
இதுகுறித்து பல்வேறு போராட்டங்களையும் அறிவித்துள்ளனர். ஏற்கனவே
நீதிமன்றத்தை மீறி நடத்தப்பட்ட போராட்டம் குறித்த வழக்கு சென்னை
உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் இரண்டு முறை ஒத்தி வைக்கபட்டுள்ளது.
அந்த வழக்கு டிசம்பர் 20-ம் தேதி இறுதி விசாரணைக்கு வருகிறது. அரசு
ஊழியர்கள் பெறும் வீட்டு வாடகைப்படி குறித்து அக்டோபர் 13-ம் தேதி அரசாணை
305-ஐ தமிழக அரசு வெளியிட்டது. இதில் சிவகங்கையில் ஏற்கனவே வழங்கப்பட்ட படி
வழங்கப்படாமல் குறைத்து வழங்கப்பட்டுள்ளதாகவும், இதனால் சிவகங்கையில்
பணியாற்றும் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகை படியில்
ஆயிரம் ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படுவதாகவும் அதனைச் சரி செய்து துணை
அரசாணை வெளியிட தமிழக அரசிற்கு பரிந்துரை செய்யுமாறு தமிழ்நாடு
ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் லதாவிடம்
மனு அளிக்கப்பட்டது.
அதன் பின் ஜாக்டோ ஜியோ சார்பில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இளங்கோ தலைமையில்
சிவகங்கை மாவட்டத்தைச் சார்ந்த கதர் கிராம தொழில் வாரிய அமைச்சர்
பாஸ்கரனைச் சந்திந்து மனு அளிக்கப்பட்டது. அமைச்சரும் உரிய நடவடிக்கை
எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.