தபால் சேமிப்பு கணக்குகளுடன் ஆதாரை இணைப்பதில் காலக்கெடு நீட்டிப்பு
தொடர்பான உத்தரவு ஏதும் இதுவரை வரவில்லை என்று தபால் துறை அதிகாரிகள்
தெரிவித்தனர்.
இதனால், தபால் துறையில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ளோர்
கலக்கம் அடைந்துள்ளனர். உச்சநீதிமன்றத்தில் ஆதார் தொடர்பான வழக்கு
ஒன்றில், பல்வேறு நலத்திட்டங்கள், சேவைகளுக்கு ஆதாரை இணைப்பதற்கான
காலக்கெடுவை மார்ச் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கத் தயாராக உள்ளதாக மத்திய
அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, நிரந்தரக் கணக்கு
எண்ணுடன்(பான் எண்ணுடன்) ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடு அடுத்த ஆண்டு மார்ச்
31-ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுபோல, வங்கி
கணக்கு, தபால் சேமிப்பு கணக்கு உள்பட பல்வேறு சேவைகளுக்குடன் ஆதாரை
இணைப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தபால் துறையில் சேமிப்பு கணக்கு உள்பட பல்வேறு சேமிப்புத்
திட்டக் கணக்குகளுடன் ஆதாரை இணைப்பது தொடர்பாக காலக்கெடு நீட்டிப்பு பற்றி
இதுவரை அதிகாரப்பூர்வ உத்தரவு ஏதும் வரவில்லை என தபால் துறை வட்டாரங்கள்
தெரிவித்தன. இதுகுறித்து தபால்துறை உயரதிகாரிகள் கூறியதாவது:- தபால்
சேமிப்பு கணக்கு உள்பட பல்வேறு சேமிப்பு திட்ட கணக்குகளுடன் ஆதார் எண்ணை
வரும் 31-ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக
தபால் வட்டத்தில் 2 கோடியே 59 லட்சம் சேமிப்பு கணக்குகள் உள்ளன. இந்த
கணக்குகளில், 28 லட்சத்து 70 ஆயிரம் கணக்குகளுடன் ஆதார்
இணைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி
தீவிரமாக நடைபெற்று வருகிறது. தபால் சேமிப்பு கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க
காலக்கெடுவை நீட்டித்து எந்தவொரு உத்தரவும் தபால் துறைக்கு இதுவரை
வரவில்லை. அப்படி அறிவிப்பு வரும் பட்சத்தில் உடனடியாக மக்களுக்கு
தெரிவிக்கப்படும் என்றனர் அவர்கள். ஆதார் எண்ணை சேமிப்புக் கணக்குடன்
இணைக்க காலக்கெடு நீட்டிப்பு குறித்த அறிவிப்பு ஏதும் வராத சூழலில், தபால்
அலுவலகங்களில் கணக்கு வைத்துள்ளோர் கலக்கம் அடைந்துள்ளனர்.