பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்கள் தட்கல் முறையில் பொதுத் தேர்வுக்கு
விண்ணப்பிக்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம்
அறிவித்துள்ளது.
அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி நேற்று (டிசம்பர் 29) வெளியிட்ட
செய்திக்குறிப்பில், “தமிழகத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ்
2 பொதுத்தேர்வுகள் 2018 மார்ச் மாதம் தொடங்குகிறது. பத்தாம் வகுப்புக்கான
பொதுத் தேர்வுகள் மார்ச் 16ஆம் தேதி முதல் ஏப்ரல் 20 வரை நடைபெறவுள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பங்கேற்க விரும்பும் தனித்தேர்வர்கள்
டிசம்பர் 22ம் தேதி முதல் 29ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
என்று அறிவிக்கப்பட்டது. மேற்கண்ட தேதிக்குள் விண்ணப்பிக்கத் தவறிய தனித்
தேர்வர்கள் தட்கல் திட்டத்தின் கீழ் ஜனவரி 2ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரை
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்.
தேர்வர்கள் அரசுத் தேர்வுகள் சேவை மையங்கள் மூலமே விண்ணப்பிக்க வேண்டும்.
சேவை மையங்கள் பற்றிய விவரங்கள் www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில்
தெரிந்து கொள்ளலாம். தேர்வுக் கட்டணமாக 125 ரூபாயும், கூடுதலாகச் சிறப்பு
அனுமதி கட்டணமாக 500 ரூபாயும், ஆன்லைன் கட்டணமாக 50 ரூபாயும் செலுத்த
வேண்டும். மொத்தமாகத் தேர்வர்கள் 675 ரூபாய் செலுத்த வேண்டும். தட்கல்
திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் அனைத்து தனித் தேர்வர்களுக்கும் அந்தந்த
கல்வி மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும்” எனத்
தெரிவித்துள்ளார்.







