
கிராமப்புற மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில், மத்திய, மாநில ஊரக வளர்ச்சித் துறைகள் மூலமாக வெவ்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மத்திய அரசுத் திட்டங்களையும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகளே மேற்கொள்கின்றனர். இதில், பிரதமரின் கிராம இணைப்பு சாலைத் திட்டம், தேசிய வேலை உறுதித் திட்டம், கிராமப்புற மக்களுக்கு கான்கிரீட் வீடு கட்டும், 'ஆவாஸ் யோஜனா' திட்டம் முக்கியமானவை.
பொதுமக்கள் பயனடையும் வகையில், கிராம இணைப்பு சாலை திட்டத்துக்கு, அதிக நிதி ஒதுக்கப்படுகிறது. தலா, 50 லட்சம் ரூபாயில் அமைக்கப்படும் இந்தச் சாலைகளின் தரத்தை, மாநில அரசால் நியமிக்கப்படும், கண்காணிப்புக் குழு ஆய்வு செய்கிறது. மத்திய அரசின் கண்காணிப்பு குழு, ஆண்டுக்கு ஒருமுறை, மாவட்டம் வாரியாக வந்து, தரத்தை உறுதி செய்கிறது.
தற்போது, சாலைப் பணிகளின் தரம் குறித்து, பொதுமக்கள் புகார் செய்வதற்காக மத்திய அரசு, மெரி சதக் என்ற புதிய செயலியை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தச் செயலியின் மூலம், கிராம இணைப்பு சாலைகளின் தரம், பணிக்காலம், பராமரிப்பு குறித்த புகாரைப் புகைப்பட ஆதாரத்துடன் பதிவு செய்யலாம்.
இது குறித்து ஊரக வளர்ச்சித் துறை பொறியியல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், குறைந்தது மூன்று புகைப்படத்துடன் புகார் பதிவு செய்தால், அடுத்த ஏழு நாட்களுக்குள் அரசு தரப்பில் இருந்து பதில் கிடைக்கும். அதேபோல், 60 நாட்களுக்குள், புகாருக்கு இறுதியான தீர்வு வழங்கப்படும்.இது தொடர்பாக ஒன்றிய அலுவலகம், ஊராட்சி அலுவலகங்களில், பேனர் வைத்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது என்று அவர்கள் தெரிவித்தனர்.
மெரி சதக் செயலி : Meri Sadak