தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மையம்
கொண்டுள்ளதால் தமிழக கடலோரங்களில் நாளை முதல் இரண்டு நாட்கள் மழை பெய்ய
வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தகவல்
அளித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த ஆண்டு அக்டோபர்
மாதம் 27ம் தேதி தொடங்கி, டிசம்பர் 31ம் தேதி நிறைவடைந்து. இந்த ஆண்டு
பருவமழை 9 சதவீதம் குறைவாக பதிவானது. தற்போது பனியின் தாக்கம் அதிகமாக
இருக்கும் நிலையில், வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மையம்
கொண்டுள்ளதால் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல்
அளித்துள்ளது. இதுகுறித்து பேசிய பாலச்சந்திரன், தென்கிழக்கு வங்கக்கடல்
மற்றும் அதை ஒட்டியுள்ள தெற்கு அந்தமான் பகுதியில் குறைந்த காற்றழுத்த
தாழ்வுப் பகுதி மையம் கொண்டுள்ளது.
இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரங்களில் ஓரிரு இடங்களில்
நாளை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளார். சென்னையை பொறுத்தவரை
வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில் மழை
பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் இன்று வறண்ட
வானிலை காணப்படும் என்றும், வடக்கிழக்கில் இருந்து நிலக்காற்று வீசுவதால்
இரவில் குளிர்ந்த நிலை ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகம்
மற்றும் புதுச்சேரி கடலோரங்களில் இன்று வடகிழக்கில் இருந்து மணிக்கு 45
கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும். இதனால் ஆழ்கடலுக்கு
மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று
கூறப்பட்டுள்ளது.







