நாம் வேலை பார்த்து பணம் சம்பாதித்து வாழ்க்கையை நடத்துவது என்பது கடமை. நாம் வேலை பார்த்து பணம் சம்பாதிப்பது என்பது சாப்பிடுவதற்காக, குடும்பத்தை நடத்துவதற்காக என்ற அளவில் நமது சிந்தனையை நிறுத்திவிடக்கூடாது.
பலர் என்ன நினைக்கிறார்கள், வேலைப் பார்ப்பது என்பதே பணம் சம்பாதிப்பதற்காக என்ற கருத்தை மனதில் வைத்திருக்கிறார்கள். பணம் கிடைக்காது என்றால் யாரும் வேலை பார்க்க மாட்டார்கள். பணத்திற்காக மட்டுமே இந்த உலகத்தில் உழைக்க முடியாது.
உன்னை விட வேலை உயர்ந்தது :
நாம் எந்த வேலை வேண்டுமானாலும் பார்க்கலாம், ஆனால் அதை முழு ஈடுபாட்டோடு பார;க்க வேண்டும் என்பது மிக முக்கியம். ஏனென்றால் உன்னை விட வேலை உயர்ந்தது. நான் என்ற அகங்காரத்தோடு எந்த வேலையையும் செய்யக்கூடாது.
காரணம் மனிதர்கள் பிறக்கிறார்கள், இறக்கிறார்கள் வேலைதான் உலகத்தில் தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறது. வேலை அழிவதில்லை மனிதர்கள் அழிகிறார்கள். இந்த நுட்பத்தை புரிந்து கொண்டால் போதும். எந்த வேலை பார்க்கிறோமோ அதை முழு ஈடுபாட்டோடு பார்க்க வேண்டும்.
வேலையை உயர்வாக நினைக்க வேண்டும் :
வேலையை விட தன்னை உயர்வாக நினைக்கக்கூடாது. இந்த கருத்தை விதையிட்ட நு}ல் மகாபாரதம்.
பெரிய சத்தம் எப்போதும் கேட்டுக்கொண்டே இருக்கும் யுத்தகளத்தில் அர்ஜூனனுக்கு தேர் ஓட்டுகிறான் கண்ணன். அர்ஜூனன், தேரை இடதுபக்கம் திருப்பு என்று சொல்ல வேண்டும், வலது பக்கம் திருப்பு என்று சொல்ல வேண்டும். அர்ஜுனன் சொல்வது கண்ணனுக்கு எப்படி கேட்கும். சொல்லுவது கேட்காத சூழ்நிலையில் கண்ணன் ஒரு யோசனை சொல்லுகிறார்.
அர்ஜுனா, நீ தேரில் பின்னாலே உட்காந்திருக்கிறாய் என்னை இடதுபக்கம் திரும்பு என்று சொன்னால் என் காதில் விழாது. நீ உனது இரண்டு கால்களையும் பின்னி எனது கழுத்தில் உனது வலது கால் கட்டை விரலாலே எனது வலது கன்னத்தை இடித்தால் நான் திருப்பி இடது பக்கம் திருப்ப வேண்டும் என்றும், இடது கன்னத்தை இடித்தால் வலது பக்கம் திரும்ப வேண்டும் என்று பொருள். அர்ஜுனா உனது கால் விரல்களால் என் கன்னத்தை இடி என்று சொல்லுகிறார்.
அர்ஜுனன் மனிதன், கண்ணன் கடவுள் அதை பற்றி கவலையில்லை. அர்ஜுனன் இப்போது தேரில் அமர்ந்திருப்பவன். கண்ணன் தேரை ஓட்டுபவன் எவரும் தன்னை பெரியவனாக நினைக்கக்கூடாது பார்க்கிற வேலைக்கு ஏற்ப நடக்க வேண்டும் என்பதை கண்ணன் போதித்தான்.
தான் பார்க்கிற தொழில் பெரியதென்ற எண்ணம் எல்லோர் மனதிலும் இருக்க வேண்டும். பார்க்கிற வேலையில் உயர்ந்தது, தாழ்ந்தது என்பது வேலையை பொருத்தது அல்ல.
நீ ஒரு வேலையை செய்து முடித்தபிறகு அந்த வேலையை இன்னொருவர் செய்ய வேண்டிய அவசியம் இருக்கக்கூடாது. ஆகவே நீங்கள் செய்யும் வேலையை மனநிறைவோடும் உயர்ந்த எண்ணத்தோடும் செய்ய வேண்டும்.







