பரமத்திவேலூர் அருகே அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு பெற்றோர்கள் கல்விச்சீர் வழங்கும் புதுமையான நிகழ்ச்சி நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளியில் 234 மாணவ, மாணவியர்கள் படித்து வருகின்றனர். அவர்களுக்கு 9 ஆசிரியைகள் மட்டுமே பயிற்றுவித்து வருகின்றனர். மாணவர்களுக்கு கணினி பயன்பாட்டு பயிற்சி, ஆங்கிலத்தில் பேசுவது, ஓவியப்பயிற்சி உள்ளிட்ட சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது கூடுதல் ஆசிரியர்களை நியனம் செய்தால், இன்றும் சிறப்பாகச் செயல்பட முடியும் என தலைமை ஆசிரியர் தெரிவித்து இருந்தார்.
இதனைத்தொடர்ந்து அந்த அரசு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர்களின் பெற்றோர்கள் சார்பில் கல்விச்சீர் வழங்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் ஊர்வலமாக பள்ளிக்கு சென்று எழுது பொருட்கள், நோட்டு புத்தகங்கள், சீருடைகள், விளையாட்டு பொருட்களை கல்விச்சீராக வழங்கியுள்ளனர். இந்தப் புதுமையான நிகழ்வு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.









