இது குறித்து, திருவள்ளூர் மாவட்டம், ஞாயிறு அரசு மேல்நிலை பள்ளி, வேதியியல் ஆசிரியர், ஸ்ரீதர் கூறியதாவது: ஏ - பிரிவு வினாக்களில், 1, 18 ஆகிய ஒரு மதிப்பெண் கேள்விகளும், 41, 47 ஆகிய, மூன்று மதிப்பெண் கேள்விகளும், மாணவர்களின் புரிந்து படிக்கும் கற்றல் திறனை சோதிப்பதாக இருந்தன. நன்றாக படித்த மாணவர்கள், மொத்தம், 150 மதிப்பெண்களுக்கான வினாக்களில், 140 மதிப்பெண் பெற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
சென்டம் அதிகரிக்கும் : பிளஸ் 2 வணிகவியல் பிரிவு மாணவர்களுக்கு, நேற்று அக்கவுன்டன்சி என்ற கணித பதிவியல் தேர்வு நடந்தது. ஆண்டுதோறும், இந்த தேர்வில் சில வினாக்கள் அல்லது விடைக்குறிப்புகளில் பிழை இருப்பது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு வினாத்தாள் குழப்பம் இன்றி, மிக தெளிவாக இருந்ததாக மாணவர்கள் கூறினர்.
இதுகுறித்து, சென்னை சவுகார்பேட்டை, ஏ.பி.பரேக் குஜராத்தி மேல்நிலைப்பள்ளி ஆசிரியர், ஏ.பி.பழனி கூறுகையில், ''இதுவரை இல்லாத அளவுக்கு, மிக எளிமையான கேள்விகள் இடம் பெற்றன. புத்தகங்களில் உள்ள உதாரண கேள்விகள், வகுப்புகளில் மாணவர்கள் பயிற்சி எடுத்த கேள்விகள், அதிகம் இருந்தன. 2017ஐ விட, இந்த ஆண்டு அக்கவுன்டன்சியில் அதிக மாணவர்கள், 'சென்டம்' எடுக்க வாய்ப்புள்ளது,'' என்றார்.








