சிறப்புக் கட்டுரை: கல்வியறிவு வளர்ச்சியில் கன்னியாகுமரியின் ஆதிக்கம்!!!
சிறப்புக் கட்டுரை: கல்வியறிவு வளர்ச்சியில் கன்னியாகுமரியின் ஆதிக்கம்!!!
அ.விக்னேஷ்
முந்தைய கட்டுரையில் தமிழகத்தில் கல்வியறிவு விகிதத்தின் ஏற்ற இறக்கங்கள், கல்வியறிவு விகிதத்தில் பெண்கள் அடைந்துள்ள வளர்ச்சி, கல்வியறிவில் தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் பழங்குடியினரின் வளர்ச்சி குறித்துப் பார்த்தோம். இந்தக் கட்டுரையில் மேலும் சில புள்ளிவிவரங்களை அலசலாம்.
கல்வியறிவு விகிதத்தில் தமிழக மாவட்டங்களின் வளர்ச்சி:
ஊரகக் கல்வியறிவு விகித வளர்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்டம் முன்னிலையில் உள்ளது. கடந்த பத்து ஆண்டுகளாக கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஊரகக் கல்வியறிவு விகித வளர்ச்சி 9.8 விழுக்காடாக உள்ளது. ஊரகக் கல்வியறிவு விகித வளர்ச்சியில் மதுரை மிகக்குறைவான வளர்ச்சியைக் கொண்டுள்ளது. மதுரையின் ஊரகக் கல்வியறிவு விகித வளர்ச்சி 2.68 விழுக்காடாகும்.
2001ஆம் ஆண்டில், ஊரகக் கல்வியறிவு விகித வளர்ச்சியில், 86.17 விழுக்காட்டுடன் கன்னியாகுமரி மாவட்டம் முதலிடத்தில் இருந்துள்ளது. 57.27 விழுக்காட்டுடன் சேலம் மாவட்டம் கடைசி இடத்தில் இருந்தது. 2011ஆம் ஆண்டிலும் ஊரகக் கல்வியறிவு விகித வளர்ச்சியில் 90.95 விழுக்காட்டுடன் (தேசியச் சராசரி 72.99 விழுக்காடு) கன்னியாகுமரி மாவட்டம் முதலிடத்தில் இருந்துள்ளது. 62.69 விழுக்காட்டுடன் தர்மபுரி மாவட்டம் கடைசி இடத்தில் உள்ளது.
2001ஆம் ஆண்டில் நகர்ப்புறக் கல்வியறிவு விகித வளர்ச்சியில் 88.29 விழுக்காட்டுடன் கன்னியாகுமரி மாவட்டம் முதலிடத்தில் இருந்துள்ளது. 73.64 விழுக்காட்டுடன் ஈரோடு கடைசி இடத்தில் இருந்துள்ளது. 2011ஆம் ஆண்டில் நகர்ப்புற கல்வியறிவு விகித வளர்ச்சியில் 92.4 விழுக்காட்டுடன் கன்னியாகுமரி மாவட்டம் தொடர்ந்து முன்னிலையில் இருந்துள்ளது. 74.23 விழுக்காட்டைக் கொண்டிருந்த தர்மபுரி மாவட்டம் கடைசி இடத்தைப் பெற்றது. 2001-2011 காலகட்டத்தில் பெரம்பலூர் மாவட்டம் அதிகபட்ச கல்வியறிவு விகித வளர்ச்சியை எட்டியுள்ளது. இக்காலகட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்தின் கல்வியறிவு விகிதம் 6.47 விழுக்காடு வளர்ச்சியை எட்டியுள்ளது.
மாவட்டங்களின் கல்வியறிவு விகித வளர்ச்சியில் உள்ள பாலின இடைவெளி:
2011ஆம் ஆண்டில் ஆண் - பெண் கல்வியறிவு விகித வளர்ச்சியில் கன்னியாகுமரி மாவட்டம் முன்னிலையில் இருந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆண்களின் கல்வியறிவு விகித வளர்ச்சி 93.86 விழுக்காடாகவும், பெண்களின் கல்வியறிவு விகித வளர்ச்சி 90.45 விழுக்காடாகவும் இருந்துள்ளது. தர்மபுரி மாவட்டத்தின் வளர்ச்சி மிகக் குறைவாக இருந்தது. தர்மபுரி மாவட்டத்தில் ஆண்களின் கல்வியறிவு விகித வளர்ச்சி 69.16 விழுக்காடாகவும், பெண்களின் கல்வியறிவு வளர்ச்சி விகிதம் 60.03 விழுக்காடாகவும் இருந்துள்ளது.
ஊரக ஆண்களின் கல்வியறிவு வளர்ச்சி விகிதத்தில் 92.49 விழுக்காட்டுடன் கன்னியாகுமரி மாவட்டம் முதலிடத்திலும், நகர்ப்புற ஆண்களின் கல்வியறிவு வளர்ச்சி விகிதத்தில் 94.17 விழுக்காட்டுடன் புதுக்கோட்டை மாவட்டமும், சிவகங்கை மாவட்டமும் முன்னிலையில் உள்ளன. ஊரகப் பெண்களின் கல்வியறிவு வளர்ச்சி விகிதத்தில் 89.42 விழுக்காட்டுடனும், நகர்ப்புற பெண்களின் கல்வியறிவு வளர்ச்சி விகிதத்தில் 90.67 விழுக்காட்டுடனும் கன்னியாகுமரி மாவட்டம் முதலிடத்தில் உள்ளது.
கல்வியறிவில் உள்ள பாலின இடைவெளி:
கல்வியறிவின் ஒட்டுமொத்த வளர்ச்சியைக் கணக்கிடுகையில், கல்வியறிவில் உள்ள பாலின இடைவெளி எவ்வளவு குறைந்துள்ளது என்பதில் முக்கியக் கவனம் செலுத்தப்பட வேண்டும். 1981ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த இந்தியாவை விட தமிழ்நாட்டில் கல்வியறிவில் உள்ள பாலின இடைவெளி அதிகமாக இருந்தது. எனினும், 1981ஆம் ஆண்டுக்குப் பிறகு கல்வியறிவில் பாலின இடைவெளியைக் குறைப்பதில் தமிழ்நாடு வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அகில இந்தியாவை விடவும் இவ்விவகாரத்தில் தமிழகம் சிறப்பாகச் செயலாற்றியுள்ளது.
1961ஆம் ஆண்டில், கல்வியறிவில் உள்ள பாலின இடைவெளி இந்தியாவில் 30.5 விழுக்காடாகவும், தமிழ்நாட்டில் 25.1 விழுக்காடாகவும் இருந்துள்ளது. 1971ஆம் ஆண்டில், கல்வியறிவில் உள்ள பாலின இடைவெளி இந்தியாவில் 28.6 விழுக்காடாகவும், தமிழ்நாட்டில் 23.9 விழுக்காடாகவும் இருந்துள்ளது. 1981ஆம் ஆண்டில், கல்வியறிவில் உள்ள பாலின இடைவெளி இந்தியாவில் 27.5 விழுக்காடாகவும், தமிழ்நாட்டில் 22.1 விழுக்காடாகவும் இருந்துள்ளது. 1991ஆம் ஆண்டில், கல்வியறிவில் உள்ள பாலின இடைவெளி இந்தியாவில் 22.4 விழுக்காடாகவும், தமிழ்நாட்டில் 24.8 விழுக்காடாகவும் இருந்துள்ளது. 2001ஆம் ஆண்டில், கல்வியறிவில் உள்ள பாலின இடைவெளி இந்தியாவில் 17.9 விழுக்காடாகவும், தமிழ்நாட்டில் 21.6 விழுக்காடாகவும் இருந்துள்ளது. 2011ஆம் ஆண்டில், கல்வியறிவில் உள்ள பாலின இடைவெளி இந்தியாவில் 13 விழுக்காடாகவும், தமிழ்நாட்டில் 16.6 விழுக்காடாகவும் இருந்துள்ளது.
தொடக்க நிலைக் கல்வி:
தொடக்க நிலைக் கல்வியைப் பெறுவதற்கும், மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்கும், ஆரம்ப நிலைக் கல்வியில் அவர்களை வைத்திருப்பதற்கும் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தியதில் தமிழ்நாடு அரசு முன்னிலையில் உள்ளது.
தொடக்க நிலைக் கல்வியை மேம்படுத்துவதற்கு முக்கிய முயற்சியாகத் தொடக்க நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை நிலையாக உயர்த்தப்பட்டுள்ளது. தொடக்க நிலைப் பள்ளிகள் உயர்த்தப்பட்டால் தொடக்க நிலைக் கல்வியைப் பெறுவதற்கான வாய்ப்புகள் குழந்தைகளுக்கு அதிகரிக்கும். தொடக்க நிலைக் கல்வி வழங்குவதில் மாநில அரசு, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அரசு உதவியுடன் இயங்கும் பள்ளிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. தனியார் பள்ளிகளின் எண்ணிக்கையும் சிறப்பாக வளர்ந்துள்ளது. 2002-03 ஆண்டில் தனியார் உதவிபெறும் பள்ளிகளின் விகிதம் 4.16 விழுக்காட்டிலிருந்து 2011-12 ஆண்டில் 18.96 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
சிறப்புத் தகவல்:
2011ஆம் ஆண்டில் மாநிலத்துக்கான வரையறையில் ஆதரவற்றோர், ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், திருநங்கைகள், குப்பை சேகரிப்புத் தொழிலாளர்களின் குழந்தைகள் ஆகியோரும் இணைக்கப்பட்டனர். ஒரு குழந்தையின் பெற்றோரோ, பாதுகாவலரோ ஆண்டுக்கு 2 லட்சம் ரூபாய்க்கும் குறைவான ஊதியம் பெற்றால், அக்குழந்தை ஏழ்மைச் சமூகத்தைச் சேர்ந்ததாக இந்த ஆவணத்தில் வரையறுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.









