வேலூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்தில் உள்ள ராஜாவூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி. இது எப்படிச் சாத்தியமானது என்பதைத் தலைமையாசிரியர் இந்திரா நம்மோடு பகிர்ந்துகொண்டவற்றைப் பார்ப்போம்… ‘‘இந்த உலகத்தையும் அதன் செயல்பாடுகளையும் குழந்தைகள் தங்கள் பெற்றோர்களிடமும் அவர்களின் ஆசிரியர்களிடமுமிருந்துதான் கற்றுக்ெகாள்கிறார்கள். எனவே, மற்றவர்களுக்கு நாம் ஒரு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கல்விப் பணியில் என்னை முழுவதுமாக அர்ப்பணித்துச்செயலாற்றி வருகிறேன். பள்ளியும் அங்கு பயிலும் மாணவர்களின் கல்வித்தரமும் உயர வேண்டுமென்றால் ஆசிரியரின் பங்களிப்பு நிச்சயம் வேண்டும்.
இடைநிலை ஆசிரியராக இருந்தபோது பள்ளியில் படிக்கும் 50 மாணவர்களுக்கு மாதம் தலா ரூ.20 வீதம் என் சொந்தப் பணத்தில் கொடுத்து 5 ஆண்டுகள் தொடர் வைப்புநிதியில் அஞ்சலகத்தில் சேமிப்புக் கணக்கு ஆரம்பித்து மாதந்தோறும் ரூ.500 சேமித்துச் சேமிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்தினேன்.முதன்முதலாகத் தலைமையேற்றபோது எங்கள் பள்ளி மாணவர்களின் மொத்த எண்ணிக்கை 17 மட்டுமே. இது ஈராசிரியர் பள்ளி. பொறுப்பேற்றவுடன் இந்தப் பள்ளியின் நிலைமை எனக்கு மிகுந்த வேதனையும், மனஉளைச்சலும் ஏற்படுத்திவிட்டது. ஏனெனில், இதற்குமுன் நான் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை 600. இங்கு மொத்த மாணவர்களின் எண்ணிக்கையே 17 தான். அது மட்டுமில்லாமல் இது S.S.A. திட்டத்தின் பள்ளி
(சர்வசிக்ஷ அபியான்). இந்த ஊருக்குப் பேருந்து வசதிகூட இல்லை. படிப்பறிவில்லாத மிகவும் ஏழ்மையான மக்கள் வசிக்கும் பகுதி. மனஉளைச்சலில் இருந்த எனக்குத் தைரியம் கொடுத்தவர்கள் என் கணவரும் (காவல் துறை ஆய்வாளர்) உடன் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் நண்பர்களும்தான்’’ என்று மகிழ்ச்சியோடு பேசத் தொடங்கினார்.‘‘கல்லும் மேடும், குண்டும் குழியுமான இடத்துக்கு நடுவில் பள்ளி. ஒருபுறம் மட்டும் சுற்றுச்சுவர் இருந்தது. அப்போதுதான் என் மனதில் என்னுடைய ரோல் மாடல் (Role Model) டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் கூறிய ‘கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே, அது உன்னைக் கொன்று விடும். கண்ணைத் திறந்து பார் நீ அதை வென்றுவிடலாம்’ என்ற வார்த்தை உறைத்தது. இதை மனதில்கொண்டு செயல்படத் தொடங்கினேன். முதலில் ஜே.சி.பி. கொண்டு குண்டும் குழியுமான இடத்தை என் சொந்தப் பணத்தில் சரிசெய்து மரக்கன்றுகள் நடவு செய்தேன். இதைப் பார்த்த ஊர் மக்கள் என்னைப் பாராட்டியதோடு உதவி செய்ய முன்வந்தனர். ராணுவ வீரர்கள் இருவர் பள்ளிக்கு கேட் (Gate) அமைத்துக் கொடுத்தனர்.
அதன்பிறகு மாணவர்களுக்குப் பாடப் புத்தகத்தை மட்டும் கற்பிப்பதை விடுத்து வேறுவிதமாக (நாடகம், பாட்டு, விளையாட்டு) பொதுஅறிவுச் செய்திகளையும், திருக்குறளை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கோடு சொல்லிக் கொடுத்தேன். இதில் 4ஆம் வகுப்பு மாணவி ஒருவர் 1330 திருக்குறளை ஒப்புவிக்கும் போட்டியில் வென்று தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் ரூ.10,000 மாவட்ட ஆட்சியர் கையால் பெற்றார். இதன் விளைவாக என்னைப் பாராட்டி தமிழக அரசு 2013ல் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கியது. ஆனால், இதைப் பார்க்க, ரசிக்க என் கணவர் இல்லாமல் போய்விட்டார். மாரடைப்பில் (Heart attact) இறந்துவிட்டார். இதனால், நான் மிகவும் துவண்டுபோனேன். கல்வி அதிகாரிகள் என்னை அழைத்து நீ சாதிக்கப் பிறந்தவள், மனக்கஷ்டத்தை விட்டு வெளியில் வரவேண்டும் என ஊக்கமளித்து அழைத்து வந்தனர்’’ என்றவர், கவலையோடு அமைதியானார்.
மீண்டும் தொடர்ந்த தலைமையாசிரியர் ‘‘எனது கஷ்டங்களை மறப்பதற்காகவே கல்விப் பணியை மீண்டும் ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு மாணவர்களின் நலனே என் நலன் எனக் கருதி கல்வித்தரத்திலும், பொருளாதாரத்திலும் முன்னுக்குக் கொண்டுவந்து இந்தப் பள்ளியை ஒரு சாதனைப் பள்ளியாக்கிட முடிவெடுத்தேன். சென்னைத் தலைமைச் செயலகத்தில் முன்னாள் கல்வி அமைச்சர் K.C. வீரமணி, பள்ளிக் கல்விச் செயலர் சபீதா ஆகியோர் முன்னிலையில் 4 மாணவர்களைக்கொண்டு கின்னஸ், ஜெட்லி, இந்தியா, லிம்கா போன்றவற்றில் மாணவர்களின் திறமைகளை வெளியே கொண்டுவந்தேன். இதற்கான பதிவுச் சான்றிதழ் கிடைத்துள்ளது.










