தென் மேற்கு பருவ மழை, அக்., 21ல் ஓய்வு பெற்றது. பின், அக்., 26ல், வட கிழக்கு பருவ மழை துவங்கும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அக்., 26ல், வட கிழக்கில் இருந்து, பருவ காற்று வீச துவங்கியது; மழை துவங்கவில்லை.
இந்நிலையில், பருவ காற்று வலுவடைந்துள்ளதால், இந்த வாரம், கட்டாயம் மழை துவங்கும் என, எதிர்பார்க்கப்பட்டது. இதன்படி, நேற்று முதல், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், லேசான துாரல் துவங்கியது. வடகிழக்கு பருவ மழை, இன்று முதல் தீவிரம் அடைந்து, கடலோர மாவட்டங்களில் கன மழையாக கொட்டும் என, தெரிகிறது. மேலும், நாளையும், நாளை மறுநாளும் மழை நீடிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து, இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், 'தமிழகம், புதுச்சேரி, கேரளா மற்றும் ஆந்திராவில், வட கிழக்கு பருவ மழை, நாளைக்குள் தீவிரம் அடையும்' என, கூறப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர், பாலச்சந்திரன் கூறியதாவது: வங்க கடலின் தென் மேற்கில், வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. நாளைக்குள், வட கிழக்கு பருவ மழை தீவிரம் அடையும். சென்னையில், சில இடங்களில் மிதமான மழை பெய்யும். மாநிலம் முழுவதும், படிப்படியாக மழை அதிகரிக்கும். இவ்வாறு, அவர் கூறினார். இதற்கிடையில், நாளை, ஒன்பது மாவட்டங்களில் கன மழை பெய்யும் என, எச்சரிக்கப்பட்டு உள்ளது.








