ஒரு சிறிய கதை; காஃபி குடித்த டம்ளரை என்னிடமிருந்து வாங்கிக்கொண்ட என் மனைவி, நகராமல் அப்படியே நின்றாள். - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Saturday 20 October 2018

ஒரு சிறிய கதை; காஃபி குடித்த டம்ளரை என்னிடமிருந்து வாங்கிக்கொண்ட என் மனைவி, நகராமல் அப்படியே நின்றாள்.

 என்ன ' என்பதுபோல் வைதேகியை ஏறெடுத்துப் பார்த்தேன்.

" உங்கப் பையனும் மருமகளும் நாளை காலையில ஹனிமூன் முடிஞ்சூ சிம்லாவிலேர்ந்து திரும்பி வராங்க..."

" சரி. அதுக்கென்ன இப்போ ?"

" அவங்க தங்க ரூம் வேண்டாமா..அந்த ரூம்லதான உங்க அம்மா தங்கியிருக்காங்க ! இவ்வளவுநாள் இருந்தது போதும். அவங்கள ஹாலுக்கு ஷிப்ட் பண்ணச் சொல்லுங்க ."


வாஸ்தவம்தான். முப்பது வருஷத்துக்கு முன்னால் என் தந்தை கட்டிய வீடு.பாத் ரூம் அட்டாச்சுடன் இரண்டு படுக்கையறைகள். ஹால். அதிலும் அட்டாச்டு பாத்வசதி உண்டு.

சமையலறை; டைனிங் ரூம் ; பூஜையறை என்று விஸ்தாரமாய் கட்டப்பட்ட வீடு. இப்போது என் அம்மா தங்கிக் கொண்டிருக்கும் அறைதான் என் தந்தை உபயோகித்தது.

நான் இருக்கும் படுக்கையறையை ஆரம்பத்திலிருந்தே பயன்படுத்தி வருகிறேன்.

எனக்குத் திருமணமாகி ஐந்து வருடங்கள்வரை என் தந்தை உயிருடன் இருந்தார்.

இன்றுவரை தன்ரூம் என்ற உரிமையுடன்
இருந்து வருகிறாள் அம்மா. இப்போது தடாலென்று ஹாலுக்கு வரச் சொன்னால்...

அதுவும் உறவினர் , நண்பர்கள் அடிக்கடி வருவர். ஹாலில் உட்கார்ந்தபடிதான் பேசுவர். அது அம்மாவுக்கு இடைஞ்சலா இருக்காதா ? தனக்கென்று இருக்கும் பிரைவேஸி இல்லாமல் எப்படி மீதியிருக்கும் காலத்தை தள்ளுவாள் ! நினைக் கும்போது தொண்டையை அடைத்தது எனக்கு.

" என்ன பதில் இல்ல...உங்களுக்கு சொல்ல கஷ்டமாயிருந்தால் நான் உங்கம்மாக்கிட்டப் பேசறேன்."

' ஹாலுக்கு ஷிப்ட்டாகி வாம்மா ' என்று நான் கேட்பதைவிட என் மனைவியே கேட்பதுதான் சரி என மனதில் பட்டது.

" சரி வைதேகி ! நீயே கேட்டுடு " என்றேன்.

அடுத்த ஐந்து நிமிடங்களில் வைதேகி என் அம்மா படுத்திருக்கும் அறைக்குள் நுழைந்தாள்.

" அத்தை !" குரல் கேட்டதும் அம்மா விசுக்கென்று எழுந்து உட்கார்ந்தாள்.

நாளைக் காலை உங்க பேரனும் அவன் பெண்டாட்டியும் டூர் முடிஞ்சு திரும்பி வராங்க. அவங்க தங்க ரூம் வேண்டாமா.. நீங்க காலிபண்ணிக் கொடுத்தால்தானே அவங்க இங்க தங்க முடியும் ! தயவு செஞ்சு நிலைமையைப் புரிஞ்சுக்கிட்டு ஹாலுக்கு வரப் பாருங்க " என்று கூறி விட்டுத் திரும்பினாள்.

அவள் அடுக்களைக்குள் நுழைந்ததும் நான் அம்மா படுத்திருந்த அறைக்குள் நுழைந்தேன் .

அம்மாவைப் பார்க்க பாவமாயிருந்தது!
பிரம்மை பிடித்தால் போல் அமர்ந்திருந்தாள் ! இதுவரை ஸ்வாதீனத்தோடு உரிமை கொண்டாடிய பிரைவேட் ரூம் தனக்கு கிடையாது இனி கிடையாது என்பதை அவளால் தாள முடியவில்லை.

அம்மா அருகில் கட்டில் மீது உட்கார்ந்தேன்.

என் கைகளை ஆதூரத்துடன் பற்றிக்கொண்டாள். அவள் கைகள் நடுங்கின.

" உனக்கு இஷ்டமில்லேன்னா நீ ஹாலுக்கு வரவேணாம்மா ! இங்கேயே இருந்துக்கோ. " மேலுக்குச் சொல்லி பெருமூச்
சொன்றை விட்டேன்.

" அது கூடாதுடா ராகவா ! சின்னஞ்சிறுசுகள். அதுங்க ஹால்ல தங்கமுடியாது...
எனக்கென்ன..நான் ஒண்டிக்கட்டை !
ஹாலுக்குத்தானே போகப்போறேன்.
வீட்டைவிட்டு இல்லையே !"

அம்மா இப்படிச் சொன்னதும் எனக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டேன்.

சிறிதுநேரம் மெளனமாயிருந்த அம்மா தொடர்ந்தாள்.

" ராகவா ! நீ குழந்தையா இருந்தபோது
இதே கட்டில்லதான் என்னோட படுத்திருந்தே. உடம்புக்கு முடியாம நான் இருக்கறபோது உங்கப்பா சாதம் பிசைந்துகொண்டுவந்து இந்தக் கட்டில்ல உட்கார்ந்துதான் உனக்கு சாதம் ஊட்டுவார்... எத்தனை தடவைகள்....அதெல்லாம் மறக்க முடியுமா....கைகளை என்னிடமிருந்து விடுவித்து கட்டிலை ஆதங்கத்துடன் தடவிப் பார்த்துக் கொண்டாள்.

சட்டென என்னை நோக்கித் திரும்பிய அம்மா , " டேய் ராகவா ! இன்னிக்கு ராத்திரி மட்டும் என்னை இங்க தங்கவிடுடா.
நாளை உதயத்தில் நான் ஹாலுக்கு வந்துடறேன் " என் கையைப் பிடித்து கெஞ்ச, துக்கம் பீறிட்டது எனக்கு.

" சரிம்மா ! நீ படுத்துத் தூங்கு !" இன்னும்கொஞ்சநேரம் அங்கு தங்கினால் நான்
ஓ வென்று அழுதுவிடுவேன், என எண்ணி அம்மாவைப் படுக்கவைத்து, என் அறைக்குத் திரும்பினேன்.

என் சிந்தனை பூராகவும் அம்மாவைப் பற்றியே இருந்தது. அம்மா கூச்ச சுபாவமுடையவள். யாராவது அறைக்குள் இருந்தாலே உடனே எழுந்து உட்கார்ந்து விடுவாள். உடம்பு முடியாமல் போனாலும் உட்கார்ந்தபடிதான் இருப்பாள். அதற்காகவே நாங்கள் யாராயிருந்தாலும் ஐந்து
நிமிடமோ அல்லது பத்துநிமிடமோ இருந்துவிட்டு வெளியேறிவிடுவோம்.

அடிக்கடி பாத்ரூம் போக எழுந்துகொள்வாள். ஹாலில் அடிக்கடி யாராவது நடமாடிக்கொண்டே இருப்பர். அதோடு ஹாலில்தான் டிவி இருக்கு. டிவி புரோக்ராம்களை என் மனைவியும், மகனும் தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருப்பர். இது
அம்மாவுக்குப் பெரிய தலைவலியாக இருக்குமே !

நினைக்க நினைக்க நெஞ்சில் வேதனை பிடுங்கித் தின்றது.

''இந்த வீடு அப்பாவும் அம்மாவும் கஷ்டப்பட்டு கட்டிய வீடு; மகன் என்பதற்காக எனக்கு ஒரு ரூமைக் கொடுத்தார்கள் என் மகனுக்கு வீடு அல்லது ரூம் வேண்டுமென்றால் நாம் தானே கட்டிக் கொடுக்கவேண்டும்; அம்மாவை ரூமைக் காலி செய்து கொடு எனக் கேட்பது தவறு இல்லையா?'' என்று வைதேகியிடம் சொல்லிட வேண்டியது தான் என நினைத்துக் கொண்டே தூங்கி விட்டேன்.

ஆனால் மறுநாள் காலை அம்மா இதற்கொரு விடை கொடுத்தாள்; ஆம். அம்மா நள்ளிரவே காலமாகி விட்டாள்.

ஹாலில் இருந்துகொண்டு தான் அவஸ்தைப்பட்டு அதனால் பிறத்தியாருக்கும் கஷ்டம் கொடுப்பதை விரும்பாமல் போய்ச்சேர்ந்துவிட்டாள்.

அம்மாவின் காரியங்கள் நடந்து முடிந்தன.

அன்று இரவு அம்மாவைப்பற்றி சிந்தனையோடு கட்டிலில் அமர்ந்திருந்தேன்.
வைதேகி என்னருகில் வந்து நின்றாள்.

" என்ன அம்மாவைப்பத்தி சிந்தனையா?"

நான் பதிலேதும் சொல்லவில்லை. அவளே தொடர்ந்தாள்.

" பாவம் உங்கம்மா ! இன்னும் கொஞ்ச நாள் இருந்திருக்கலாம்...ம்..என்ன செய்றது ! " என்றவள் , " ஆனால் ஒரு விஷயத்த கவனிச்சீங்களா ?"

' என்ன' என்பதுபோல் அவளைப் பார்த்தேன்.

" கடைசிவரை ஹாலுக்கு வரல்ல. தன் ரூமுன்னு உரிமை கொண்டாடி, அங்கேயே உசிர விட்டாங்க. அவங்க சாமர்த்தியம் யாருக்கும் வராது ! "

சுருக்கென்று சொல்லிவிட்டு அகன்றாள் வைதேகி.

அம்மாவை வெளியேத்தணும்னு ரூமைக் கேட்டாளா? இல்ல, பையனை வைக்கணும்னு ரூமைக் கேட்டாளா?

அப்பா உயிருடன் இருந்திருந்தா அந்த ரூமை கேட்டிருப்பாளா?  அம்மா தனியா இருந்தது அவங்களுக்கு பலவீனமோ? அம்மா ''நான் தனியா இல்ல, பையனோடு தான் இருக்கேன்னு' சொன்ன நம்பிக்கையைக்  கூட காப்பாத்த முடியலையோ?

அவளை அழைத்து ''இந்த வீடு அப்பாவும் அம்மாவும் கஷ்டப்பட்டு கட்டிய வீடு; மகன் என்பதற்காக எனக்கு ஒரு ரூமைக் கொடுத்தார்கள் என் மகனுக்கு வீடு அல்லது ரூம் வேண்டுமென்றால் நாம் தானே கட்டிக் கொடுக்கவேண்டும்; அம்மாவை ரூமைக் காலி செய்து கொடு எனக் கேட்டது தவறு இல்லையா?''என்று சொல்ல நினைக்கிறேன்; முடியவில்லை;

இது என்னுடைய கையாலாகதத் தனமோ? நான் மட்டும் தான் இப்படியா? இல்லை, எல்லா ஆண்களும் இப்படித் தானா?

தற்போது சற்று சிந்திப்போம்👇

பெற்றோரை பேணுவதை பற்றி இந்த மகாளய பட்சத்தில் புண்ணியம் வேண்டி மூதாதையரை  நினைவு கூரும் நாம் சிறிது சிந்திக்க வேண்டும்.

மற்றவர்கள் எல்லோரும் பெற்றவர்களுக்கு நிகராக முடியாது. பெற்றவர்கள் மட்டும் தான் இறைவனுக்கு அடுத்து என்பது உலகம் அறிந்த உண்மை. இந்த வாழ்க்கையில் ஒரு மனிதன் அடையக்கூடிய எல்லா பதவிகளையும் விட மகிழ்ச்சியும், பெருமையும் வாய்ந்தது பெற்றோர் என்ற பதவியே. பிள்ளையைக் கருவுற்ற காலத்திலிருந்து கடைசிக் காலம் வரைக் காப்பாற்றும் பெற்றோர்களை இந்தியாவில் எங்கும் காண முடியும்.

இன்று நமக்கு காதலர் தினம் நினைவிருக்கிறது. அன்னையர் தினம் மறந்து விடுகிறது. வாழ்க்கையில் திருமணம் என்ற ஒரு நிகழ்வு நடந்தவுடன் கடந்த காலத்தை மறக்கிறோம்; பெற்றவர்களை புறக்கணிக்கிறோம். எதற்காக வாழ்கிறோம், எப்படி வாழ வேண்டும் என்பதை பற்றி தெரியாமல் இயந்திரங்களுடன் இயந்திரத்தனமாய் வாழ்கிறோம். காலத்தின் கட்டாயத்தால் பெற்றவர்களை பிரிய வேண்டி சூழ்நிலையோ அல்லது ஒதுக்க வேண்டி நிலையோ உருவாகும் போது அவர்கள் உணர்வுகளை பற்றி நாம் கவலைப்படுவதில்லை. அதில் நமக்கு அக்கறையும் இல்லை.

பெண்' இருந்தும் 'சன்' இருந்தும் பல அப்பாக்களை இன்று 'பென்சன்' தான் காப்பாற்றுகிறது. பணத்தால் மட்டும் அவர்கள் வாழ்க்கையில் நிம்மதியும் சந்தோஷமும் கிடைத்து விடுமா.
ஒவ்வொரு ஆண் மகனின் வாழ்க்கையிலும் என்னை ஏன்னு கேட்க ஆளேயில்லை என்ற வாக்கியம் வயதுக்கேற்ப மாறும். இளமையில் கர்வமாக முதுமையில் பரிதாபமாக!

வாழ்க்கையிலும் சரி, பணியிலும் சரி நமக்கு எத்தனை அழுத்தங்கள் இருந்தாலும் பெற்றவர்களிடம் மனம் விட்டு பேசுங்கள். அன்னையின் மடியில் தலை வைத்து அயருங்கள். தந்தையின் கரங்களை பிடித்து கொண்டு கடைவீதிக்கு செல்லுங்கள்.
வாழ்க்கை ஒரு வட்டம் என்பதை உணருங்கள். இன்று நீங்கள் பெற்றோரை ஆதரித்து அரவணைத்தால், நாளை உங்கள் பிள்ளைகளும் உங்களை ஆதரிப்பர் என்பதை சொல்லி தான் தெரிய வேண்டுமா? இதைவிட வேறு புண்ணியமும் வேண்டுமா ?

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H