பூமித்தாய்க்கே சொர்க்கத்துளி
உயிர்த்துளி நான்
மாறிக்கிடக்குற உங்களிடத்து மரித்திடாது மறந்திடாது வந்துபொழியும்
பூமாரி நான்
புயலின் கருவிலே உருவாகி புல்பூண்டுகளைக் கூட குளிரச்செய்யும் நிறமற்ற நீர்மம் நான்
சாதிபேதமில்லை
வக்கிரமில்லை
தீயெண்ணமில்லை
யாவருக்கும் பொதுவான மழைப்பால் நான்..
நீ வணங்கிய பஞ்சபூதம்
உருவமொன்றிலா உயர்பிறவி
உங்கள் உயிர்ப்பிறவி நான்
நெளிவு சுளிவு
மேடு பள்ளம் யாவையும் கடந்து கிடக்கும் பேராத்மா நான்
மண்ணையும் விண்ணையும் இணக்கிற இனிப்பான வேலையின் சேவகன் நான்
உன்னிலும் உலகிலும் முக்கால் பங்கு நான்
முக்காலத்திற்கும் பங்காகும் உன் பங்காளி நான்
கலங்கியும் வருவேன்
கலக்கியும் வருவேன்
கலங்கடித்தும் வருவேன்
என் வருகை பள்ளிக்குழந்தைகளின் பேருவகை
இளங்காதலர்களின் இன்ப தருணம்
சாலையோரத்து ஜீவன்களின் பயம்
விவசாய மகிழ்ச்சி
உலகின் பேரானந்தம்
இவையெல்லாமே
இதுவரை சரிதான்
இயற்கையின் கருப்பையில் என்று நீயுன் கத்திவைத்தாயோ
அன்றே உன்னையும் ஒத்திவைக்க ஒப்பந்தமிட்டுவிட்டேன் நான்
என் வழிகளை உனதாக்கி உள்ளங்குளிர்ந்தாய்
வேறெங்கே ஒளிந்திருக்க இயலும் நான்
எவ்வளவு தான் மீளச்சென்று வானஞ்சேர்வேன்
அதனால் தான் பிதுங்கி உன் இல்லஞ்சூழ்ந்தேன்
உன் பாதையெங்கிலும் பாவமாய் படர்ந்து கிடக்கிறேன்
செய்வதறியாது உனைச்சேதமாக்கி சோகமுடனே கடலில்சேர்கிறேன்
பாதையடைத்த மேதைகளே
நீர் நன்றாய் இருக்க நீர்நானும் நன்றாய் இருக்க வழிவிடுவீர்
இனியேனும் வீணாய் வழியவிடாமல்...
*சீனி.தனஞ்செழியன்*








