
சென்னை, மூன்று வங்கிகளை இணைக்கும் முடிவை கைவிடக் கோரி, 14 லட்சம்
ஊழியர்கள், நேற்று வேலைநிறுத்த போராட்டம் நடத்தியதால், வங்கிப் பணிகள்
ஒட்டுமொத்தமாக முடங்கின.பரோடா வங்கியுடன், தேனா வங்கி, விஜயா வங்கி
ஆகியவற்றை இணைக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த இணைப்பு
நடவடிக்கைக்கு, வங்கி ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இணைப்பு
முயற்சியை கைவிடக்கோரி, டிச., 21ல் வங்கி ஊழியர்கள், ஒரு நாள் வேலைநிறுத்த
போராட்டம் நடத்தினர்.இந்நிலையில், அகில இந்திய வங்கி ஊழியர்கள்
கூட்டமைப்பு சார்பில், நாடு முழுவதும் நேற்று, ஒரு நாள் வேலைநிறுத்த
போராட்டம் நடத்தப்பட்டது. வங்கிகள் இணைப்பு முடிவை கைவிட வேண்டும்; ஏழாவது
ஊதிய குழு பரிந்துரையின்படி, குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்ய
வேண்டும்; ஊதிய உயர்வு விதிகளை தளர்த்த வேண்டும்.வங்கி ஊழியர்களுக்கு
மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை
வலியுறுத்தி, இந்த போராட்டம் நடந்தது.இதில், நாடு முழுவதும், 14 லட்சம்
ஊழியர்கள் பங்கேற்றதாக, வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
சென்னையில், சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே, வழங்கி ஊழியர்கள்
ஆர்ப்பாட்டம் நடத்தினர்.வேலைநிறுத்தத்தால், நாடு முழுவதும், அரசு
உடைமையாக்கப்பட்ட வங்கிகளின் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டன. வங்கிகளில்
நேரடி நிதி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படவில்லை.
வாடிக்கையாளர்கள், ஆன்லைன்
வழியே நிதி பரிவர்த்தனை மேற்கொண்டனர்.அதேநேரம், வர்த்தகம் தொடர்பாக, ஒரு
லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான காசோலைகளின் பரிவர்த்தனை பணிகள் முடங்கின.
ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தக பணிகளும், மத்திய - மாநில அரசு அலுவலகங்களின்
நிதி தொடர்பான பணிகளும் பாதிக்கப்பட்டன.