தமிழகத்தில் ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பினரின் வேலை நிறுத்தத்துக்கு தடை விதிக்கக் கோரி மதுரையைச் சேர்ந்த லோகநாதன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, உயர்நீதிமன்றம் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்தனர்.
அதையடுத்து நீதிபதிகள், ஊதிய முரண்பாடுகள் மற்றும் 21 மாத நிலுவைத் தொகை வழங்குவது தொடர்பான சித்திக் குழுவின் அறிக்கையை புதன்கிழமை (ஜன.9) சீலிட்ட கவரில் தாக்கல் செய்ய வேண்டும். மேலும், அதன் அடிப்படையில் எடுக்கப்பட உள்ள நடவடிக்கை குறித்தும், பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பான ஸ்ரீதர் குழுவின் அறிக்கை அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் கூறி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை ஜன. 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்








