சென்னை: சென்னை உட்பட, தமிழகத்தின் பல பகுதிகளில், ஆறு ஆண்டுகளுக்கு பின்,
மீண்டும், மிக அதிகமான குளிர் பதிவாகியுள்ளது. பகல் நேரத்திலும்,
குளிர்ந்த சூழல் நிலவுகிறது.தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை, பெரும்
ஏமாற்றத்தை அளித்துள்ளது. சென்னையில், 55 சதவீதத்துக்கும் மேல் மழை
குறைந்துள்ளது. இதனால், வரும் நாட்களில், தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும்
அபாயம் உள்ளது.
இந்நிலையில், குளிரும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்
உள்ளது. சென்னை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலுார், சேலம் உள்ளிட்ட வடக்கு,
வட கிழக்கு மாவட்டங்களிலும், நீலகிரி மற்றும் சுற்றி உள்ள மலை
மாவட்டங்களிலும், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும், கடும் குளிர்
நிலவுகிறது.வால்பாறையில், மிக அதிகமான குளிர் நிலவுவதால், தரையில் உறைபனி
ஏற்படுகிறது. அங்கு, சராசரியாக, 5 டிகிரி செல்ஷியசுக்கு குறைவான
வெப்பநிலையே பதிவாகிஉள்ளது.நேற்று காலை, 8:30 மணி நிலவரப்படி, ஆறு
ஆண்டுகளுக்கு பின், சென்னையில், மிக அதிகமான குளிர் பதிவாகியுள்ளது. இதற்கு
முன், 2012ல், ஜன., 17ல், அதிக குளிர் நிலவியதால், 17.7 டிகிரி செல்ஷியசாக
வெப்பநிலை பதிவானது. சென்னையின் புறநகர் பகுதிகளில், 18.2 டிகிரி
செல்ஷியஸ் என்ற, குறைந்தபட்ச வெப்பநிலை பதிவானது. 'வரும் நாட்களை
பொறுத்தவரை தொடர்ந்து குளிர் நிலவும்; வறண்ட வானிலை நீடிக்கும்' என, சென்னை
வானிலை மையம் கணித்துள்ளது.உறைபனி இல்லாதது ஏன்?பொதுவாக பனிக்காலத்தில்,
குளிர் அதிகம் உள்ள இடங்களில், அதிகாலை மற்றும் இரவு நேரங்களில், தரை
ஈரமாகும் அளவுக்கு, ஈரப்பதம் படியும். தற்போது, பனிக்காலம் நிலவும்
நிலையில், மலைப் பகுதிகளில் மட்டும், நீர் குமிழியும், பனி துளியும்
தாவரங்களில் படிகின்றன. சென்னை போன்ற இடங்களில், நீர் குமிழி படியாமல்,
வறண்ட குளிர் நிலவுகிறது.இது குறித்து, சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய
இயக்குனர், பாலச்சந்திரன் கூறியதாவது:குளிர்காலங்களில், காற்றில் உள்ள
ஈரப்பதத்தை பொறுத்து, நீர் குமிழிகள், பனி துளிகள் ஏற்படும். இது, கடல்
மட்டத்தை விட உயரம் குறைந்த பகுதிகள், அதிக உயரமான பகுதிகள் மற்றும் மலைப்
பகுதிகளில் உருவாகும். கடல் மட்டத்தில் உள்ள பகுதிகள் மற்றும் கடற்கரை
பகுதிகளில், பனி துளிகள் உருவாவது அரிது.கடல் காற்று உள்ள பகுதிகளில்,
வெப்பம் சமநிலை அடைவதால், பனி துளிகள் அதிகம் உருவாகாது. அதேபோல், காற்றில்
ஈரப்பதம் குறைந்தாலும், மிகவும் வறண்ட மூடு பனியே நிலவும். சில இடங்களில்
வளி மண்டலத்தில், நீர் குமிழிகள் உருவாக சாத்தியம் இருந்தாலும்,
நகரமயமாதல், கட்டடம் அதிகரிப்பு, காற்றில் அதிகரிக்கும் மாசு போன்றவற்றால்,
குளிர் கால ஈரப்பதம், மூடு பனியாகவே நீடிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.