போடி: தமிழக, கேரள எல்லையிலும், இடுக்கி மாவட்டத்திலும் சுமார் ஒன்றரை லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் ஏலக்காய் விவசாயம் நடந்து வருகிறது. இங்கு விளைவிக்கப்படும் ஏலக்காய் இந்திய நறுமண வாரியத்தின் மூலமாக கேரள மாநிலம் புத்தடியிலும், தமிழ்நாட்டில் போடியிலும் 12 கம்பெனிகளின் வாயிலாக வாரத்தில் 6 நாட்கள் ஏலம் விடப்படுகிறது. தமிழக, கேரள வியாபாரிகள் ஏலக்காயை பல்காக ஏலம் எடுத்து தரம் பிரித்து விலை நிர்ணயம் செய்கின்றனர். உள்ளுர் தேவை போக வெளிநாடுகளின் ஆர்டர்களுக்கு விமானம் மற்றும் கப்பல்கள் மூலம், முதல் தரமான ஏலக்காய் ஏற்றுமதி செய்யப்படுகிறது..
பருவமழை இல்லாததால் ஏலக்காய் உற்பத்தி வெகுவாக குறைந்து விட்டதால், அவற்றின் தேவை அதிகரித்துள்ளது. எட்டு பருவட்டு ஏலக்காய் கிலோ ₹6 ஆயிரத்திற்கும், முதல் தரம் ஒரு கிலோ 3,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சராசரி விலையாக ஒரு கிலோ 3260 ரூபாய்க்கும், குறைந்த பட்சம் 1300 ரூபாய்க்கும் ஏலக்காய் விற்பனை செய்யப்படுகிறது. நூறு ஆண்டுகளில் இல்லா அளவிற்கு ஏலக்காய் விலை தற்போது உயர்ந்துள்ளது.குறிப்பாக, ஒரு கிலோ ஏலக்காய் 2300 ரூபாய்க்கு மேல் விலை ஏறியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது உலக நாடுகளில் ஏலக்காய் தேவையும் அதிகரித்துள்ளதாலும், வரத்து இல்லா காரணத்தினாலும் உச்ச விலையை தொட்டுள்ளது. இந்த விலை உயர்வால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.







