தன் தாத்தா வாட்ச்மேனாகவும், அப்பா டிரைவராகவும் பணியாற்றிய நீதிமன்றத்தில், மகன் நீதிபதியாகி, அப்பாவின் கனவை நிஜமாக்கியுள்ளார். இந்த நெகிழ்ச்சி வரலாறு படைக்கப்பட்டது, மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் நகரில்!இந்த சாதனையைச் செய்தவர், 26 வயது சேத்தன் பஜத். மத்தியப் பிரதேச மாநில உரிமையியல் நீதிபதிகளுக்கான தேர்வில் 13வது ரேங்க் எடுத்து சாதனை புரிந்துள்ளார் சேத்தன். இந்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் சேத்தனின் தாத்தா ஹரிராம் பஜத் வாட்ச்மேனாகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். சேத்தனின் தந்தை கோவர்தன்லால், அதே நீதிமன்றத்தில் இப்போது டிரைவராகப் பணியாற்றி வருகிறார்.
‘‘எனக்கு ரோல் மாடல் என் அப்பாதான். அவரது உழைப்புதான் என்னை நீதிபதி ஆக்கியுள்ளது. பதவியில் அமர்ந்ததும், விரைவாகத் தீர்ப்பு வழங்குவதுதான் என் லட்சியமாக இருக்கும்’’ என்கிறார் சேத்தன்.
எத்தனையோ நீதிபதிகளுக்குக் கார் ஓட்டிய கோவர்தன்லால், தன் மகனுக்காக அந்த வேலையைப் பெருமிதத்துடன் செய்வார்.








