சார் பதிவாளர், நகராட்சி ஆணையர் உள்ளிட்ட நேர்காணல் பணியிடங்கள் முதல்நிலைத் தேர்வு, பிரதான தேர்வு மற்றும் நேர்காணல் என மூன்று கட்ட தேர்வுகளைக் கொண்ட குரூப் 2 தேர்வு மூலமாக நிரப்பப்பட்டன. பல்வேறு துறைகளின் உதவியாளர் உள்ளிட்ட நேர்காணல் அல்லாத பணியிடங்கள் ஒரு எழுத்துத் தேர்வைக் கொண்ட குரூப் 2ஏ தேர்வு மூலமாக நிரப்பப்பட்டு வந்தன.
குரூப் 2 தேர்வின் முதல்நிலை தேர்வில் இதுவரை 100 பொது அறிவு வினாக்களும், பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து எழுதும் 100 வினாக்களும் கேட்கப்பட்டன. அந்த முறை மாற்றப்பட்டு தமிழக அரசியல் வரலாறு, பாரம்பரியம் உள்ளிட்ட பாடப்பகுதிகளுடன் கூடிய 175 பொது அறிவு வினாக்களும், 25 திறனறி வினாக்களும் இடம்பெறும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. பொது அறிவு சார்ந்த வினாக்கள் முதல்நிலைத் தேர்வில் அதிகரிக்கப்பட்டு மொழி சார்ந்த வினாக்கள் பிரதானத் தேர்வுக்கு மாற்றப்பட்டுள்ளன.








