இதில், விஷேசம் என்னவென்றால், இட்லி மாவு தயாரிக்க, கிரைண்டர் பயன்படுத்துவது இல்லை. சட்னி, சாம்பார் தயாரிக்க மிக்சி பயன்படுத்துவது இல்லை. தனது கையாலேயே ஆட்டுக்கல், அம்மி உதவியுடன் தயாரிக்கிறார். இதனால், இட்லி, சட்னி, சாம்பார் சுவையாக உள்ளது. இந்த சுவைக்காகவே, சுற்றுப்புற மக்கள் நிரந்தர வாடிக்கையாளர்களாக மாறிவிட்டனர். இந்த ஒரு ரூபாய் இட்லி பாட்டி சமூக வலைதளங்களை கடந்த சில நாட்களாக கலக்கி வருகிறார். இந்த பாட்டியின் வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாக பரவியது. இந்த வீடியோவை மகேந்திரா குரூப் தலைவர் ஆனந்த் மகேந்திரா, டிவிட்டரில் ஷேர் செய்தார். அதோடு பாட்டிக்கு உதவ காஸ் அடுப்பு ஒன்று வாங்கித் தரப்போவதாக கூறியிருந்தார். இதையடுத்து, இவரது சேவை, சமூக வலைதளங்களில் வைரலானது. இவற்றில் அவருக்கு லட்சக்கணக்கான மக்கள் வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்தபடி உள்ளனர். இதையடுத்து உதவிகளும் குவியத் தொடங்கி உள்ளது.
இதைத்தொடர்ந்து, மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது டிவிட்டரில், ‘‘கடின உழைப்பாளியான கமலாத்தாள் பாட்டிக்கு நான் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். உள்ளூர் எண்ணெய் நிறுவன அதிகாரிகளை அணுகி காஸ் இணைப்பு கொடுக்க வலியுறுத்தி உள்ளேன். சமுதாயத்தில் இதுபோன்ற உழைப்பாளிகளுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்’’ என்று பதிவிட்டுள்ளார். இதையடுத்து, இந்தியன் ஆயில் நிறுவனம் மற்றும் பாரத் காஸ் நிறுவனம் சார்பில் இலவசமாக சமையல் காஸ் சிலிண்டர்கள் மற்றும் காஸ் அடுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், பாட்டியின் சேவை அறிந்து சமூக ஆர்வலர் சார்பில் கிரைண்டர், மிக்ஸி வாங்கி தரப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை இரண்டு மடங்கானது
இந்த இட்லி வியாபாரம் குறித்து பாட்டி கூறுகையில், ‘‘நான் இதுநாள் வரை சமையல் காஸ் சிலிண்டர் மற்றும் சமையல் காஸ் அடுப்பு பயன்படுத்தியது இல்லை. தற்போது இலவசமாக வழங்கியுள்ள இந்த உபகரணங்களை பயன்படுத்தி என்னால் விரைவாக சமைக்க முடியவில்லை. இருப்பினும், ஒருசில தினங்களில் பழகிவிடுவேன். எனது கடையில் முன்பு 50 பேர் வரை இட்லி சாப்பிட்டு வந்தனர். தற்போது, இந்த எண்ணிக்கை 100 ஆக அதிகரித்து விட்டது. முதலில், பக்கத்து தெருவை சேர்ந்தவர்கள் மட்டும் வந்து சாப்பிடுவார்கள். இப்போது, வெளியிடங்களை சேர்ந்தவர்களும் வருகிறார்கள். அனைவருக்கும் மகிழ்ச்சியுடன் இட்லி பரிமாறுகிறேன். ஒரு நாளைக்கு 600 இட்லி விற்கிறேன்.
இதில் 200 லாபம் கிடைக்கும். இதைவைத்து நேர்மையாகவும், மனசாட்சியுடனும் வாழ்கிறேன்’’ என்று புன்னகையுடன் தெரிவித்தார். இந்த பாட்டிக்கு உறவுகள் என யாரும் கிடையாது. ஆர்த்தி என்ற ஒரே ஒரு பேத்தி மட்டும் உள்ளார். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தற்போது அந்த பேத்தியும் களத்தில் இறங்கி, தனது பாட்டிக்கு உதவிபுரிந்து வருகிறார்.








