
CLICK HERE DOWNLOAD PDF GO NO 161 DATE :13.09.2019
இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் பிரதீப்யாதவ் வெள்ளிக்கிழமை பிறப்பித்துள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் அரசுத் தேர்வு இயக்குநரால் நடத்தப்படும் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில், மொழிப்பாடம் (Language) மற்றும் ஆங்கிலப் பாடங்களில் உள்ள இரண்டு தாள்களை இரண்டு தேர்வுகளாக எழுதுவதற்குப் பதிலாக ஒரே தேர்வாக எழுத அனுமதித்து ஆணையிடப்பட்டது.
இதன் அடிப்படையில் தற்போது அரசுத் தேர்வுகள் இயக்குநர், பத்தாம் வகுப்புத் தேர்வுகளுக்கும் மொழிப் பாடங்கள் மற்றும் ஆங்கிலப் பாடத்துக்கு இரண்டு தாள்களாக நடத்துவதை மாற்றி ஒரே தாளாக தேர்வுகள் நடத்திட வேண்டி ஆசிரியர் சங்கங்கள் மற்றும் பொதுநல அமைப்புகள் முறையிட்டு வருகின்றன எனத் தெரிவித்துள்ளார்.
அதன் விவரம்:
மொழிப்பாடம் மற்றும் ஆங்கிலப் பாட ஆசிரியர்கள் ஒவ்வொரு தேர்வின்போதும் அதிக நாள்கள் விடைத்தாள் மதிப்பீட்டு பணிக்காக செலவிடும் நிலை மாறி கற்பித்தல் மற்றும் கல்வி மேம்பாட்டுப் பணியில் அதிக நேரம் செலவிட ஏதுவாகும். இந்தப் பாடங்களை ஒரே தாளாக தேர்வு எழுதுவதன் காரணமாக மாணவர்களின் தேர்வு காலம் குறைக்கப்படுவதால் அவர்களின் கவனச் சிதறல் மற்றும் மனஅழுத்தம் பெருமளவில் குறையும்.
மூன்று கோடி தாள்கள் சேமிக்கப்படும்: விடைத்தாள் மதிப்பீட்டுப் பணி நடைபெறும் நாள்கள் குறைவதால் தேர்வு முடிவுகள் விரைவில் அறிவிக்க வாய்ப்பு ஏற்படும்.
ஆண்டுதோறும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை சுமார் பத்து லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். மொழிப்பாடம், ஆங்கிலப் பாடத்துக்கு ஒரே தாளாக தேர்வு நடத்துவதால், சுமார் இருபது லட்சம் விடைத்தாள்கள் குறையும். இதனால் அரசு மைய அச்சகத்தில் அச்சிடுவதற்காக ஓர் ஆண்டுக்கு பயன்படுத்தப்படும் சுமார் மூன்று கோடி எண்ணிக்கையிலான தாள்களும் சேமிக்கப்படும்.
அரசு தேர்வுகள் இயக்குநர் கருத்துருவினை ஏற்று, ஆசிரியர் சங்கங்கள், பொதுநல அமைப்புகளின் கோரிக்கைகளின் அடிப்படையிலும், கற்பித்தல் மற்றும் கல்வி மேம்பாட்டுப் பணிகளில் அதிக நேரம் ஈடுபடுத்தும் வகையிலும் தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு மொழிப்பாடம், ஆங்கிலப் பாடத் தேர்வுகளில் இரு தாள்களுக்கு தேர்வு நடத்துவதற்கு பதிலாக 2019-2020-ஆம் கல்வியாண்டு முதல் இரு தாள்களையும் ஒருங்கிணைத்து ஒரே தாளாக தேர்வு நடத்துவதற்கும் அவ்வாறு நடத்தும்போது, பாடங்களின் மதிப்பீடு பாதிக்காதவாறும் முதல் மற்றும் இரண்டாம் தாள்களில் உள்ள அனைத்து பாடங்களின் சாராம்சங்களையும் உள்ளடக்கியதாகவும் தேர்வுகள் நடத்திட அரசுத் தேர்வுகள் இயக்குநருக்கு அனுமதியளித்து அரசு ஆணையிடுகிறது என அதில் கூறியுள்ளார்.








