கற்றலின் இனிமை...! ----எஸ். ராமகிருஷ்ணன் - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Tuesday 17 September 2019

கற்றலின் இனிமை...! ----எஸ். ராமகிருஷ்ணன்

தெரிந்த ஆசிரியர் ஒருவர் சமீபத்தில் பணி ஒய்வு பெற்றார். அப்போது, 30 ஆண்டுகளாக தான் சேகரித்து வைத்திருந்த 4 ஆயிரம் புத்தகங்களையும் பள்ளி நூலகத்துக்குப் பரிசாக அளித்துவிட்டார்.

எனக்குத் தனது பணிக் காலத்தில் மூன்று கொள்கைகளைத் தொடர்ந்து கடைப் பிடித்து வந்ததாக அவர் கூறினார். ஒன்று, பிரைவேட் டியூசன் எடுத்து காசு சம்பாதிக்கக் கூடாது. இரண்டாவது, தன்னால் முடிந்த அளவு வசதியில்லாத மாணவர்களுக்குத் தேவையான உதவி களை செய்வது.

மூன்றாவது, வகுப்பறை யில் மாணவர்களுக்கு தான் படித்த புத்தகங்களை அறிமுகம் செய்து வைப்பது. இந்த மூன்றையும் உறுதியாக தான் கடைப்பிடித்ததாகக் கூறினார்


‘உங்கள் ஆசிரியர் அனுபவத்தில் எதைப் பெருமையாகக் கருதுகிறீர்கள்’ எனக் கேட்டேன். அதற்கு அவர் பெருமிதமான குரலில் சொன்னார்:

“மாணவர்களை ஒருமுறை கூட நான் அடித்ததே இல்லை. அப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று எனக்குக் கற்றுத் தந்தவர் ஏ.எஸ்.மகரன்கோ. 30 ஆண்டுகளுக்கு முன்பு அவருடைய ‘தி ரோடு டு லைஃப்’ (The Road to Life) என்ற புத்தகத்தைப் படித்தேன். அதுதான் எனது வாழ்க் கையை மாற்றியமைத்தது!’’ என்றார்.

‘புத்தகங்களால் என்ன செய்துவிட முடியும்’ என அறியாமையில் பலர் கேலி பேசுவதைக் கேட்டிருக்கிறேன். ஆனால், இப்படி எத்தனையோ மனிதர்களுக்கு அவர்களின் வாழ்க்கை வழிகாட்டியாக புத்தகங்களே இருந்திருக்கின்றன என்பதே உண்மை!

ஏ.எஸ்.மகரன்கோ எனப்படும் ஆன்டன் செமினோவிச் மகரன்கோ… ரஷ்யாவின் மிகச் சிறந்த கல்வியாளர். புதிய கல்விமுறையை உருவாக்கிய சிந்தனையாளர்.

அநாதை சிறார்களை ஒன்றுதிரட்டி, அவர்களுக்குக் கல்வி புகட்டியவர். ‘கார்க்கி காலனி’ என்ற இவரது ‘கல்வியகம்’ ரஷ்யாவின் முன் மாதிரி கல்வி நிறுவனமாக கருதப்பட்டது.

மகரன்கோவின் புத்தகங்கள் எதுவும் தமிழில் வெளியாகியிருப்பதாகத் தெரியவில்லை. 20 ஆண்டுகளுக்கு முன்பாக கல்விகுறித்த கட்டுரைத் தொகுப்பில், மகரன்கோ ஆற்றிய சொற்பொழிவு ஒன்றினைப் படித்தேன்.

அது பெற்றோர்களின் பொறுப் புணர்வு பற்றியது.

“பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்தில் விட்டுவிட்டதோடு பொறுப்பு முடிந்து விட்டதாக பெரும்பான்மையான பெற் றோர்கள் கருதுகிறார்கள். மாணவனுக்கு அறிவை மட்டுமே பள்ளிக்கூடம் புகட்டும். பண்பாட்டினை குடும்பம்தான் உருவாக்க வேண்டும்!

குறிப்பாக, பெற்றோரின் உணவுப் பழக்கம், உடை அணியும் விதம், நடத்தை, பேச்சு, சண்டை, கோபம் போன்றவை குழந்தைகளை மிகவும் பாதிக்கும். இவ்வளவு ஏன்? பெற்றோர் கள் எதை கேலி செய்து சிரிக்கிறார் களோ, அதை பிள்ளைகளும் காரணம் இல்லாமல் கேலி செய்து சிரிப்பார்கள்.

ஆகவே, பெற்றோர்கள் வீட்டில் நடந்துகொள்ளும் விதமே பிள்ளைகள் வளர்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

பெரும்பான்மை பெற்றோர்கள் தாங்கள் சொல்வதைப் பிள்ளைகள் கேட்க மறுக்கிறார்கள், அடிபணிவதே இல்லை எனக் குறை கூறுகிறார்கள். இதில் தவறு பிள்ளைகளிடம் இல்லை. பெற்றோர்களிடமே இருக்கிறது.

காரணம், அவர்கள் தங்கள் பிள்ளைகளையும் வேலையாள் போல, அடிமைகள் போல, சர்க்கஸ் மிருகங்களைப் போல அதிகாரத்தால் அச்சுறுத்துவதாலும், ஆத்திரப்பட்டு கத்துவதாலும் அடிபணிய வைத்துவிட பார்க்கிறார்கள்.

ஒருபோதும் அது சாத்தியமாகாது. முடிவாக, ‘நீ என் பேச்சை கேட்பதாக இருந்தால் நீ கேட்பதை எல்லாம் வாங்கித் தருகிறேன்’ என ஆசை காட்டுகிறார்கள். அது ஒரு வகையான லஞ்சம். மோசமான வழிமுறை. பெற்றோர்களின் அலட்சியமே பிள்ளைகளை மோசமான நடத்தை உள்ளவர்களாக மாற்றுகிறது’’ என அந்தச் சொற்பொழிவில் குறிப்பிடுகிறார் மகரன்கோ.

இந்தக் கட்டுரையை வாசித்தப் பிறகு, மகரன்கோவின் நூல்களைத் தேடித் தேடிப் படித்தேன். அதில் ஒன்றுதான் ‘மகரன்கோ: ஹிஸ் லைஃப் அண்ட் வொர்க்’ (Makarenko: His Life and Work ) என்ற புத்தகம். ஐதராபாத்தில் உள்ள நடைபாதை புத்தகக் கடையில் தற்செயலாக கிடைத்தது.

மகரன்கோவின் வாழ்க்கை மற்றும் அவர் உருவாக்கிய கல்வி முறை, அவரிடம் படித்த மாணவர்களின் நினைவுக் குறிப்புகள், கட்டுரைகள் ஆகியவற்றை உள்ளடக்கியது.

புரட்சிக்குப் பிறகான ரஷ்யாவில் பெற்றோர்களை இழந்த சிறுவர்கள் படிப்பை கைவிட்டு, பசிக்காக எந்தக் குற்றத்திலும் ஈடுபடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தார்கள். அத்துடன் சீர்திருத்தப் பள்ளியில் படித்த மாணவர்கள் பலர், பள்ளியை விட்டுத் தப்பியோடி இளம் குற்றவாளிகளாக அலைந்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கான பொறுப்பு மகரன்கோவிடம் ஒப்படைக்கப்பட்டது.

மகரன்கோ ‘கார்க்கி காலனி’ என்ற கல்வி நிலையம் ஒன்றை உருவாக்கினார். அதில் 14 முதல் 18 வயது வரையுள்ள கைவிடப்பட்ட, அநாதை சிறார்கள் 30 மாணவர்களாக சேர்க்கப்பட்டார்கள்.

கல்வியும் உழைப்பும் ஒருங்கிணைந்த முறை ஒன்றினை மகரன்கோ உருவாக்கினார். அதாவது, படிப்போடு வாழ்க்கைக்குத் தேவையான தொழில்நுட்பப் பயிற்சிகள், அடிப்படை வேலைகள் அத்தனையும் மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். ஆகவே, உடல் உழைப்பும் அறிவு வளர்ச்சியும் ஒன்றிணைந்த கல்விமுறை உருவாக்கப்பட்டது.

உக்ரைனில் உள்ள ஏழை தொழிலாளியின் மகனாக பிறந்த மகரன்கோ, 1905-ம் ஆண்டு ஆசிரியர் பயிற்சி முடித்து ரயில்வே பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றத் தொடங்கினார்.

‘கார்க்கி காலனி’ என்கிற கல்வி நிலையத்தை உருவாக்குவது மகரன்கோவுக்குப் பெரிய சவாலாக இருந்தது. காலனி அமைக்கபட்ட இடத்தில் இடிந்து போன கட்டிடம் ஒன்று மட்டுமே இருந்தது. அது, முன்பு சிறுவர் ஜெயிலாக இருந்த கட்டிடம். சுற்றிலும் 100 ஏக்கர் பரப்பளவு நிலம் செடிகளும் புதர்களுமாக இருந்தது. அதை சுத்தப்படுத்தி கதவு இல்லாத அந்தக் கட்டிடதை ஒரு உறைவிடப் பள்ளியாக மாற்றினார்.

இரண்டு ஆண்டுகளில் அந்தப் பள்ளிக்கூடம் பெரும் வளர்ச்சி பெற்று உயர்ந்தோங்கியது. 124 மாணவர்களுடன் 16 பசுக்கள், எட்டு குதிரைகள், 50 பன்றிகளைக் கொண்ட கூட்டுப்பண்ணையைப் போல மாறியது. ஒரு பக்கம் பழத்தோட்டம், மறுபக்கம் காய்கறித் தோட்டம்.

அவற்றை மாணவர்களே உழைத்து உருவாக்கினார்கள். தங்கள் தேவைகளுக்குப் போக மீதமுள்ளவற்றை சந்தையில் விற்றுப் பள்ளிக்குத் தேவையான பொருட்களை வாங்கினார்கள்.

இளம் குற்றவாளிகளாகக் கருதப் பட்ட அந்த மாணவர்களை, கல்வியிலும் உழைப்பிலும் சிறந்தவர்களாக மேம்படுத்தினார் மகரன்கோ. அதை எப்படி சாத்தியமாக்கினார் என்பதை இந்நூல் விவரிக்கிறது.

மகரன்கோ தனது மாண வர்களின் துஷ்டத்தனங் களைக் கண்டு அவர்களை வெறுக்கவில்லை, தண் டிக்கவில்லை. மாறாக, அவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தைப் புரியவைத் தார்.

ஒரு மாணவனை பள்ளியைவிட்டு துரத்திவிடுவதைப் போல மோசமான செயல் வேறு எதுவுமே இல்லை. கல்வியின் வழியே தனிமனிதன் மேம்படுவதுடன், தனது சமூகத்தையும் அவன் மேம்படுத்த வேண்டும். அதற்கு கல்விமுறையில் நிறைய மாற்றங்கள் தேவைப்படுகின்றன.

குறிப்பாக, பாடம் நடத்தி மாணவனை மதிப்பெண் பெற வைப்பதுடன் தனது வேலை முடிந்துவிட்டதாக ஓர் ஆசிரியர் நினைக்கக் கூடாது.

ஆசிரியர்கள் எவ்வளவு கற்றுக் கொள்கிறார்களோ, அந்த அளவே அவர்கள் சிறப்பாக கற்றுத் தருவார்கள். ஆகவே, ஆசிரியர்கள் நிறையப் படிக்க வேண்டும். தங்களுக்குள் கூடி விவாதிக்க வேண்டும். முன்மாதிரி மனிதர்களாக நடந்து கொள்ள வேண்டும் என்கிறார்.

- இன்னும் வாசிப்போம்…

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H