சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர், கடலூர், சேலம், கரூர்,
திருச்சி, நாகப்பட்டினம், தேனி, சிவகங்கை, அரியலூர், விருதுநகர்,
பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், திருவண்ணாமலை மற்றும் கன்னியாகுமரி
மாவட்டங்களில் ஆதி திராவிடர் நல உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள்
செயல்பட்டு வருகின்றன.
ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் இந்த பள்ளிகளில் கடந்த
2018-2019-ம் கல்வியாண்டில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 வகுப்பு
பொதுத்தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் பெருமளவு குறைந்து இருந்தது.
மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்ததற்கான காரணம் என்ன? என்பது குறித்து
விளக்கம் தர 19 மாவட்டங்களில் செயல்படும் ஆதிதிராவிடர் நல உயர்நிலை மற்றும்
மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை
இயக்குனரகம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.
அந்த உத்தரவில், அனைத்து தலைமை ஆசிரியர்களும் வருகிற 7-ந்தேதி சென்னையில்
உள்ள ஆதிதிராவிடர் நல இயக்குனர் அலுவலகத்தில் நேரில் விளக்கம் தர வேண்டும்
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேற்கண்ட தகவலை ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் முரளிதரன் வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.