விருப்ப ஓய்வுக்கு 92 ஆயிரம்
பி.எஸ்.என்.எல்., எம்.டி.என்.எல். ஊழியர்கள் விண்ணப்பித்து இருப்பதாக
மத்திய தொலைத்தொடர்பு துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் மக்களவையில்
தெரிவித்தார்.
பி.எஸ்.என்.எல்.
புதுடெல்லி:
பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ள பி.எஸ்.என்.எல். மற்றும்
எம்.டி.என்.எல். ஆகிய பொதுத்துறை நிறுவனங்களை மறுசீரமைப்பதற்காக,
ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்கு
விண்ணப்பிக்க கடந்த 3-ந் தேதி கடைசி நாள் ஆகும்.
இந்நிலையில், விருப்ப ஓய்வுக்கு 92 ஆயிரம் பி.எஸ்.என்.எல்.,
எம்.டி.என்.எல். ஊழியர்கள் விண்ணப்பித்து இருப்பதாக மத்திய தொலைத்தொடர்பு
துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் நேற்று நாடாளுமன்ற மக்களவையில்
தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:-
இரு நிறுவனங்களையும் மத்திய அரசு இணைக்கும். இதனால் வாடிக்கையாளர்களுக்கு
சிறப்பான சேவை அளிக்க முடியும். இந்த நிறுவனங்களுக்கு 4ஜி சேவை
அளிக்கப்படும். இரண்டையும் லாபகரமாக இயக்க உறுதி பூண்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.