
கொரோனா வைரஸ்
புதுடெல்லி:
உலகை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு சீனாவில் இதுவரை 900-க்கும்
மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஆயிரக்கணக்கானோர் வைரசால் பாதிக்கப்பட்டு
ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சீனாவில் வுகான் நகரில் தாக்கத்தொடங்கிய இந்த வைரஸ் தற்போது மேலும் பல
மாகாணங்களுக்கும் பரவி உள்ளது. இதனால் உயிரிழப்புகள் தினந்தோறும்
அதிகரித்து வரும் நிலையில் வைரஸ் பரவுவதை தடுக்க முடியாமல் சீன அரசு திணறி
வருகிறது.
இந்நிலையில் இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவும் அபாயம் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து ஜெர்மனியின் ஹம்போல்ட் பல்கலைக் கழகம் மற்றும் ராபர்ட் கோச்
நிறுவனம் இணைந்து ஆய்வு நடத்தியது. உலகம் முழுவதும் 4 ஆயிரம் விமான
நிலையங்களில் சுமார் 25 ஆயிரம் பேரிடம் வெளிநாட்டிற்கு சென்று வரும்
பயணிகள் மூலம் வைரஸ் பரவுவது குறித்து கணக்கிடப்பட்டது.

இதில் சீனாவுக்கு வெளியே தாய்லாந்து, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள்
உள்பட 20 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் இருப்பதாகவும், அதில்
இந்தியா 17-வது இடத்தில் இருப்பதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
விமானங்கள் மூலம் வெளிநாட்டில் இருந்து வரும் இந்தியர்களில் 0.219 சதவீதம் பேருக்கு இந்த அறிகுறி இருந்ததாக கூறப்படுகிறது.
இந்திய விமான நிலையங்களில் டெல்லி விமான நிலையத்திற்கு வருவோரில் 0.666
சதவீதத்தினரும், மும்பை விமான நிலையத்தில் 0.034 சதவீதத்தினரும், கொல்கத்தா
விமான நிலையத்தில் 0.020 சதவீதத்தினரும் இந்த அறிகுறியுடன் வருவதாக
ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல பெங்களூர், சென்னை, ஐதராபாத் மற்றும் கொச்சி விமான நிலையங்களில்
வரும் பயணிகளில் சிலருக்கு அறிகுறி இருப்பதாக கூறப்பட்டுள்ளது.