உலகில் எத்தனை பேர்களை இந்த நூலகம் எனும் அறிவகங்கள் மேதைகளாக்கி இருக்கின்றன...!
மகான்கள் ஆக்கி இருக்கின்றன...!
நூல்கள் உள்ள இடம் நூலகம் என முன்னோர்கள் பெயர் சூட்டலுக்குப் பிறகு, நாம் யார் பெயர் மாற்றம் செய்திட...?!
'நூலகம்' என்றே இனி பேசுவோம்...
உலகின் மிகப்பெரிய நூலகம் மாஸ்கோவில் உள்ள 'லெனின் நூலகம்' என எனது அறிவகம்- அதாவது நூலகம் சொல்கிறது...
உலகிலேயே பெரிய என்றால்...?
புரிவது போல சொல்வதானால்...
இங்கே அலமாரிகளில் உள்ள நூல்களை வரிசையாக அடுக்கி வைத்தால் 600 கிலோமீட்டருக்கு நீளுமாம்...!
ஏறக்குறைய 150 ஆண்டுகளை நெருங்கப் போகும் இந்நூலகத்தில் தினமும் 16,000 வாசகர்கள் வந்து போகிறார்கள்...!
உலகில் அது...
சரி...
இந்தியாவில் மிகப்பெரிய நூலகம்...?
கன்னிமா....
இல்லை. நீங்கள் நினைப்பது இல்லை...!
கொல்கத்தாவில் உள்ள தேசீய நூலகம் தான் இந்தியாவிலேயே மிகப் பெரிய நூலகம்...!
தமிழகத்தின் பெரிய நூலகம்தான் நீங்கள் நினைத்த அந்த-
கன்னிமாரா நூலகம்...!
கன்னிமாரா நூலகம் எனில் முன்னாள் முதல்வர் திரு CN அண்ணாதுரை அவர்களின் நினைவு வருமே...!
இப்போது சொல்லப்போகும் கன்னிமாரா செய்தியில் முதலில் முன்னாள் பிரதமர் ...!
பிறகுதான் முன்னாள் முதல்வர்...!
நம் நாட்டின் முதல் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு அவர்களும் மரணிக்கும் வரை வாசிக்கும் பழக்கம் கொண்டிருந்தவர்.
மரணப்படுக்கையில் இருந்த நேரத்தில் கூட அவர் படித்துக் கொண்டிருந்த புத்தகம் :
TO KILL A MOCKING BIRD
ஒரு முறை பிரதமராக இருந்தபோது தமிழகம் வந்த நேரு அவர்கள் அப்போது புதிதாக வெளிவந்திருக்கும் பொருளாதார நூல் ஒன்றின் பெயரைச் சொல்லி அதை கேட்கவும் அதிகாரிகள் அங்கிங்கெல்லாம் அலைந்து இறுதியில் கன்னிமாரா நூலகத்தை அணுகினர்.
அப்போதுதான் அந்நூலகத்துக்கு வந்திருந்த அந்நூலை பிரதமருக்கு தர எண்ணிய நூலக உயர்அதிகாரிகளுக்கு அதிர்ச்சி...!
குறிப்பிட்ட அந்நூல் வேறொருவர் படிப்பதற்கு எடுத்துச் சென்றுள்ளது தெரியவர, பதிவேடுகளை ஆராய்ந்தனர். படிக்க எடுத்துச் சென்றவர் யாரென சரிபார்த்த போது தெரிந்தது......
அவர்--
CN. அண்ணாதுரை...!
அண்ணாதுரை அவர்கள் தனது வாழ்நாளின் அதிக நேரத்தை நூல்களோடும் நூலகங்களோடும்- குறிப்பாக கன்னிமாரா நூலகத்தோடும் கழித்தவர்...
புற்று நோய் அறுவை சிகிச்சைக்கு மருத்துவர் நாள் குறித்துவிட்ட போது கூட
அந்த அறுவை சிகிச்சையை ஒருநாள் தள்ளிவைக்கச் சொன்ன அண்ணாதுரை இப்படி சொன்னாராம் :
"நான் ஓர் நூலை படித்துக் கொண்டிருக்கிறேன்... நாளைக்குள் படித்து முடித்து விடுவேன்... அதன் பிறகு நான் இறந்தாலும் கவலை இல்லை..."
ஆம்;
உலகிலுள்ள அனைவரையும் திருப்திப்படுத்த நூல்களாலும் நூலகங்களாலும் மட்டுமே முடியும்...!
நல்ல நண்பர்களைப் பெறுவது போன்று நல்ல நூல்களையும் தேடிப்பெற வேண்டும்.
புத்தகங்கள் இல்லா வீடு சன்னலே இல்லாத அறைக்கு ஒப்பாகும்...
'பழைய சட்டையையே அணிந்து கொண்டாவது புதிய புத்தகங்களை வாங்கிப் படியுங்கள் ...'
என்றார் ஃபிரான்சிஸ் எனும் அறிஞர்.
அறிவுப்பசிக்கு உணவூட்டும் நூலகங்களில் இந்தியாவிலேயே பொது நூலகத்தை முதன் முதலில் தோற்றுவித்து 'நூலகத்தின் தந்தை' என பெயர் பெற்றவர்--
டாக்டர் S R. ரெங்கநாதன் ஆவார்.
நூல்கள் அறிவுப்பசியை போக்கும் அருமருந்து எனக்கூறி முடிக்கும் முன்னால் ஓர் தகவல் :
அபார நினைவாற்றல் கொண்ட வெங்கட்ராமன் எனும் சிறுவன் வீட்டில் கேட்பாரற்றுக் கிடந்த ஒரு நூலை எடுத்து படிக்க ஆரம்பித்தான்.
அந்நூல் அச்சிறுவனுக்கு புத்துணர்வையும் புதிய சிந்தனையையும் உருவாக்கியது...!
'எனது தந்தையைத் தேடி புறப்பட்டு விட்டேன்... வீட்டை விட்டே செல்கிறேன்...'
என துண்டுச்சீட்டு ஒன்றில் எழுதி வைத்து விட்டு வீட்டை விட்டு சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறுகிறான்.....
பிற்காலத்தில் மகானாக உருவாகிய அச்சிறுவன் படித்த நூல் :
சேக்கிழார் எழுதிய 'பெரிய புராணம்'...!
மகானாய் பரிணமித்த அச்சிறுவன் :
ஸ்ரீரமண மகரிஷி...!
++++++++++++++
-Kanchi S Faizudiin
++++++++++++++









