பள்ளியிலிருந்து சுற்றுலா அழைத்துச் செல்லும் போது, உரிய பாதுகாப்பு
விதிகளை பின்பற்ற வேண்டும் என, தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை
அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில், மார்ச்சில் பொதுத்தேர்வுகள்
துவங்குகின்றன. இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளன. பொதுத்தேர்வு
அல்லாத மற்றவகுப்புகளுக்கு, திருப்புதல் தேர்வுகள் நடந்து வருகின்றன.
இதையடுத்து, மூன்றாம் பருவப் பாடங்கள் நடத்தப்பட்டு, ஏப்ரலில் மூன்றாம்
பருவ மற்றும் ஆண்டு இறுதித்தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.
இதற்கு முன், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள், பள்ளிகளில் இருந்து கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
பெரும்பாலான தனியார் பள்ளிகள், மூன்றாம் பருவத் தேர்வுக்கு முன்,
சுற்றுலாவை முடித்துக் கொள்ள அறிவுறுத்தப் பட்டுள்ளது. சுற்றுலா அழைத்துச்
செல்ல விரும்பும் பள்ளிகள், கல்வி அலுவலகங்களில் உரிய அனுமதி பெற வேண்டும்.
மாணவர்களுக்கான பாதுகாப்பு விதிகளை பின்பற்ற வேண்டும் என, தலைமை
ஆசிரியர்களுக்கு, மாவட்ட முதன்மை கல்விஅதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
நீர்நிலைகள் அருகில், மாணவர்களை செல்ல விடக் கூடாது. சுற்றுலா அழைத்து
செல்லும் வாகனங்கள் பாதுகாப்பாக உள்ளதா; வாகனங்கள் அரசின் அனைத்து வித
உரிமங்களையும் பெற்றுள்ளதா; வாகனங்களில் உரிய பாதுகாவலர்கள் உள்ளனரா;
முதலுதவி வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பது போன்ற வசதிகளைப் பார்த்து,
மாணவர்களை, சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். சுற்றுலாவுக்கு முன்,
பெற்றோரின் அனுமதியை பெற வேண்டும். சுற்றுலா செல்லும் பகுதியின்
போலீசுக்கு, உரிய தகவல் அளிக்க வேண்டும். அங்குள்ள சூழல்களை முன்கூட்டியே
தெரிந்துக் கொள்ள வேண்டும் என்றும், விதிகளில் கூறப்பட்டுள்ளது.