பள்ளிகளோ மூடப்பட்டு வெறிச்சோடி இருக்கின்றன.
ஆனால் ஆசிரியர்கள் மட்டும் பள்ளிக்குள் இருக்க வேண்டும் என்று கட்டாயத்தை நாம் எப்படிப் புரிந்து கொள்வது ?
அவர்களுக்கு மட்டும் இந்த நோய் பரவாதா ?
தேர்வு மையங்களாக இருக்கும் பெரிய பள்ளிகளில் காலை முதல் மாலை வரை பொதுத் தேர்விற்கான ஏற்பாடுகளுக்கான பணிகள் செய்த நேரம் போக மற்ற நேரங்களில் ஒரு நிமிடம் கூட வீணாக்காமல் கொரானா குறித்த பல தகவல்களை மட்டுமே பேசுகின்ற சூழல் .
நன்றாகத் தெரிகிறது ஆசிரியர்கள் அனைவருமே மிகப் பெரிய மன உளைச்சலில் உள்ளனர். அது குறித்தே பேசுவது , சீனாவின் பிரச்சனை கட்டுக்குள் வந்தது குறித்தும் , இத்தாலியில் தினமும் கொத்து கொத்தாக இறப்பதும் அமெரிக்காவின் நிலை , இந்தியாவின் எங்கெங்கு இந்த கோவிட் - 19 பரவி எந்த மாநிலங்களில் பரவுதல் வேகம் இப்படியாக பேச்சு உலவுகிறது.
தமிழகத்தில் என்ன தான் நிலைமை , எப்போதும் ஏதாவது அறிவிப்பு கல்வித்துறை சார்ந்து டிவியிலும் வாட்ஸ் அப் குழுக்களிலும் பரவி வருவது ஒரு பதற்றமான சூழலையே உருவாக்கி வருகிறது. குறிப்பாக பெண் ஆசிரியர்கள் மன வேதனை , பயம் , பதற்றம் இப்படி கூடுதலாக இருக்கிறது.
இந்த சூழல் நகரப் பகுதியில் அதிகமாக இருக்கிறது.
கிராமப்புற பகுதியில் சிறு பள்ளிகள் , ஈராசிரியர் பள்ளிகளான தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் சிலரிடம் பேசுகையில் வேறு மாதிரியான பிரச்சனைகளையும் முன் வைக்கின்றனர்.
பஸ்ஸே இல்லாத ஊரில் , காட்டுப் பகுதியில் ஆளில்லாத பகுதியில் இருக்கும் பள்ளிகளில் பெண்கள் நாள் முழுவதும் எத்தனை நேரம் குழந்தைகளே இல்லாமல் பள்ளிக்குள் இருப்பது ? அப்படி என்ன வேலைய நாம் செய்வது ? ஒரு ஆண் ஆசிரியரும் ஒரு பெண் ஆசிரியரும் இருக்கும் குக்கிராமத்து பள்ளியில் இருவர் மட்டும் தனியாக இருந்தால் இந்த ஜனங்க என்ன வேணா பேசறாங்க என்று வேதனைப் படுகிறார் ஒரு பெண் தலைமை ஆசிரியர் .
ஊருக்குள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப முடியாமல் இருப்பதால் வேலைக்கு போக முடியாமல் தவிக்கின்றனராம் பெற்றோர்கள் .ஒரு சில இடங்களில் குழந்தைகளும் காட்டுக்கு வேலைக்குப் போகின்றனராம்.
தமிழகம் முழுக்க 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை மனதில் வைத்து , பல தலைமை ஆசிரியர்கள் தொடர்ந்து சிறப்பு வகுப்புகள் நடத்துகின்ற அவலமும் நடக்கிறது.
அதை விட பயங்கரம் ,சென்னையில் தனியார் பள்ளிகளில் பல அட்டகாசம் , ஒரு முன் மழலையர் பள்ளி ஆசிரியர் என்னை அழைத்து , பத்தாம் வகுப்பு பரவாயில்லை , பிரீ கேஜி பசங்களுக்கு 4 , 4 பேராக வெளியில் தெரியாமல் ஃபோன் போட்டு வர வைத்து பள்ளியில் டெஸ்ட் வைக்கின்றனர். பெற்றோர்களும் அழைத்து வருகின்றனர் எனப் புலம்புகிறார்.
பொது இடங்களில் குழந்தைகள் கூட்டம் கூட்டமாக விளையாடிக் கொண்டு தான் இருக்கின்றனர்.
இதோ ... நாளை நடக்கும் பொதுத் தேர்வு குறித்து இன்னும் யாருக்கும் முடிவு தெரியவில்லை. குழப்பங்களின் எல்லைக்கு ஆசிரியர் , மாணவர் வந்துள்ளனர்.
இவையெல்லாம் நமக்கு உணர்த்துவது ....
கொரோனா பாதிப்பு குறித்து இன்னும் பள்ளி ஆசிரியர்கள் , மாணவர்கள் , துறை , பெற்றோர் எவருக்கும் விழிப்புணர்வு இல்லை என்பது தெளிவாகிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை எந்தத் தடுப்பு நடவடிக்கையும் பெரிதாக இல்லை என்பது நிலைமை சொல்கிறது. அவசரமாக 15 நாட்கள் விடுமுறை அளிக்கும் அளவிற்கு பயங்கரமானது என்றால் அதன் ஆழத்தைப் புரிந்து கொள்ள வேண்டும் .விழிப்புணர்வு போதவில்லை .
உமா








