அரசுப் பள்ளிகளில் மாணவர் கணக்கெடுப்பு... ஊரடங்கில் மூடிய பள்ளிகளை நிரந்தரமாக மூடத் திட்டமா?Student census in government schools ... Plan to permanently close closed schools? - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


அரசுப் பள்ளிகளில் மாணவர் கணக்கெடுப்பு... ஊரடங்கில் மூடிய பள்ளிகளை நிரந்தரமாக மூடத் திட்டமா?Student census in government schools ... Plan to permanently close closed schools?

நன்றி -ஆனந்தவிகடன்-

 அரசுப்பள்ளி மாணவர்கள்
அரசுப் பள்ளிகளில் மாணவர் கணக்கெடுப்பு... ஊரடங்கில் மூடிய பள்ளிகளை நிரந்தரமாக மூடத் திட்டமா?

குறைவான மாணவர் எண்ணிக்கை கொண்ட அரசுப் பள்ளிகள் பள்ளிக்கல்வித்துறை அனுமதியின்றிக் கணக்கெடுக்கப்பட்டு வருகின்றன.

கொரோனா பயத்தில், உயிரைக் காப்பாற்றிக்கொள்ளப் போராடிவரும் இந்த ஊரடங்கு நேரத்திலும், 'அரசுப் பள்ளி மாணவர்களைக் கணக்கெடுக்கும் பணி சத்தமில்லாமல் நடந்து வருகிறது' என்ற செய்தி நம்மை பதைபதைக்க வைத்திருக்கிறது. 'குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்ட பள்ளிகள் மூடப்படும்' என்று வரும் பின்னணித் தகவல்கள்தான் அந்த பதைபதைப்புக்கான காரணம்.

கடந்த வருடம், நாடுமுழுவதும் கடும் சர்ச்சைகளைக் கிளப்பியது 'புதிய தேசிய கல்விக்கொள்கை' வரைவு. பல்வேறு அம்சங்களை உள்ளடக்கமாகக் கொண்டுள்ள இந்தக் கல்விக்கொள்கையில், 'குறைவான மாணவர் எண்ணிக்கையைக் கொண்டுள்ள பள்ளிகள் மூடப்படும்' என்பதும் குறிப்பிடத்தக்க ஓர் அம்சம். அதாவது, 'மாணவர் எண்ணிக்கை குறைவாகக் கொண்ட கிராமப்புற பள்ளிகளை அருகிலுள்ள பள்ளிகளோடு இணைப்போம். அடுத்தகட்டமாக அனைத்துப் பள்ளிகளையும் ஒருங்கிணைந்த விரிவான - தரமான பள்ளி வளாகங்களை குறிப்பிட்ட இடைவெளியில் அமைத்து மாணவர்களுக்குத் தரமான கல்வி கிடைக்க உறுதிசெய்வோம்' என்கிறது மத்திய அரசின், புதிய கல்விக்கொள்கை வரைவு.

கல்வி தனியார்மயம் ஆகிவிட்ட இன்றைய சூழலில், கட்டணம் செலுத்தி படிக்கவைக்க வசதியில்லாத ஏழை - எளிய மக்கள்தான் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் படிக்கவைத்து வருகிறார்கள். இந்தவகையில், குறைந்தளவிலான மாணவர் எண்ணிக்கையைக் கொண்ட பள்ளிகள் கிராமப்புறங்களில் அதிக எண்ணிக்கையில் உள்ளன. இதுகுறித்துப் பேசுகிற கல்வியாளர்கள், ''புதிய கல்விக்கொள்கை வரைவின்படி இப்பள்ளிகளை எல்லாம் மூடிவிட்டால், இங்கு படித்துவரும் ஏழைக் குழந்தைகள் ஒட்டுமொத்தமாகப் படிப்பையே நிறுத்திவிடும் அபாயம் ஏற்பட்டுவிடும்'' எனக் கவலை கொள்கிறார்கள்.
'சில கிலோமீட்டர்களுக்கு அப்பால் உள்ள அரசின் பள்ளி வளாகங்களில், குழந்தைகள் நல்ல தரமான கல்வியைப் பெற முடியும்' என்று அரசு சொல்கிறது. ஆனால், அரசு சொல்வதுபோல், சில கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள பள்ளிகளுக்குக் குழந்தைகளை அனுப்பிவைத்து கல்வி கற்கச் செய்வதெல்லாம் நடைமுறையில் சாத்தியம் இல்லாதது. பல்வேறு இடர்பாடுகளுக்கிடையே கல்வி கற்க வரும் கிராமப்புற ஏழை மக்களின் பிள்ளைகளுக்கு எளிதாகக் கல்வி கற்கும் வாய்ப்பை உருவாக்கித் தரவேண்டுமே தவிர, இருக்கிற வாய்ப்பையும் பிடுங்கிக்கொள்ளும் நிலையை அரசு எடுக்கக்கூடாது'' எனவும் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

இதன் தொடர்ச்சியாகவே, 'கிராமப்புறப் பள்ளிகளை மூடினால், ஏழை மாணவர்களின் கல்வி கானல் நீராகிவிடும்' என்று எதிர்க்கட்சிகளும் பொதுமக்களும் புதிய கல்விக்கொள்கைக்கு எதிராகக் கொதித்தெழுந்தனர். இதையடுத்து நாடு முழுவதும் பொதுமக்கள் முன்னிலையில், புதிய கல்விக் கொள்கை குறித்த கருத்துக்கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டன. இதன்பின்னர், எதிர்ப்புகள் ஓரளவு அடங்கியிருந்தன.இந்நிலையில்தான், 'தமிழகம் முழுக்க உள்ள அரசுப் பள்ளிகளில், 25-க்கும் குறைவாக மாணவர்களைக்கொண்ட பள்ளிகள் மற்றும் அதன் அருகிலுள்ள பள்ளிகள் குறித்த கணக்கெடுப்பைப் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் எடுத்துவருவதாகவும் இப்பணியைத் தடுத்து நிறுத்திட வேண்டும்' எனவும் ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை வைத்துவருகின்றன.
இதுகுறித்துப் பேசிய பெயர் வெளியிட விரும்பாத ஆசிரியர்கள் சிலர், ''கொரோனா பீதியில், ஊரடங்கிக்கிடக்கும் இந்தச் சூழலில், பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டுள்ளன. ஆனால், பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளோ, கல்வி மாவட்ட வாரியாக ஒவ்வொரு பள்ளியிலுள்ள ஆசிரியர் மற்றும் மாணவர்களின் எண்ணிக்கை, பள்ளி அமைந்துள்ள முகவரி மற்றும் அருகாமையில் உள்ள பள்ளி விவரங்கள் அடங்கிய புள்ளிவிவரங்களைச் சேகரித்து துறை சார்ந்து தங்கள் மேலதிகாரிகளுக்கு அனுப்பிவைத்துக் கொண்டிருக்கின்றனர். அதாவது, பள்ளிக்கல்வித் துறையின் அதிகாரபூர்வ அறிவிப்புகள் ஏதுமின்றி இந்தப்பணியைச் சத்தமில்லாமல் செய்துகொண்டிருக்கின்றனர்.

ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் பள்ளி ஆசிரியர்கள் - பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளைக் கொண்ட வாட்ஸ் அப் குரூப்கள் உள்ளன. இவற்றின் அட்மினாக மாவட்டக் கல்வி அதிகாரி மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் உள்ளனர். இந்த வாட்ஸ் அப் குரூப் வழியே, அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களைத் தொடர்புகொண்டு 'தற்போதைய சூழலில், தங்கள் பள்ளியில் பயின்றுவரும் மாணவர் எண்ணிக்கை எவ்வளவு' என்பது உள்ளிட்ட விவரங்களை ரகசியமாகக் கேட்டு வாங்கி வருகின்றனர். பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளின் நேரடிக் கட்டுப்பாட்டில், அதிகாரபூர்வமாக இவ்வேலையைச் செய்யச்சொல்லி பணித்தால், எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்களின் எதிர்ப்பைச சமாளிக்கவேண்டிவரும் என்பதால், உளவுத்துறை மூலமாக மாவட்டம் தோறும் இந்தத் தகவல்களைக் கேட்டுவாங்கி வருகின்றனர்'' என்கிறார்கள் இவர்கள். மேலும், புள்ளிவிவரம் கேட்டு வாட் ஸ் அப் குருப் வழியே வந்த மாதிரிப் படிவம் ஒன்றையும் நமக்கு அனுப்பிவைத்தனர்.

`நூறாண்டுகளில் நாங்கள் சந்திக்காத துயரம் இது!' - மன்னார்குடியில் சிக்கித் தவிக்கும் பாம்பே சர்க்கஸ்

'தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி' பொதுச்செயலாளர் ச.மயில் இவ்விவகாரம் குறித்துப் பேசும்போது, ''உண்மைதான்... ஆனால், இந்த விவரங்களெல்லாம் ஆசிரியர்களிடம் கேட்கப்படவில்லை. மாவட்டக் கல்வி அதிகாரிகளின் வழியேதான் கேட்கப்பட்டிருக்கிறது. அதாவது, 25 மாணவர்களுக்குக் குறைவாக உள்ள ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளைக் கண்டறிந்து, அதுகுறித்த புள்ளிவிவரங்களை உடனடியாக அனுப்பிவைக்குமாறு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் சார்நிலை அலுவலர்களுக்குக் காவல்துறை வழியே உத்தரவிட்டுள்ளனர். இதன்படி, 25 மாணவர்களுக்கும் கீழாக உள்ள பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களைச் சேர்ப்பதற்காக அருகிலுள்ள பள்ளிகளின் விவரம், அப்பள்ளிகள் அமைந்துள்ள தூரம் போன்ற விவரங்களும் அப்படிவத்தில் கேட்கப்பட்டுள்ளன. இதையடுத்து, குறைவான மாணவர் எண்ணிக்கையைக் கொண்ட பள்ளிகள் மூடப்படுமா என்ற அச்சம் ஆசிரியர்கள் - பொதுமக்கள் மத்தியிலும் எழுந்தது.


ச.மயில்

எனவே, இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளிப்படையாக விளக்கம் அளிக்க வேண்டும் என, எங்கள் சங்கம் சார்பாக அறிக்கை வெளியிட்டோம். இதையடுத்து, பள்ளிக்கல்வித்துறையும் 'அப்படி எந்தவொரு உத்தரவையும் நாங்கள் பிறப்பிக்கவில்லை' என்று கூறி மறுத்துள்ளது'' என்றார்.
ஆனால், இப்போதும் பலர் இந்தப் புள்ளிவிவரங்களை மேலிடத்துக்கு வழங்கிவருவதாகக் கூறுகின்றனர் விஷயமறிந்தவர்கள். மேலும்,'' திருநெல்வேலி, வள்ளியூர் கல்வி மாவட்டங்களில் உள்ள மாணவர் மற்றும் பள்ளிகள் குறித்த விவரங்கள் ஏற்கெனவே எடுக்கப்பட்டுவிட்டன'' என்கின்றனர் அவர்கள்.
இதையடுத்து, திருநெல்வேலி கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த முதன்மைக் கல்வி அலுவலரிடம் பேசினோம்... ''இதுபோன்ற புள்ளிவிவரத்தை எடுத்துக்கொடுங்கள் என்று துறை ரீதியாக எனக்கு எந்தவித உத்தரவும் வரவில்லை. நானும் யாருக்கும் இதுவிஷயமாக எந்தப் பணியும் கொடுக்கவில்லை'' என்றார். ஆனால், 'உங்கள் கல்வி மாவட்டத்துக்குள்ளாகவே இதுபோன்ற உத்தரவின்கீழ் பணிகள் நடைபெற்றுள்ளதே, அந்த உத்தரவைப் பிறப்பித்தவர்கள் யார் என்று விசாரித்தீர்களா...' என்ற நமது கேள்விக்கு, அவரிடம் பதில் இல்லை.

இதையடுத்து, பள்ளிக்கல்வித்துறையின் ஆரம்பக் கல்வி இயக்குநர் பழனிசாமியிடம் பேசினோம்... ''இதுபோன்ற புள்ளிவிவரங்கள் எதுவும் கேட்க வேண்டுமானால், தொடக்கக்கல்வி இயக்குநர் என்ற முறையில் நான்தான் கேட்கவேண்டும். இப்போதுவரை அப்படி எந்தஒரு உத்தரவையும் நான் கொடுக்கவில்லை. மேற்கொண்டு விவரங்கள் வேண்டுமானால், நீங்கள் பள்ளிக்கல்வித்துறை இயக்குநரைத்தான் கேட்கவேண்டும்'' என்றார்.
பள்ளிக்கல்வித்துறையின் இயக்குநரின் செல்பேசி எண்ணுக்கு நாம் தொடர்ந்து அழைப்புவிடுத்தும்... நம் அழைப்பை அவர் ஏற்கவில்லை.

இதையடுத்து, பள்ளிக்கல்வித்துறை அமைச்சரான செங்கோட்டையனைத் தொடர்புகொண்டு இவ்விவகாரம் குறித்துக் கேட்டோம்.... ''கொரோனாவிலிருந்து உயிரைத் தற்காத்துக்கொள்ள என்ன செய்யலாம் என்று எல்லோரும் மெனக்கெட்டு வருகிறோம். இந்தச் சூழலில், 8 மாதங்களுக்கு முன்பு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையை யாரோ சிலர் இப்போது உள்நோக்கத்துடன் பரப்பிக்கொண்டிருக்கிறார்கள். காவல்துறை தரப்பில் இதுகுறித்து முழுமையாக விசாரித்துவிட்டேன். எனவே, காவல்துறைதான் இந்தச் சுற்றறிக்கையை அனுப்பி தகவல் சேகரிக்கிறார்கள் என்பது பொய். பள்ளிக்கல்வித் துறை சார்பிலும் இவ்விவகாரம் குறித்து அதிகாரிகளோடு கலந்தாலோசித்துவிட்டேன். எனவே, இதுபோன்ற புள்ளிவிவரங்களைக் கேட்டுவரும் செய்திகளை யாரும் நம்பவேண்டாம்!'' என்றார் உறுதியாக.

அண்மைக்காலமாக, பள்ளிக்கல்வித்துறை சம்பந்தப்பட்ட அறிவிப்புகள் முதலில் வெளிவருவதும் பின்னர் 'அது அதிகாரபூர்வ அறிவிப்பு அல்ல' என்றுகூறி மறுக்கப்படுவதும் தொடர்கதையாகிவருகிறது. இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறையின் முன்னாள் அமைச்சரும் தி.மு.க எம்.எல்.ஏ-வுமான தங்கம் தென்னரசுவிடம் இந்தக் குழப்பநிலைக்கான காரணம் என்னவென்பது குறித்துப் பேசினோம்.
''தி.மு.க ஆட்சிக்காலத்தில், ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்குள் ஒரு தொடக்கப்பள்ளி, 3 கி.மீ சுற்றளவுக்குள் ஒரு நடுநிலைப்பள்ளி, 5 கி.மீ சுற்றளவுக்குள் ஓர் உயர்நிலைப்பள்ளி, 7 கி.மீ சுற்றளவுக்குள் ஒரு மேல்நிலைப் பள்ளி என்று கொள்கை வகுத்துச் செயல்பட்டுவந்தோம். ஆனால், இன்றைய தமிழக ஆட்சியாளர்கள் இந்த அடிப்படையையே தகர்த்துவருகிறார்கள்.
அதாவது மாணவர்கள் எண்ணிக்கையைக் காரணம்காட்டி ஏற்கெனவே தமிழ்நாட்டில் பல பள்ளிகளை மூடிவிட்டார்கள். நீலகிரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் எத்தனை பள்ளிகள் மூடப்பட்டுள்ளன என்பது குறித்து ஏற்கெனவே ஆதாரங்களோடு நான் எடுத்துச் சொல்லியிருக்கிறேன். ஆனால், 'நாங்கள் பள்ளிகளை மூடவில்லை; இணைக்கிறோம்' என்று அரசுத் தரப்பில் பதில் சொல்கிறார்கள். 'மூடிவிட்டோம்' என்று சொன்னால், மக்களின் கோபத்துக்கு ஆளாகிவிடுவோம் என்பதால், 'இணைக்கிறோம்' என்று சொல்லி ஏமாற்றுகிறார்கள்.

இதைத்தான் புதிய தேசியக் கல்விக்கொள்கை, 'ஸ்கூல் காம்பஸ்' என்று சொல்கிறது. இதனால், தொடக்கக் கல்விக்கே 4 கி.மீ நடந்துசென்றுதான் குழந்தைகள் படிக்கவேண்டிய சூழல் ஏற்பட்டுவிடும். ஆனால், இப்படியொரு சூழல் உருவாவதற்கான வேலைகளைத்தான் தமிழக அரசு செய்துவருகிறது. முதலில், துறையிலிருந்து ஓர் அறிவிப்பை வெளியிடுவார்கள் பின்னர் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியபிறகு பின்வாங்கிவிடுவார்கள். கடந்த வருடம் முழுவதும் இதுதானே நடந்தது!
பா.ஜ.க ஆட்சி செய்து வருகிற மாநிலங்களில்கூட மத்திய அரசின், புதிய கல்விக்கொள்கை, இன்னமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஆனால், தமிழ்நாட்டில்தான் புதிய கல்விக்கொள்கையின் ஷரத்துகளை இப்போதே நடைமுறைப்படுத்த முனைகிறார்கள். 5, 8-ம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு என்பதுவும் பள்ளிகளை இணைக்கிறோம் என்று சொல்வதும்கூட அந்த ஷரத்துகளின் அடிப்படைதான். அதாவது 'ராஜாவை விடவும் ராஜாவுக்கு விசுவாசமாக இருக்கிறார்கள்' இன்றைய அ.தி.மு.க ஆட்சியாளர்கள்!'' என்றார் காட்டமாக.
இந்நிலையில், புதிய தேசியக் கல்விக் கொள்கையின் சாதக - பாதகங்கள் மற்றும் தமிழக கல்விச் சூழல் குறித்து கல்வியாளரும் பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான பிரின்ஸ் கஜேந்திரபாபு விடம் பேசியபோது, ''நிதி ஆயோக் எனப்படும் திட்டக்குழுதான், திட்டங்களை வகுப்பதற்கான ஆலோசனைகளை மத்திய அரசுக்குக் கொடுத்துவருகிறது.

இந்தவகையில், 'கல்வித்துறையில், போதுமான மாணவர் எண்ணிக்கை இல்லாத பள்ளிகளை நிர்வகித்துவருவது பொருளாதார ரீதியாக அரசுக்கு இழப்பை ஏற்படுத்தும். மேலும் குறைந்தளவிலான எண்ணிக்கை கொண்ட அம்மாணவர்களுக்குப் போதுமான வசதிகளையும் அரசால் செய்துகொடுக்கமுடியாது' என்ற விவரங்களை அரசுக்குக் கொடுத்துவருகிறது. இதன்படியே, குறைந்தளவிலான மாணவர்கள் கொண்ட பள்ளிகள் மூடப்பட்டு, அம்மாணவர்களை அருகிலுள்ள பள்ளிகளில் படிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. நிர்வாக ரீதியிலாக லாப நோக்கை மட்டுமே கருத்திற்கொண்டு நிதி ஆயோக் வழங்கும் இந்த ஆலோசனையால், இந்நாட்டின் ஏழை எளிய மக்களின் கல்வி ஆதாரம் அடியோடு பாதிக்கப்படும்.
அதாவது வட இந்திய மாநிலங்களில், இந்த நிதி ஆயோக்கின் வழிகாட்டுதல்படி பல பள்ளிகள் மூடப்பட்டுவிட்டன. இதன்பிறகு இம்மாணவர்கள், நெடுந்தொலைவு சென்று படிக்கமுடியாமல் படிப்பையே விட்டுவிட்டார்கள். அதாவது 'இடைநிற்றல்' சதவிகிதம் அதிகரித்துவிட்டது.
அதேசமயம் 'புதிய தேசியக் கல்விக்கொள்கை' வரைவில் 'பள்ளி வளாகம்' என்ற அம்சம் குறிப்பிடப்படுகிறது. 2 அல்லது 3 கி.மீ சுற்றளவுக்குள் அமைக்கப்பட்டிருக்கும் இந்தப் பள்ளி வளாகத்தில் ஆசிரியர், ஆய்வகம், விளையாட்டு என மாணவர்களுக்குத் தேவையான அத்தனை வசதிகளும் செய்யப்பட்டிருக்கும். எனவே, குறைந்த மாணவர் எண்ணிக்கை கொண்ட பள்ளிகளை மூடிவிட்டு அந்த மாணவர்களை எல்லாம் இந்தப் பள்ளி வளாகத்தில் இணைத்துவிடுவார்கள்.

இதுதவிர, போதுமான மாணவர்கள் இருந்தும் ஆசிரியர் வசதி இல்லாமல் இருக்கக்கூடிய பள்ளிகளுக்கு இந்த வளாகத்திலிருந்து ஆசிரியர்கள் சென்று பாடம் எடுக்கும் வசதியையும் செய்துதருவதாகச் சொல்கிறார்கள். இதை, 'வளங்களைப் பகிர்ந்துகொள்ளுதல்' என்கிறார்கள். நிர்வாக ரீதியில் இது எல்லாமே சரி. ஆனால், கல்விச் சூழலில் இந்த நிர்வாகக் கணக்கை கருத்திற்கொண்டு செயல்படுவது சரியாக இருக்காது.
ஏனெனில், பள்ளி என்பது பக்கத்தில் இருந்தால் மட்டுமே குழந்தைகள் படிப்பதற்கான சூழல் அமையும். அவ்வாறில்லாமல், தொலைதூரத்திலுள்ள பள்ளி வளாகத்துக்குச் சென்றால்தான் கல்வி கற்கவே முடியும் என்ற நிலை ஏற்பட்டால், அது குழந்தைகளின் கல்வி கற்கும் ஆர்வத்தையே சிதைத்துவிடும். இதுதான் நடைமுறை எதார்த்தம். பணக்கார வீட்டுக் குழந்தைகளுக்கு தங்கள் வீடருகே உள்ளே பள்ளியில் படிக்கிற வாய்ப்பு ஏற்படும்; பண வசதியில்லா குழந்தை, நெடுந்தொலைவு சென்றுதான் ஆரம்பக் கல்வியையே கற்கவேண்டும் என்றால், அது எந்தவிதத்தில் நியாயம்? ஆக, சமுதாயத்தில் உள்ள ஏற்றத் தாழ்வுகளைத்தான் கல்வி நிலையங்களும் நியாயப்படுத்துகிறது அல்லது பிரதிபலிக்கிறது என்றுதானே அர்த்தம்!
சர் சி.வி.ராமனில் தொடங்கி, கணிதமேதை சீனுவாச ராமானுஜம், இன்றைக்கு இருக்கக்கூடிய மயில்சாமி அண்ணாதுரை, இஸ்ரோ சிவன் மற்றும் கொரோனாவை எதிர்த்துப் போராடிக்கொண்டிருக்கிற மருத்துவர்கள், அதிகாரிகள் அனைவரும் அரசுப் பள்ளிகளில் படித்துவந்தவர்கள்தான். ஆனால், கடந்த 25 ஆண்டுகளாக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துபோனது ஏன்? அரசுப் பள்ளியைச் சுற்றி நர்சரி பள்ளிகளைத் திறந்தது யார்?

*அரசே, கல்வியை வழங்கும்போதுதான் நம் உரிமைகளைக் கேட்டுப் பெறமுடியும். மாறாக, கல்வி என்பது தனியாரின் கைகளுக்குப் போய்விட்டால், என் உரிமையை எப்படி கேட்டுப்பெற முடியும்? ஆனால், தனியார் பள்ளிகளில் அரசே, 25 சதவிகித மாணவர்களுக்குக் கட்டணம் செலுத்திப் படிக்கவைக்கிறது என்றால், இதை எப்படிப் புரிந்துகொள்வதென்றே தெரியவில்லையே. சரி... இந்த 25 சதவிகித மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் கொடுத்துவிட்டீர்கள்; சத்துணவு யார் கொடுப்பார்கள்? அப்படியே சத்துணவையும் கொடுத்துவிடுவோம் என்று சொன்னால்கூட, வசதியுள்ள குழந்தைகள் மத்தியில் இந்தப் பிள்ளைகள் மட்டும் சத்துணவு சாப்பிட்டால் அது குழந்தைகள் மத்தியில் எந்த மாதிரியான உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தும்?
கண்ணியமான வாழ்க்கையை வாழ்வதற்கான சூழலை குழந்தைப்பருவத்திலேயே ஏற்படுத்துவதுதான் பள்ளிகளின் பிரதான நோக்கமாக இருக்கவேண்டும். வெறுமனே எழுத்துகளை மட்டுமே கற்றுக்கொடுப்பதற்கான இடம் அல்ல அது. பல்வேறு ஏற்றத் தாழ்வுகளைக் கொண்ட இந்தச் சமூகத்திலிருந்து அனைத்துக் குழந்தைகளும் சமமான முறையில் கல்வியைப் பெற்று, வளரும்போதுதான் எதிர்காலத்தில் சமத்துவத்தை நோக்கிய வாழ்க்கைக்கான ஓர் உத்தரவாதத்தைத் தரமுடியும். இதைத்தான் இந்திய அரசிலமைப்புச் சட்டத்தின் 'சமத்துவக் கோட்பாடு' பற்றிய பிரிவு 14 சொல்கிறது*


*இதுமட்டுமல்ல... குடிமகன்களுக்கான அடிப்படை வாழ்வாதாரம் - உரிமையைப் பற்றிக் குறிப்பிடும்போதும், 'ஒரு தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் இருப்பவர், எந்தெந்த வசதிகள் கொண்ட பள்ளியில் தன் குழந்தையைச் சேர்ப்பாரோ, அந்தப் பள்ளியில் அனைத்துக் குடிமகன்களின் குழந்தைகளும் படிக்கின்ற சூழலை ஏற்படுத்தவேண்டும் என்று சொல்கிறது. எனவே, இந்த அடிப்படை உரிமையை நான் கேட்பது எப்படிக் குற்றமாகும்? அப்படிக் குற்றம் என்றுசொன்னால், அது சட்டத்தின்பால் உள்ள குற்றமா? அல்லது சாதிய ஏற்றத்தாழ்வுகளில் உள்ள குற்றமா? இல்லை பொருளாதார ரீதியாக நான் நலிவுற்றவன் என்பதற்காக இந்த உரிமையை நான் கேட்கக்கூடாதா?
எனவே, சமூக ஏற்றத்தாழ்வுகளை நியாயப்படுத்துவது போன்ற சூழலை ஏற்படுத்தும் நிதி ஆயோக்கின் வழிமுறை, நிர்வாக ரீதியிலான லாபத்தை மட்டுமே கணக்கில்கொண்டது. அது கல்வி ரீதியிலான பார்வைக்கு உகந்தது அல்ல என்பதை அனைத்து மாநில அரசுகளுமே புரிந்துகொள்ள வேண்டும்.
ஒரு பள்ளியில் என்னென்ன வசதிகள் எல்லாம் இருக்கவேண்டும் என்று அரசு சொல்கிறதோ, அந்த வசதிகளையெல்லாம் அரசுப் பள்ளிகளில் உருவாக்கி, எல்லா மாணவர்களையும் அரசுப் பள்ளிகளை நோக்கி வரச்செய்யவேண்டுமே தவிர, குறைந்த எண்ணிக்கையில் படித்துக்கொண்டிருக்கிற அரசுப் பள்ளி மாணவர்களையும் தனியார் பள்ளிகளை நோக்கியும் அல்லது இடைநிற்றலை நோக்கியும் துரத்தியடிக்கும் வேலையை அரசே செய்யக்கூடாது.

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், ஐ.ஏ.எஸ் ஆபீஸர்ஸ் வீட்டுப் பிள்ளையும் படிக்கிறது; அந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அலுவலகத்திலுள்ள டபேதார் வீட்டுப் பிள்ளையும் படிக்கிறது என்றால், அங்கே அனைத்து வசதிகளும் செய்யப்பட்டிருக்கிறது என்றுதானே பொருள். இதேபோல், இங்குள்ள அரசு பள்ளிகளையும் வசதி நிறைந்ததாக மாற்றி, தனியார் பள்ளி மாணவர்களையும் அரசுப் பள்ளி நோக்கி வரச்செய்ய வழிவகை செய்யப்பட முடியாதா என்ன?*
*சுதந்திர இந்தியாவில், பொருளாதார வசதி இல்லை; எனவே கல்வியை அடிப்படை உரிமையாக ஆக்கமுடியாது' என்று சொல்லி மறுக்கப்பட்டபோதும்கூட, தமிழ்நாட்டில் மூடப்பட்டுக்கிடந்த பள்ளிகளையெல்லாம் திறந்தார் பெருந்தலைவர் காமராஜர்.வசதி படைத்தோர் நிதியுதவி செய்யவேண்டும் எனக் கேட்டுக் கேட்டு கையேந்தி, கிராமங்கள்தோறும் புதிய பள்ளிக்கூடங்களைத் திறந்தார்.
'அனைவருக்கும் கல்வியறிவு கிடைக்கப்பெற வேண்டும்' என்ற பேரார்வத்தோடு, குழந்தைகளுக்கு மதிய உணவையும் கொடுத்து பள்ளிக்கு வரவழைத்தார். காரணம்....சாதிய ரீதியிலான சமூக ஏற்றத்தாழ்வுகளைச் சொல்லிச்சொல்லியே ஆயிரமாயிரம் ஆண்டுகளாக கல்வி மறுக்கப்பட்டுவந்த வரலாற்றைக் கொண்டது நம் சமூகம். மீண்டும் காரணங்களைச் சொல்லிக் கற்காலத்துக்கு அழைத்துச்சென்றுவிடாதீர்கள்!'' என்றார் அழுத்தமான வார்த்தைகளில்*

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H