லாக்டௌன்
நெகிழ்ச்சிக் கவிதை!
-----------------------------------------------
எம்பள்ளிப்
பிள்ளைகளா...
எப்படியய்யா
இருக்கீங்க?
கண்ணுக்குள்ள
ஒங்க மொகம்
வந்து..வந்து...
போகுதய்யா!
உங்க கன்னங்கிள்ளி கொஞ்சத்தானே..
நீளுதய்யா!
ஏதேதோ
நடந்துடிச்சி..
ஒரு மாசங்
கடந்துடிச்சி!
கொரோனா
ஒன்னு வந்ததால..
ஒன்னு ரெண்டு..
நின்னுடிச்சி!
மொகம் முழுக்க
புன்சிரிப்ப மாட்டிகிட்டு
வருவீங்க!
பிறந்தநாளு வந்ததுன்னா
மிட்டாயெல்லாந்
தருவீங்க!
லீவு வுட்டா
குதிப்பீங்க
சந்தோசத்துல
மிதப்பீங்க!
போதுமாய்யா..
இன்னுங் கொஞ்சம்
வேணுமாய்யா?
பள்ளிக்கொடம்
பக்கங்கீன பத்திரமா
போனீங்களா
நீங்க?
நாம வச்ச
செடியெல்லாம்
வளர்ந்துடிச்சா
ஓங்க?
பாத்துப் பாத்து
வளர்த்தோமே..
தண்ணீ அள்ளியள்ளி
வார்த்தோமே?
ஆடுகீடு
பூந்திடிச்சோ..
அத்தனையும்
மேஞ்சிடிச்சோ?
மத்தியான
வேளையிலே
சத்துணவு திங்கயிலே
காக்கா குருவி வந்திடுமே!
நாம வைக்கும்
சாதங்களைத்
தின்னுடுமே!
நம்மள..
காணாம
கரையுதாய்யா?
கண்ணீரில்
உறையுதாய்யா?
உங்க
வீட்டுப் பக்கம்
வந்ததுன்னா
சோறு தண்ணி
வச்சிடுங்க!
சீக்கிரமா
ஸ்கூல் தொறக்கும்
சாதம் வைப்போம்..
சொல்லிடுங்க!
புத்தகத்த
தொறந்தீங்களா?
இல்ல...
டீவியிலேயே
விழுந்தீங்களா?
படிங்கப்பா..
கல்வி தீபம்
அணையாமப்
பிடிங்கப்பா!
அப்பனாத்தா
சொல்லுறத
எப்பவுமே
கேளுங்கய்யா!
எங்களுக்கு
முன்ன உள்ள
சாமியே
அவுங்கதானய்யா!
வாழ்க்கையில
தடையெல்லாம்
அப்ப அப்ப
வந்து போகும்!
கவனமா
எதிர்த்து நின்னா
வந்த தடை
நொந்து போகும்..!
கண்ணுங்களா..
கண்ணுங்களா..
என் செல்லக்
கண்ணுங்களா..!
கொரோனா காலம்
ஓடிப்
போகும்!
நாமும்..
கூடிப் பேசும்
காலங் கூடும்!








