கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் , இதை
கட்டுப்படுத்துவது மிக பெரிய சவாலாகவே அரசுக்கு உள்ளது. இதனால் மேலும் பரவ
கூடாது என்பதற்காக பொது போக்குவரத்து சேவைகளை அரசு நிறுத்தியது.
பல வாரங்களாக பயணிகள் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்ட பின்னர், ரயில்வே நாளை
முதல் குறைந்த அளவிலான ரயில் சேவைகளை மீண்டும் தொடங்க உள்ளது. மே 12 முதல்
பயணிகள் ரயில் நடவடிக்கைகளை படிப்படியாக மறு தொடக்கம் செய்வதாக ரயில்வே
அமைச்சகம் நேற்று அறிவித்தது.
ஆரம்பத்தில் 30 ரயில்களுடன் புது டெல்லி ரயில் நிலையத்திலிருந்து நாட்டின்
மற்ற 15 நகரங்களை இணைக்கும் சிறப்பு ரயில்களாக இயக்கப்படும் என
கூறியுள்ளது. பயணிகள் ரயில்கள் 45 நாட்களுக்கு மேலாக நிறுத்தி
வைக்கப்பட்டுள்ளன, இது இந்தியன் ரயில்வேயின் 167 ஆண்டு வரலாற்றில் முதல்
முறையாகும்.
கொரோனா பராமரிப்பு மையங்களுக்கு 20,000 ரயில் பெட்டிகளை ஒதுக்கிய பின்னர்
உள்ள பெட்டிகளின் அடிப்படையில் புதிய ரயில்களில் மேலும் சிறப்பு சேவைகளை
இந்திய ரயில்வே தொடங்கும். மேலும் தினமும் 300 ரயில்கள் புலம்
பெயர்ந்தோருக்காக ஷ்ராமிக் ஸ்பெஷல் ரயில்களாக இயக்கப்படும் என்று ரயில்வே
அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பயணிகள் முககவசம் அணிந்து புறப்படும்போது சோதனையிடலுக்கு உட்படுத்தப்படுவது
கட்டாயமாக இருக்கும். மேலும் அறிகுறியற்ற பயணிகள் மட்டுமே ரயிலில் ஏற
அனுமதிக்கப்படுவார்கள். இந்த ரயில்கள் புது டெல்லி நிலையத்திலிருந்து
திப்ருகர், அகர்தலா, ஹவுரா, பாட்னா, பிலாஸ்பூர், ராஞ்சி, புவனேஸ்வர்,
செகந்திராபாத், பெங்களூரு, சென்னை, திருவனந்தபுரம், மட்கான், மும்பை
சென்ட்ரல், அகமதாபாத் மற்றும் ஜம்மு தாவி ஆகியவற்றை இணைக்கும் சிறப்பு
ரயில்களாக இயக்கப்படும்.
இந்த ரயில்களில் முன்பதிவு செய்வதற்கான முன்பதிவு இன்று மாலை 4 மணிக்கு
தொடங்கும். ஐ.ஆர்.சி.டி.சி வலைத்தளம் மூலம் ஆன்லைனில் மட்டுமே டிக்கெட்
முன்பதிவு செய்யப்படும். ரயில் நிலையங்களில் முன்பதிவு கவுண்டர்கள்
அனைத்தும் மூடப்படும்.
இந்த பயணிகள் ரயில்களின் கட்டணம் ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு சமமாக
இருக்கும். மேலும் அனைத்து பெட்டிகளும் ஏசியுடன் இருக்கும். மேலும் குறைந்த
அளவிலான நிறுத்தங்களில் மட்டுமே ரயில் நின்று செல்லும்.
ஏசி மூன்று அடுக்கு பெட்டிகளில் 52 பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள். ஏசி இரு
அடுக்கு பெட்டிகளில், 48 பயணிகள் சமூக இடைவெளியை பின்பற்றி
அனுமதிக்கப்படுவார்கள் என ரயில்வே அமைச்சகத்தின் நிர்வாக இயக்குநர் ராஜேஷ்
தத் பாஜ்பாய் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.







