ஒரு குட்டிக்கதை சொல்வார்கள். ஒரு தவளையைப் பிடித்து வந்து ஆராய்ச்சி செய்தார்களாம். முதலில் ஒரு காலை வெட்டி விட்டு ஜம்ப் என்ற போது அந்தத் தவளை குதித்ததாம். மற்றொரு காலையும் வெட்டி விட்டு மீண்டும் ஜம்ப் என்றார்களாம். அப்போதும் அந்தத் தவளை சிறிது கஷ்டப்பட்டு குதித்ததாம். மூன்றாவது காலையும் வெட்டி விட்டு ஜம்ப் என்ற போதும் இருந்த ஒரு காலைப் பயன் படுத்தி அந்தத் தவளை குதித்தது. நான்காவது காலையும் வெட்டி விட்டு ஜம்ப் என்ற போது அந்தத் தவளை பேசாமல் இருந்தது. உடனே அதை வைத்து ஆராய்ச்சி செய்தவர்கள் தவளையின் நான்கு கால்களையும் வெட்டி விட்டால் அதற்குக் காது கேட்காது என்று எழுதினார்களாம்.
அந்தக் கதை எதற்காகச் சொல்லப்பட்டதோ, தெரியவில்லை. ஆனால் நாம் கவனிக்க வேண்டியது மூன்று கால்கள் போன நிலையிலும் தன்னிடமிருந்த ஒரே காலைப் பயன் படுத்தி ஜம்ப் பண்ணிய தவளையின் மன உறுதியைத் தான். எதை வேண்டுமானாலும் இழந்து விட்டால் திரும்பப் பெற்று விடலாம் ஆனால் நமது தன்னம்பிக்கையை மட்டும் இழந்து விடக்கூடாது. அது ஒன்று போதும் அதன் மூலம் எதையும் பெற்று விடலாம். அத்தகைய மன உறுதியும் தன்னம்பிக்கையும் உடைய ஒருவர் தான் "ஹெலன் கெல்லர்".
பிறந்த போது நல்ல ஆரோக்கியத்துடன் காணப்பட்ட ஹெலன் கெல்லர் தனது ஒன்றரை வயதில் ஏற்பட்ட கடுமையான காய்ச்சல் காரணமாக கண் பார்வை, பேசும் சக்தி, கேட்கும் திறன் ஆகிய மூன்றையும் இழந்து விட்டார். அதற்காக அவர் மனம் உடைந்து போய் விடவில்லை. ஹெலன் கெல்லரின் பெற்றோர் அப்போது மிகவும் புகழ் பெற்றவராக விளங்கிய அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்லிடம் யோசனை கேட்டார்கள். அவரின் ஆலோசனையை ஏற்ற அவர்கள் சல்லிவன் என்னும் ஆசிரியையிடம் ஹெலனை படிக்க அனுப்பினார்கள்.
சல்லிவன் போல் நல்ல ஆசிரியை கிடைக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஹெலனுக்கு வாழ்க்கையில் புதுவசந்தம் வீசத் தொடங்கியது அதன் பிறகு தான். பார்வையற்றோருக்கான பிரெயில் முறையில் தனது கல்வியைத் தொடர்ந்த ஹெலன் கெல்லர் இடைவிடாத பயிற்சியின் காரணமாக தனது இழந்த பேச்சாற்றலைத் திரும்பப் பெற்றார். மற்றவர்களைப் போல் பேச்சாற்றல் வந்து விட்டதே என்று அவர் விட்டு விடவில்லை. தனது பேச்சாற்றலை வளர்த்துக் கொண்டு புகழ்பெற்ற பேச்சாளராக வளரத் தொடங்கினார்.
கல்லூரியில் படித்துப் பட்டமும் பெற்றார். காது கேட்காத, கண் பார்வையற்றவர் ஒருவர் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றது அதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. தன் தகுதிகளை உயர்த்திக் கொண்ட அவர் சிறந்த எழுத்தாளராகவும் புகழ்பெறத் தொடங்கினார். முழு ஆரோக்கியமான உடலை வைத்துக் கொண்டு உழைக்க மறுக்கும் சோம்பேறிகளுக்கு மத்தியில் அவர் முழு நேரமும் உழைத்தார். ஊனமுற்றவர்களின் நலனைக் கருதி ஒரு அமைப்பை ஏற்படுத்தினார். ஹெலன் கெல்லர் எழுதிய புத்தகங்கள் மற்றும் அவரது பேச்சுக்கள் அடங்கிய ஒலி நாடாக்கள் உலகம் எங்கும் பரவலாக விற்பனையானது.
அவரிடம் ஒரு பேட்டியின்போது உங்கள் வெற்றி ரகசியம் என்ன? என்று கேட்டார்கள். அதற்கு அவர் அளித்த பதில் தான் அனைவருக்கும் உந்து சக்தியாக விளங்கும் பதில்.
“இந்த உலகத்தை என்னால் பார்க்க முடியவில்லை என்பது ஒரு குறை தான் ஆனால் அந்தக் குறையை நான் போக்கிக் கொள்ள வேண்டுமானால் இந்த உலகமே என்னைத் திரும்பிப் பார்க்க வேண்டும் என்று விரும்பினேன் அதற்காகவே என் நேரத்தைச் செலவிட்டேன்”
ஊனமாகப் பிறந்தபோதும் அதை சற்றும் நினைக்காமல் உலகப் புகழ்பெற்ற அந்தப் பெண்ணின் அசாத்தியமான மன வலிமையை என்னவென்று சொல்வது?
வாழ்வில் வெற்றிபெற ஊனம் ஒரு தடையல்ல. இலக்கை நோக்கிய பயணத்தில் எதுவும் தடையல்ல.
பகிர்வு








