
கள்ளக்குறிச்சி; 'தமிழகத்தில் கல்வித் துறைக்கு அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் உயர்கல்வி பயில்வோர் எண்ணிக்கை, 50 சதவீதமாக உயர்ந்துள்ளது' என, முதல்வர் இ.பி.எஸ்., கூறினார்.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில், நேற்று நடந்த கொரோனா தடுப்பு பணி மற்றும் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில், முதல்வர், இ.பி.எஸ்., பேசியதாவது:உலக நாடுகள் அனைத்தும் அச்சத்தில் உறைந்துள்ள இத்தருணத்தில், தமிழகத்திலும் கொரோனா பரவி, இயல்பு நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் எப்போது பாதிக்கப்பட்டாலும், நேசக்கரம் நீட்டும் அரசு இது.விவசாயிகள் விரும்பும் கன்றுகளை ஈன்று தரும் வகையில், 48 கோடி ரூபாய் செலவில், ஊட்டியில் மிக நவீன முறையில் கால்நடை விந்தணு பிரிக்கும் ஆராய்ச்சி நிலையம் உருவாக்கப்படும்.இவ்வாறு, முதல்வர் பேசினார்.பின், அவர் அளித்த பேட்டி;தமிழகத்தில், சுய உதவிக் குழுக்களுக்கு அதிகளவில் கடன் வழங்கப்பட்டு வருகிறது. கல்வித் துறைக்கு அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், கல்வியில் புரட்சி ஏற்பட்டு, ஏற்கனவே, 32 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது உயர்கல்வி படிப்போரின் எண்ணிக்கை, 50 சதவீதமாக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையம் மூலம், ஏற்கனவே, 23 லட்சம் டன் கொள்முதல் செய்த நிலையில், தற்போது, 28 லட்சம் டன் கொள்முதல் செய்யப்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.நிகழ்ச்சியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் வழங்கினார்.







